நடுப்பக்கக் கட்டுரைகள்

இல்லாமல் போகுமோ இரக்கம்?

கிருங்கை சேதுபதி


நேற்று நள்ளிரவுக்குக் கொஞ்சம் முந்திய பொழுதில், என் சக பேராசிரியையிடமிருந்து கைப்பேசி அழைப்பு. என்னவோ ஏதோ என்று பதறி விசாரிக்க அதே பதற்றத்துடன் அவரும் கேட்டார், "உங்களுக்கு என்ன ஆச்சு?' அதேதொனியில் திரும்பவும் கேட்டேன். அவர் "உங்கள் பெயரில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அவசர உதவி தேவை. இதற்குப் பதில் தருக' என்று. பணம் வேண்டிப் பெறுவதற்கான விண்ணப்பமும் இருக்கலாம்' என்று சொன்ன அவர், "ஏதாவது சிக்கலா? உதவி தேவையா? இது உண்மையா?' என்று கேள்விமேல் கேள்வி கேட்டபோது திகைத்துப்போனேன்.

இந்த நள்ளிரவிலும் ஆபத்து என்று கருதி உதவ முன்வந்த அவர்தம் பேருள்ளத்துக்கு நன்றி தெரிவித்தேன். "அப்படியான மின்னஞ்சல் ஏதும் யாருக்கும் நான் அனுப்பவில்லையே' என்றேன். "உங்கள் கட்செவிப் பகுதியில் அந்தச் செய்தியைப் படமாக்கி அனுப்பியிருக்கிறேன்' என்றார். அவர் அஞ்சியபடி எனக்கு ஏதும் இல்லை என்பதில் அவர் சற்றே நிம்மதி அடைந்திருந்தது அவர் குரலில் தெரிந்தது.

பேசியவாறே, என் கட்செவிப் புலனத்தை இயக்கினேன். ஆம். எனது பெயரை, மிகச்சரியாகத் தலைப்பெழுத்துடன் சேர்த்து மிகத் தெளிவாக, ஒரு போலி (எனக்குத்தான் அது போலி} அந்த மின்னஞ்சலை இயக்கியவருக்கோ, அதுதான் அசல்) மின்னஞ்சலின்கீழ் அந்தச் செய்தி வந்திருந்தது.  நல்லவேளை அவர் இச்செய்தியைத் தெரிவித்ததோடு, இந்த வஞ்சக வலையில் வீழாமலும், பிறர் வீழ்ந்துவிடாதிருக்கவும் உதவியிருக்கிறார். இதற்காகக் கூடுதல் நன்றியையும் அவருக்குத் தெரியப்படுத்தினேன். 

"நான் அவன் இல்லை' என்று சம்பந்தப்பட்டவர்களுக்கெல்லாம் அந்த நொடியே அனுப்ப வேண்டிய கட்டாயம் நேர, அனுப்பத் தொடங்கியபோது, இதேபோல், அவர்கள் பெயர்களிலும் அப்படியானதொரு செய்திகள், தொடர்புடைய பலருக்கும் அனுப்பப்பட்டிருப்பது அறிந்தேன்.

"இதன் பின்னணியில் யாரோ, ஏதோ பலன் பெறப் போகிறார்கள் என்பது மட்டும் உறுதியாக இருக்கும்' என்று ஒரு நண்பர் சொன்னார். "அவர்கள் பெறும் பலனுக்காக, நம்மீது அன்புள்ள சிலர் கைப்பொருள் இழக்கப்போகிறார்கள். அவர்களால் நண்பர்களுக்கும் நமக்கும் இடையில் மனவருத்தங்கள் வந்துவிடுமே' என்ற பொது அச்சம், அந்த இரவு முழுக்க என்னை விடவில்லை.

இது நவீனத் திருட்டு என்றாலும், இதன் பின்னணியில் இன்னொரு மனித அவலம் அரங்கேறுவது குறித்த கவலைதான் என் மனத்தைக் குடைந்தது. இரக்கம் மனிதத்தின் உன்னத குணம். அதைப் பயன்படுத்தி, இரக்கப்படுவோரை, ஏமாளியாக்கிப் பணம் பண்ணும் கூட்டம் காலந்தோறும் வந்துகொண்டேதான் இருக்கிறது என்பதும் என் நினைவுக்குள் வந்தது.

முன்பெல்லாம், பெருநகரமொன்றின் பேருந்து நிலையத்தில் நம் ஊருக்குப் போகிற பேருந்தில் ஏறி அமர்ந்திருக்கும்போதில், சில சம்பவங்கள் நடக்கும். அவற்றில் ஒரு நிகழ்வை இந்த இடத்தில் சொல்வது சரியாக இருக்கும்.

ஜன்னல் ஓரத்தில் இடம்பிடித்துத் தனித்திருக்கும் நம் முகத்தில் அப்பாவி என்ற முகவிலாசம் பொருந்தியிருப்பதைக் கண்டுபிடித்து, நம் அருகில் வந்து, "அமர இடம் கேட்பதுபோல' ஒருவர் நனிநாகரிகத்தோடு வருவார். தோற்றமும் அப்படி, முகபாவமும் அப்படியே இருக்கும்.

