நடுப்பக்கக் கட்டுரைகள்

எல்லாரும் வாக்களிக்க என்ன வழி?

பவித்ரா நந்தகுமார்

அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், பெரிய அளவில் வன்முறைச் சம்பவங்களோ சட்டம் - ஒழுங்கு பாதிப்புகளோ இன்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இதற்குப் பின்னால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அசுரத்தனமான உழைப்பும், அர்ப்பணிப்பும், கடமையுணர்வும் இருக்கிறது.
இந்தப் பணிக்காகக் கிடைக்கும் சன்மானம் என்பதெல்லாம் அவர்களுக்கு முக்கியமில்லை. நம் நாட்டுக்கு செய்யும் மிகப்பெரிய சேவையாகவே கருதி செய்கின்றனர். தமிழகத்தில் முதன் முறையாக இந்த தேர்தலில் ஒரு மணி நேரம் கூடுதலாக நேரம் ஒதுக்கப்பட்டது. மாலை 6 மணி முதல் 7 மணி வரை கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க வசதி செய்யப்பட்டது.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இரண்டு சுகாதார ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வாக்களிக்க வரும் ஒவ்வொருவருக்கும் கையுறை கொடுத்து, முகக்கவசம் அணிய வற்புறுத்தி வாக்களிக்கச் சொன்னது இம்முறை புதியது. கரோனாவை முன்னிட்டு கடும் நெருக்கடிகளை வாக்குச்சாவடியில் பணிபுரிந்த ஊழியர்கள் எதிர்கொண்டனர்.
இந்த கோடையில் 15 மணி நேரத்துக்கும் மேல் இடையறாது முகக்கவசம் அணிந்து கொண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டபடியும் பணிபுரிந்தது மிகப்பெரிய சவால். அவர்கள் அனைவரையும் பாராட்டும் அதே நேரத்தில் இத்தனை ஏற்பாடுகள் செய்திருந்தும், இம்முறை வாக்குப்பதிவு ஏன் குறைந்தது என்பது முக்கிய கேள்வியாக இருக்கிறது.
கிராமப்புறப்பகுதிகளில் வாக்குப்பதிவு அதிகமாகவும், நகர்ப்புறப் பகுதிகளில் குறைவாகவும் இருந்தது. தமிழகத்தில் 72.78% வாக்குப்பதிவு என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. கிராமங்களைக் காட்டிலும் சென்னை போன்ற பெருநகரங்களில் வாக்குப்பதிவு குறைந்த அளவில் பதிவானது பலருக்கும் பெரிய ஏமாற்றம்.
உலகின் பல நாடுகளில் தொடக்கத்தில் ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது. பெண்களுக்கு அது மறுக்கப்பட்டது. பெண்கள் தொடர்ந்து வாக்குரிமைக்காகப் போராடிய பின்னரே வாக்களிக்கும் உரிமையைப் பெற்றனர். அதனால்தான் இன்று வாக்குரிமையின் அருமையை உணர்ந்த பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.
கட்சிகளின் பிரசாரத்தைத் தாண்டி தேர்தல் ஆணையமும் 100% வாக்குப்பதிவுக்காக ஊடகங்களில் விளம்பரம் செய்து ஊக்குவித்தபடியே இருந்தது. மெத்தப் படித்தவர்களே வாக்களிப்பதைத் தவிர்த்திருப்பது வருத்தமாக உள்ளது. கரோனா நோய்த்தொற்று ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும் வேறு காரணங்களும் இருக்கக்கூடும்.
தேர்தலில் வாக்களிப்பது நம் ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமை. அந்த கடமையை சிலர் ஆற்றத் தவறுவதால்தான், 100% வாக்குப்பதிவு என்கிற தேர்தல் ஆணையத்தின் இலக்கு, கனவாகவே போய்விடுகிறது.
