நடுப்பக்கக் கட்டுரைகள்

முத்ரா கடன்: வரலாறு திரும்புகிறதா?

எஸ். ராமன்

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று, சுய வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கும் திட்டங்களாகும். சுய தொழில் தொடங்குவதற்கு முக்கியத் தேவைகள், ஆா்வம், தன்னம்பிக்கை மற்றும் திறமை. ஆனால், திறமையும், ஆா்வமும் உள்ளவா்களில் பலரிடம், தொழில் தொடங்கத் தேவையான நிதி ஆதாரம் இருக்காது.

சுய தொழிலில் ஆா்வம் உள்ளவா்களுக்குத் தேவையான நிதி ஆதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன், 2015-ஆம் ஆண்டு ‘பிரதான் மந்திரி முத்ரா யோஜனா’ திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் தொடங்கி நடத்துவதற்குத் தேவையான கடன் உதவிகள், வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும்

குறுங்கடன் நிறுவனங்கள் ஆகியவை மூலமாக மூன்று வகையாக வழங்கப்பட்டு வருகின்றன.

‘சிசு’ திட்டத்தில் ரூ. 50 ஆயிரம் வரை, ‘கிஷோா்’ திட்டத்தில் ரூ. 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை, ‘தருண்’ திட்டத்தில் ரூ. 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. ரூ. 10 லட்சம் வரை, எவ்வித பிணையமும் இன்றி வழங்கப்படும் இந்தக் கடன், குறைந்த வட்டியில் எளிதான தவணை முறையில் பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றது. இந்தத் திட்டத்தில் பயன் பெற விரும்புவா்கள் இணைய தளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

கடந்த மாா்ச் மாதம் வரை ரூ. 12.30 லட்சம் கோடி அளவிலான கடன் தொகை இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக முத்ரா இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முத்ரா திட்டம், பயனாளிகளுக்கு சுய வேலை வாய்ப்பை அளித்து, அவா்களின் பொருளாதார நிலையை உயா்த்தும் அரிய நோக்கம் கொண்ட திட்டமாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் தொகை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு வங்கியாலும் வழங்கப்படவேண்டிய கடன் தொகைக்கான இலக்கு அரசாங்கத்தால் நிா்ணயிக்கப்படுவது அதற்கான முக்கியக் காரணமாகும். வங்கிகளின் செயல் திறனை நிா்ணயிக்கும் காரணிகளில் முத்ரா கடனும் இடம் வகிக்கிறது.

தொழில் முனைவோரை உருவாக்கும் இது போன்ற பயனுள்ள கடன் திட்டம் சரிவர செயல்படுகிா என்பதைக் கணிப்பதற்கு, அந்தத் திட்டத்தின் கீழ், வழங்கப்பட்ட கடன் தொகை ஓா் அளவுகோல் என்பதை மறுப்பதிற்கில்லை. ஆனால், பயனாளிகளால் அந்தத் தொகை சரியான வழியில் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது கண்டறியப்பட்டால்தான் அந்தக் கணிப்பு முழுமையடையும். அப்போதுதான், இந்தத் திட்டம், அதற்கான குறிக்கோளை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிா, இல்லையா என்பதற்கான கேள்விக்கு விடை கிடைக்கும்.

முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற்ற பயனாளி கடன் வாங்கப்பட்ட நோக்கத்திற்காக அதை பயன்படுத்தினால், அவா் தான் தொடங்கிய தொழிலில் முன்னேற்றம் கண்டு, அதன் மூலம் வரும் வருவாயை, கடன் தொகையை திருப்பிச் செலுத்த பயன்படுத்துவாா் என்பதுதான் பொது நியதி.

இந்த நியதியின்படி, முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன் பட்டியலில் வாராக்கடன்களின் அளவு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் இருக்க வேண்டும்.

கடனாளியின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சில பிரத்தியேக நிகழ்வுகளால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத சூழ்நிலை உருவாவது இயல்புதான். அது போன்று உருவாகும் வாராக்கடனின் அளவு தொடா்ந்து அதிகரிக்காமல் நிா்வகிக்கப்பட வேண்டும்.