 "தாராளமாக' இடம் கொடுத்து அவரை அமரவைத்த பிறகு, நட்புணர்வுடன் ஒரு புன்னகை பூப்பார். பதிலுக்கு நாமும் செய்வோம். சற்றுநேரத்தில், நம் பயணத்தின் இலக்கான ஊர்ப் பெயர் கேட்டு, "அங்கேதானே போகிறீர்கள்?' என்பார். நாம் உண்மையெனில் "ஆம்' என்றும் இல்லையெனில் நாம் செல்கிற ஊர்ப்பெயர் சொல்லிவைப்போம். "எனக்கும் அந்த ஊர்க்குப் பக்கத்தில்தான்' என்று மிகச் சரியான ஓர் ஊர்ப்பெயர் சொல்லி, நட்புக்கோள்படலத்தை விரிப்பார்.

"அங்கிருந்துதான் வந்தேன். புதிதாக டிரஸ் எடுக்க. எதிர்பாராதவிதமாக ஊர் திரும்பணும். தப்பா நினைக்கலேன்னா, ஒரு உதவி' என்று இழுத்து நிறுத்துவார். நம் முகம் பார்ப்பார். இடையிடையே சில முகஸ்துதியுடனான ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தி நம்மை நனிநாகரிகராக்கிவிடுவார்.

உங்களைப் பார்த்தா நல்லவராத் தெரியறீங்க. படித்தவர்போல. அடுத்தவர் கஷ்டத்தை உணரக்கூடியவங்க என்றெல்லாம் அந்தச் சூழலுக்கேற்ற புகழ்மொழிகளை அள்ளித் தெளித்து, பின்னர் விஷயத்துக்கு வருவார். "இப்ப என் கைவசம் பேருந்துக்குக் கூடப் பணம் இல்லை, அதனால...' என்று இழுக்கிறபோதே, பிச்சை கேட்கப்போகிறார் என்று சுதாகரித்துக் கொண்டு, "சாரி என்னிடம்...' என்று பதில் சொல்லத் தொடங்குமுன்பே, அவர் முந்திக் கொண்டு கேட்பார். "ஐயையோ, நான் பணம் கொடுங்கன்னு பிச்சை கேட்கல்லே. நான் அந்த மாதிரி கேட்கிறவன் இல்லை. அப்படியான குடும்பத்தில் பிறந்தவன் இல்லை' என்றெல்லாம் தன்னிலை விளக்கம் அளித்துவிட்டு, "ஒரு உதவிதான் கேட்கிறேன்' என்று சொல்லி நிறுத்தி, நம்மை இரக்கத்தின் விளிம்புக்கே தயார்படுத்திவிட்டுப் பின்னர் அமைதியாவார்.

பரிதாபமான முகத்தோடு, சில நேரம் கண்கள் கலங்க ஓரிரு சொட்டுகள் கண்ணீர்கூட வந்து நம்மைக் கலங்க வைத்துவிடும். "என்ன உதவி?' என்று வாய்விட்டுக் கேட்காவிட்டாலும், அதை நம் கண்களில் படித்துவிட்ட அவர் குனிந்து தனது பயணப்பையைத் திறப்பார். அதில் புத்தம் புதிதாய், பேண்ட், சட்டைத் துணி செட் இருக்கும். அதை நம்மிடம் கொடுப்பார். நாம் தயங்குவது அறிந்து, "ஆசை ஆசையாய் வாங்கினேன், சார். குடுத்து வைக்கல. அவசரத்தேவைக்கு இதை வைத்துக்கொண்டு ஒரு உதவி' பணம் என்று சொல்லாமல் சொல்வார்.

நாம் கேட்கத் தயாராக இருக்கும் பக்குவம் அறிந்து இந்த உடையின் தரம், தயாரித்த கம்பெனி, அதில் தொடர்புடைய நண்பர் மிகவும் குறைந்த விலைக்குத் தந்த கதை அனைத்தையும் உருக்கமாகச் சொல்லி, இதை வைத்துக் கொண்டு பணம் கேட்கிறார் என்பது நமக்குத் தெரிந்துவிடும். அதற்குள் அந்தத் துணியைப் பரபரவென்று கசக்குவார். கிழிக்க முயற்சி செய்து முடியவில்லை என்பதையெல்லாம் சாகசமாக்கிக் காட்டுவார். 
நாமும் நாகரிகமாக, "தேவையில்லை' என்று சொல்லிவிட்டால், தப்பாக எடுத்துக்கொள்ளமாட்டார். "எனக்குத் தெரியும் சார். இந்த விலைக்கு  வாங்க உங்களிடம் பணம் இருக்காது. அதனால, அதைக் குறைச்சு..' என்று மனிதாபிமானத்தோடு பேரம் பேசுவார். "கடைசியாக, உங்களால எவ்வளவு கொடுக்க முடியும்?' என்கிற அளவுக்கு "இறங்கி' வருவார்.