நம் நாட்டில் தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், ஆஸ்திரேலியா, பிரேசில் போன்ற நாடுகளில் ஒருவர் வாக்களிக்கவில்லை என்றால் நிச்சயம் அபராதம் செலுத்த வேண்டும். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நம்மை ஆளப் போவது யார், கல்வி, வேலைவாய்ப்பு, வருமானம், அத்தியாவசிய பொருட்களின் விலை என மக்களின் வாழ்க்கையையே தீர்மானிக்கப் போகும் நபர் யார் என்பதை முடிவு செய்யும் முக்கிய திருநாள் தேர்தல்.
நம் நாட்டிலும் வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க வேண்டும் என்னும் கருத்தை பலர் முன்வைக்கின்றனர். உலக அளவில் 22 நாடுகளில் வாக்களிப்பது கட்டாயம் என அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. வாக்களிக்கவில்லையெனில் இந்நாடுகளில் கடுமையான நெருக்கடிகளை உருவாக்குகின்றனர். ஆர்ஜெண்டீனா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், சிங்கப்பூர், பிரேசில், பொலிவியா உள்ளிட்ட 22 நாடுகளில் கட்டாய வாக்குப்பதிவு அமலில் உள்ளது.
1893-ஆம் ஆண்டு பெல்ஜியம் நாட்டில்தான் முதன் முறையாகக் கட்டாய வாக்குப்பதிவு அமல்படுத்தப்பட்டது. அங்கு வாக்களிக்க தவறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஒருவர் தொடர்ந்து நான்கு முறை வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணித்தால் அவருடைய வாக்களார் அடையாள அட்டை ரத்து செய்யப்படும்.
ஆஸ்திரேலியாவில் 1924-ஆம் ஆண்டு முதல் கட்டாய வாக்குப்பதிவு நடைமுறையில் உள்ளது. தேர்தலில் வாக்களிக்காதவர்கள், ஏன் வாக்களிக்கவில்லை என்பதற்கான தகுந்த காரணத்தை முன்வைக்காத பட்சத்தில் 1,500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அதனால் இங்கு 90% மேல்தான் வாக்குகள் பதிவாகும்.
அடுத்ததாக பிரேசில் நாட்டில் வாக்களிக்கத் தவறினால் 100 ரூபாய் மட்டுமே அபராதம். ஆனால், வாக்களிக்கத் தவறுவோர் கடவுச்சீட்டு பெறுவதிலும் வங்கிக்கடன் பெறுவதிலும் நெருக்கடிகளை சந்திப்பர்.
ஈக்வடார் நாட்டில் ஒருவர் வாக்களிக்கத் தவறினால் அவரின் அடிப்படை ஊதியத்திலிருந்து 10% அபராதம் செலுத்த நேரிடும். பெரு நாட்டில் 500 ரூபாய் முதல் 1,800 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். சிங்கப்பூரிலும் கட்டாய வாக்குப்பதிவு நடைமுறையில் உள்ளது. அங்கு, வாக்களிக்கத் தவறுவோரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். அவர்கள் உரிய காரணம் தெரிவித்தால் மீண்டும் இணைக்கப்படும். உரிய காரணம் தெரிவிக்கவில்லையெனில் 3,500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
இந்த கட்டாய வாக்குப்பதிவுக்கு எதிரான குரல்களும் ஆங்காங்கே ஒலிக்கத்தான் செய்கின்றன. வாக்களிக்க வேண்டுமென கட்டாயப்படுத்துவது மனித உரிமைக்கு எதிரானது என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. இந்த கருத்தை ஆதரிக்கும் விதமாக, பிரேசிலில் 2016-ஆம் ஆண்டு நடந்த மேயர் தேர்தலில் 41% வாக்காளர்கள் வெற்றுச்சீட்டையே வாக்குப் பெட்டி யில் இட்டனர் என்பது வரலாறு.