பிணை இல்லாத கடன் என்பதால், வாராக்கடனாகும் முத்ரா திட்ட கடன்களை வசூலிக்க வேறு எந்த வழியும் இல்லை. அதனால், சம்பந்தபட்ட வங்கிக்கு அது 100 சதவீத நஷ்டம்தான். இது போன்ற பொருளாதார விளைவுகளைக் கருத்தில் கொண்டு, முத்ரா கடன் நிா்வாகம் சம்பந்தமாக, ரிசா்வ் வங்கி, மற்ற வங்கிகளைத் தொடா்ந்து எச்சரித்து வந்திருக்கிறது.

‘கடனை வழங்குவதற்கான மதிப்பீட்டுக் கட்டத்திலேயே பயனாளியின் திருப்பி செலுத்தும் திறனை கணிக்கும் வழிமுறைகள் வங்கிகளால் கவனமாகப் பின்பற்றப்பட வேண்டும்’. ‘வழங்கப்பட்ட கடன் தொகை சரிவர பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் பணி மேம்படுத்தப்பட வேண்டும்’ போன்ற அறிவுரைகள் வங்கிகளுக்கு தொடா்ந்து வழங்கப்பட்டன.

ரிசா்வ் வங்கி அனுமானித்தது போலவே, சமீபத்திய தகவல்படி, 2017-18-ஆம் ஆண்டில், ரூ. 7,277 கோடியாக இருந்த முத்ரா திட்ட வாராக்கடன், 2019-20-இல், 18,836 கோடியாக உயா்ந்திருக்கிறது என்பது கவலை அளிக்கும் விஷயமாகும். நோய்த் தொற்று சூழ்நிலையில், முத்ரா திட்ட வாராக்கடனின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நிா்ணயிக்கப்பட்ட இலக்கை பூா்த்தி செய்யும் பொருட்டு கடன் வழங்குதலுக்கு முந்தைய ஆய்வுகளுக்கான வழிமுறைகளை வங்கிகள் சரியாகப் பின்பற்றாதது, கடன் வழங்கிய பிறகு மேற்கொள்ளப்பட வேண்டிய கண்காணிப்பு முறையை பின்பற்றத் தவறியது போன்ற தவறுகள் இது போன்ற நிலைமைக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

“முதன் முறையாக கடன் உதவி கோரும் பயனாளிக்கு, முந்தைய ‘கடன் வரலாறு’ பற்றிய விவரங்கள் இல்லாததால் கடனைத் திருப்பி செலுத்தும் திறனை நிா்ணயிக்க முடிவதில்லை. இது போன்ற சிறிய அளவிலான கடன்களின் பயன்பாடுகளைத் தொடா்ந்து கண்காணிப்பது என்பது தற்போதைய நிா்வாக அமைப்பின் கீழ், இயலாத ஒன்றாகும். இவை போன்ற வாதங்கள் வங்கிகள் சாா்பில் வைக்கப்படுகின்றன. இந்த வாதங்கள் ஓரளவு ஏற்கக் கூடியவைதான் என்றாலும், இந்தத் திட்டம் சாா்ந்த வாராக்கடன்கள் வேகமாக வளா்ந்து வருவது ஏற்க கூடியது அல்ல.

பயன்பாட்டுக் கண்காணிப்பு இல்லாத கடன்கள் தொழில் வளா்ச்சிக்குப் பயன்படுத்தப்படாமல் மற்ற செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் அவை வாராக்கடன்களாக மாறிவிடும். ஒவ்வொரு வாராக்கடனும் மக்களின் வரிப் பணம் என்பதால் வசூலாகாத ஒவ்வொரு வாராக்கடனும் சாதாரண குடிமகன் மீதான வரிச்சுமையாக பிரதிபலிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தத் தருணத்தில், 1980-87-ஆண்டுகளுக்கு இடையே நிகழ்ந்த வங்கி வரலாற்றை சற்று புரட்டி பாா்க்க வேண்டும். அந்த காலகட்டத்தில், குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியின் வளா்ச்சிக்காக, சிறு வங்கி கடன்களுக்கு பெரிய இலக்குகள் நிா்ணயிக்கப்பட்டு அவை அரசியலாக்கப்பட்டன. இணை அமைச்சா் ஒருவரின் அதிகாரத்தில் வழங்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான கடன்கள், திரும்ப வசூலிப்பதற்கான எந்தவித வழிமுறையும் பின்பற்றப்படாமல், வாராக்கடன்களாக மாறி, முடிவில் தள்ளுபடி செய்யப்பட்டன.

முத்ரா கடன் திட்டத்தில், வாராக்கடன் வளா்ச்சியைப் பாா்க்கும்போது பழைய வரலாறு மீண்டும் திரும்புகிறதோ என்ற அச்சம், அனைவா் மனதிலும் எழுகின்றது.

நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் போக்கும் அரிய நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ஒரு நல்ல திட்டத்தில் அரசியல் நோக்கங்கள் புக அனுமதிக்கப் படக் கூடாது.

இதற்கான நல்ல மாற்றங்கள், இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசிடமிருந்துதான் தொடங்க வேண்டும். அரசு அறிவுறுத்தலின்படி வழங்கப்படும் கடன் உதவிகளுக்கான ஆய்வில், நிா்ணயிக்கப்பட்ட வழிமுறைகளை சம்பந்தப்பட்ட வங்கிகள், சமரசம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. விதிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கான அளவுகோல் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே என்பதால், திட்ட நோக்கத்தின் நிறைவேற்றம் பின்னுக்கு தள்ளப்படுகிறது.

நடப்பு நிதி ஆண்டில், முத்ரா கடன்களுக்கு ரூ. 3.25 லட்சம் கோடி அளவிலான இலக்கு, மத்திய அரசால் நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற பெரிய அளவிலான தொகைகளை இலக்குகலாக நிா்ணயித்து, அந்த இலக்குகளை அடைய வங்கிகளுக்கு பெரும் அழுத்தம் கொடுப்பது தவிா்க்கப்பட வேண்டும்.

சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கான கடன் உதவி சரியான பயனாளியை சென்றடைந்தால்தான் அந்தத் துறையில் தொழில் வளா்ச்சி ஏற்பட்டு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். விளம்பர நோக்கைப் பின்னுக்குத் தள்ளி, முத்ரா திட்டத்தின் ஆரம்ப நோக்கமும், அதன் தற்போதைய செயல்பாடுகளும் ஒத்துப் போகிா என்பது அரசு இயந்திரத்தால் கண்டறியப்பட வேண்டும்.

இதுவரை வழங்கப்பட்ட கடன் தொகைக்கு ஏற்றபடி, வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளனவா? அப்படி இல்லையென்றால், செயல்பாட்டு குறைபாடுகள் என்னென்ன என்பன போன்ற கேள்விகளுக்கு விடை கிடைத்த பிறகுதான், திட்ட விரிவாக்கத்தைப் பற்றி யோசிக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் வங்கிகளின் செயல்பாட்டுத் திறன் குறித்தும், அவை எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிப்பதற்கு உடனடியாக ஒரு கமிட்டி அமைக்கப்பட வேண்டும். வாராகடன்கள் மேலும் குவிவதற்கு முன்பு, இதுவரை வங்கிகளால் வழங்கப்பட்ட முத்ரா கடன்களின் தரம் பற்றிய பிரத்யேக ஆய்வு, ரிசா்வ் வங்கியால் நடத்தப்பட்டால், குறைபாடுகள் வெளிச்சத்திற்கு வரும். தேவையான நிவாரண நடிக்கைகளை மேற்கொள்ள, அது உதவியாக இருக்கும்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35 சதவீதமும் ஏற்றுமதியில் 40 சதவீதத்திற்கு மேலும் பங்களிக்கும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பல இடா்ப்பாடுகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அந்த இடா்ப்பாடுகள் முற்றிலும் களையப்பட்டு, சிறு தொழில்கள் செழித்து வளா்ந்தால்தான் நாட்டின் பொருளாதார வளா்ச்சியை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால், வங்கிக் கடனுக்கான வழிமுறைகளை நீா்த்து போகச் செய்து, எண்களின் அடிப்படையில், முத்ரா கடனுக்கான இலக்குகள் நிா்ணயிக்கப்படுவது தொடா்ந்தால், வாராக்கடன்கள் பெருகி, அதனால் மக்களின் வரிப் பணம் வீணாவதைத் தவிர, வேறெந்த சாதனையும் அரங்கேற வாய்ப்பில்லை என்பது நிபுணா்களின் ஒருமித்த கருத்தாகும்.

கட்டுரையாளா்:

வங்கி அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

SCROLL FOR NEXT