"கொடுக்க மாட்டார்' என்கிற நம்பிக்கையிலோ, "அவருக்கு உதவலாம்' என்கிற எண்ணத்திலோ நாமும் ஒப்புக்காக அவர் சொன்னதில்  சரிபாதி குறைத்தோ, அதனினும் கூடவோ,  சொல்லிவிட்டால் போதும். இயன்றவரை இரக்கத்தைச் சம்பாதிக்கச் சொற்களை வாரியிறைத்து, கடைசியில் ஒரு தொகையை வாங்கிக்கொண்டு தன் சரக்கை நம் கைகளில் தந்துவிட்டு, காலில் விழாத குறையாக நன்றி சொல்வார். 

"சார் காலையிலேயிருந்து ஒரு வாய் தண்ணிகூடக் குடிக்கல. இந்த இடத்தைப் பார்த்துக்குங்க. ஒரு டீ குடிச்சிட்டு வர்றேன். உங்களுக்கு ஏதாவது வாங்கணுமா, சார்?' என்று வாஞ்சையோடு கேட்பார். நாம் நாகரிகமாக மறுப்பதற்குள் "ஏதாவது பழம் வாங்கிட்டுவர்றேன். உங்களுக்கு ஒன்னும் சுகர் இல்லையே' என்று கரிசனமும் காட்டிவிட்டு இறங்கிப் போய் விடுவார்.

அவர் பேருந்துப் படியிறங்கும் நேரத்தில், அதே வாசல் பக்கமோ, அடுத்த பகுதியிலோ, பயணப் பைகளோடு ஓரிருவர் இறங்குவர். அவர்கள் அவரது தொழில் சகாக்கள் என்பது பின்புதான் தெரியும். உதவிக்கு உதவியாய், பரஸ்பரம் நடந்துகொண்ட திருப்தியில், அந்தப் பேருந்தில் வேறு இருக்கைகளில் இருப்போரைப் பெருமிதத்தோடு பார்க்கிறபோதுதான் புரியும்.  "நாம் ஏமாற்றப்பட்டோம்' என்று.  பேருந்து புறப்படும்போது , பின் இருக்கையிலோ, பக்கத்து இருக்கையிலோ இருப்பவர் நம் இருக்கைக்கு அருகில் அமர வருவார். "சார், இந்த சீட்டுக்கு ஒருத்தர்..' என்று இழுத்து முடிப்பதற்குள் அவர் சொல்வார். "நிச்சயமா வரமாட்டார் சார். அவர் இன்னொரு பஸ்ஸூல உங்களை மாதிரி ஒருத்தருக்குப் பக்கத்திலே போய் உட்கார்ந்து உங்ககிட்ட பேசின வசனத்தைப் பேசிட்டு இருப்பார். இது ஒரு மோசடித்தனம். இன்றைக்கு நீங்க ஏமாந்துட்டீங்க' என்பார்.

"ஏமாற்றப்பட்டோம்' என்கிற வருத்தத்தைவிட, மெய்யாகவே வருத்தப்படும் ஒருவருக்கு உதவவேண்டும் என்ற இரக்கக் குணத்தை இல்லாமல் செய்துவிடுகிற அவலத்தையல்லவா இப்போக்கு உருவாக்கிவிடும் என்ற வருத்தம்தான் அதிகம் எழுகிறது. இதுபோல் எந்த வகையிலேனும் இரக்கத்தைச் சுரக்க வைத்து இயன்ற வரையில், ஏமாற்றிப் பணம் பறிக்க, எத்தனையோ சூது, வாதுகள்! 

நண்பர்களே! பணம் பண்ண ஆயிரம் வழிகள் உண்டு. ஆனால், பண்பாட்டுத் தளத்தில் இரக்கம் என்கிற உன்னத அன்பின் வாசலை அடைக்கும் கயமையைப் படித்தவர்களே செய்வதுதான் கொடுமையாக இருக்கிறது. எச்சரிக்கை உணர்வுக்குக் காரணமாக, இரக்கம் என்பதே இல்லாமல் அழியுமோ என்பதுதான் பெருங்கவலை. 

உதவுகிற குணத்தை உருக்குலைக்கும் இத்தகு நாசகாரச் செயலுக்கு நடுவே, மனிதம் தழைக்க இரக்கம் என்னும் ஈரப்பண்பு வற்றிவிடாமல் இருக்க வேண்டும்.
 
கட்டுரையாளர்: பேராசிரியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநங்கையைத் தாக்கியவா் கைது

ஆண்டுக்கு இரு பொதுத் தோ்வுகள்: பருவத் தோ்வு முறை அறிமுகம் ரத்து -சிபிஎஸ்இக்கு மத்திய அரசு உத்தரவு

கீழ்பவானி வாய்க்காலை ஒட்டியுள்ள கிணறுகளில் மின் இணைப்புகள் துண்டிப்பு

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வலியுறுத்தல்

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் தென்னைநாா் தரைவிரிப்பு

SCROLL FOR NEXT