இன்றைய இளைஞர்களில் சிலர் வாக்களிக்கும் எண்ணமே இல்லாமல் இருக்கின்றனர். அவர்கள் சொல்லும் காரணங்களைக் கேட்டால் நமக்குத் தலை சுற்றுகிறது. "என்னால் இந்த கோடை வெயிலில் வரிசையில் நின்றெல்லாம் வாக்களிக்க முடியாது' என்று சிலரும், "கிடைத்த ஒரு நாள் விடுப்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டுகளிக்காமல் வாக்களிக்கப் போக வேண்டுமா' என்று சிலரும், "நான் ஒருவன் வாக்களிக்கவில்லையென்றால் என்ன ஆகிவிடும்' என்று சிலரும் காரணங்கள் சொல்கிறார்கள்.
இன்னும் சில குடும்பங்கள் இருக்கின்றன. தேர்தல் நாளன்றுதான் வண்டி ஏற்பாடு செய்து சுற்றுலா கிளம்புவார்கள். அவர்களைப் பொருத்தவரை அன்றைய நாளை அவர்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சுயநலமாக யோசிக்கின்றனர். எத்தனையோ நாட்கள் நமக்காக இரவு பகல் பாராது எல்லைகளில் காவல் காத்து வருகின்றனர் நம் ராணுவ வீரர்கள். அவர்களைப் போல் இல்லையென்றாலும் ஒரு நாள் நாட்டுக்காக கடமையாற்றுவதில் என்ன பெரிதாக இடர்ப்பாடு வந்து விட போகிறது?
இன்னும் சிலர் "ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன' என்ற மனோபாவத்துடன், அரசியல் கட்சிகளின் மீது இருக்கும் கோபத்தால் வாக்களிக்கச் செல்வதில்லை. இது போன்ற நபர்களின் கோபத்தை வெளிக்காட்டும் பொருட்டே தேர்தல் ஆணையம் "யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை' என்ற கருத்தின் அடிப்படையில் "நோட்டா'வை அறிமுகப்படுத்தியது. ஆனாலும், "நோட்டா'வைப் பதிவு செய்ய ஏன் கால்கடுக்க நிற்க வேண்டும் என்பதே பலரது வாதம்.
பெருநகரங்களில் வசிப்போர் தேர்தலில் வாக்களிப்பதற்காக நெடுந்தொலைவிலுள்ள சொந்த ஊருக்குச் செல்வதில் சில சிக்கல்கள் இருக்கலாம். பணி நிமித்தம் வெளியூர்களில் இருப்பவர்களுக்கு தேர்தல் ஆணையம் மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பது அவர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. சொந்த ஊர் சென்று வர பொருளாதார வசதி இல்லாத நிலையில் இருப்பவர்களை நாம் எப்படி குறை கூற முடியும்?
எண்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பப்பட்டால் அவர்களின் வீட்டிற்கே சென்று தபால் வாக்குகளைப் பெறும் வசதியை இம்முறை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியிருந்தது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. வாக்களிக்க விருப்பமிருந்தாலும் நம்மை யார் வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்வார்கள் என்று தவித்துக்கொண்டிருந்த முதியவர்களுக்கு இந்த தபால் வாக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
மாற்றுத் திறனாளிகள்கூட சிரமத்தைப் பொருட்படுத்தாமல் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றிட ஆர்வத்துடன் வந்து வாக்களிக்கும்போது சோம்பேறித்தனத்தால் கடமையாற்றத் தவறுபவர்கள் வெட்கப்பட வேண்டும். ஈரோட்டில் ஒரு முதியவர், இறந்துவிட்ட தனது மனைவிக்கு இறுதிச்சடங்கு செய்துவிட்டு வாக்குச்சாவடிக்கு சென்று தன் வாக்கை பதிவு செய்த நெகிழ்ச்சியான சம்பவமும் நடந்துள்ளது.
ஆதார் எண்ணைத் தெரிவித்து கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது போல் ஆதார் எண்ணைக் கொடுத்து வீட்டிலிருந்தே இணைய வழியில் எளிதாக வாக்களிக்கும் வசதியை இனிவரும் நாட்களில் ஏற்படுத்தித் தந்தால் தேர்தல் ஆணையத்தின் கனவான 100% வாக்குப்பதிவை நிச்சயம் எட்டலாம்!

கட்டுரையாளர்: எழுத்தாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT