நடுப்பக்கக் கட்டுரைகள்

பாழ் செய்யும் உட்பகை

டி.எஸ். தியாகராசன்

 சுவாமி சிவானந்தரின் அருள் மொழி "ஒருவர் பிறர்க்கு தன்னல மறுப்போடு செய்கின்ற உதவியும் தொண்டும் இறைவனுக்குப் படைக்கப்படுகின்ற நிவேதனப் பொருள்களாக மாறுகின்றன'. இதன் வழி நாட்டில் அவ்வப்போது ஏற்படும் இயற்கைப் பேரிடர் காலங்களில் தனி நபர்கள், பொதுநல அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எல்லாம், பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் பணியில் ஈடுபடுகின்றார்கள். நாடும், ஏடும் அவர்களைப் பாராட்டுகின்றன.
 ஆனால், அண்மைக் காலமாக அயல் நாடுகளில் இருந்து பெருமளவு நிதி பெறும் தொண்டு நிறுவனங்கள் தடம் மாறிப் பயணிக்கின்றன என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மத்திய அரசு பல்வேறு அமைச்சகங்கள் (என்.ஐ.யூ) வழி தீவிர புலன் விசாரணை நடத்தியது. விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கண்டறியப்பட்டன.
 2010-இல் கொண்டு வரப்பட்டது வெளிநாட்டு நன்கொடை ஒழுங்கு முறை சட்டம். இச்சட்டத்தில் 2011, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த மாதம் (செப்டம்பர்) 21-ஆம் தேதி மக்களவையிலும், 23-ஆம் தேதி மாநிலங்களவையிலும் புதிய சட்டத் திருத்த மசோதா நிறைவேறியுள்ளது.
 நம் நாட்டில் 2015-ஆம் ஆண்டு கணக்குப்படி, பதிவு செய்யப்பட்ட என்.ஜி.ஓ.-க்கள் 31 லட்சம். யூனியன் பிரதேசங்களில் 82 ஆயிரம் என்.ஜி.ஓ.-க்கள். இவை ஒவ்வொரு நிதியாண்டு முடிந்ததும் வரவு-செலவு கணக்குகளை வருமான வரித்துறை அலுவலகத்தில் பட்டயத் தணிக்கையாளர் சான்றுடன் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், மூன்று லட்சம் என்.ஜி.ஓ.-க்கள் மட்டுமே முறையான கணக்குகளைக் காட்டியுள்ளன. 28 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் கணக்குகளைத் தாக்கல் செய்யவில்லை.
 இதனால் முதல் கட்டமாக 19 ஆயிரம் தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை அரசு ரத்து செய்துள்ளது. பல ஆயிரம் என்.ஜி.ஓ.-க்கள் மீது குற்றவியல் சட்டப்படி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 நம் நாட்டில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையே 15 லட்சம்தான். ஆனால் என்.ஜி.ஓ.-க்கள் எண்ணிக்கை அதைவிட இரு மடங்கு அதிகம். அரசு மருத்துவமனைகளை காட்டிலும் 250 மடங்கு அதிகம். 700 மக்களுக்கு ஒரு காவலர் எனில் 400 மக்களுக்கு ஒரு என்.ஜி.ஓ. இருக்கிறது. ஒரு ஆண்டு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் கோடி நன்கொடையாக நம் நாட்டு என்.ஜி.ஓ.-க்கள் பெற்றிருக்கின்றன. இதில் கேரளம் முதல் இடம் என்றால், தமிழ்நாடு இரண்டாவது இடம்.
 இவர்கள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியில் 50 சதவீதம் இவர்களது நிர்வாகச் செலவுகளுக்காக எடுத்துக் கொள்ளலாம் என்றிருந்தது. இப்போது 20 சதவீதம் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம் என்று மாற்றப்பட்டிருக்கிறது.
 ஏனெனில், தொண்டு நிறுவன தலைவர், துணைத் தலைவர், மேலாண்மை இயக்குநர், அலுவலக மேலாளர் போன்றவர்கள் எல்லாம் ஒரே குடும்ப உறுப்பினர்களாக இருப்பர். இவர்கள் ஓராண்டில் ரூ.1,000 கோடி நன்கொடை பெற்று, அதில் ரூ. 500 கோடியை நிர்வாகச் செலவாக காட்டி வந்தார்கள். வெளிநாட்டு வாகனம், பங்களா, ஆடம்பர வாழ்க்கை எல்லாம் இந்த 500 கோடியில் அடங்கும்.
 புதிய சட்டவிதியின்படி எந்த ஒரு என்.ஜி.ஓ.-வும் தன்னிடம் இருக்கும் நிதியை தனி நபருக்கோ அல்லது மற்றொரு என்.ஜி.ஓ.-வுக்கோ மாற்ற இயலாது. இனி என்.ஜி.ஓ.-க்கள் அந்தந்த இடங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும்தான் கணக்கைத் தொடங்கி பராமரிக்க முடியும். அந்த வங்கியின் உள்ளூர் கிளை, என்.ஜி.ஓ.-வின் கணக்குகளை தில்லியில் உள்ள தலைமை எஸ்.பி.ஐ.- யில், அதற்கென பிரத்யேகமாக உள்ள கணக்கில் காட்ட வேண்டும்.
 இதற்கு முன்னர், அறக்கட்டளை தொடங்கி ஒரு முறை அனுமதி பெற்று விட்டால் போதும் என்ற நிலை இருந்தது. இனி ஒவ்வோர் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும. இந்த ஐந்து ஆண்டுகளில் வரவு - செலவுக் கணக்கில் ஒழுங்கீனம் இல்லையென்றால் அரசு உரிமத்தை புதுப்பிக்கும். முறையாக நன்கொடைபெற்று சரியான வழியில் உண்மையாக மக்கள் நலனுக்காக செலவிடப்படும் எந்த ஒரு என்.ஜி.ஓ.-வும் பயப்படத் தேவையில்லை என்பது அரசின் உத்தரவாதம்.
 ஆனால், கடந்த இருபது ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான என்.ஜி.ஓ.-க்கள், அரசின் கொள்கைகளை, புதிய வளர்ச்சித் திட்டங்களை எதிர்த்து, எதிர்க்கட்சியின் பின்னால் ஒளிந்து கொண்டு பொதுமக்களை மூளைச்சலவை செய்து, பல வழிகளில் மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராகப் போராட்டம் செய்தது புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 2012-இல் நாடாளுமன்றத்தில் மன்மோகன் சிங் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டம் குறித்து வருத்தத்தோடு பேசியதை எல்லோரும் அறிவர். "மிகுந்த பொருட்செலவில் நாட்டின் மின் தேவையை எதிர்கொள்ளும் வகையில் ரஷிய நாட்டு உதவியோடு அணுமின் நிலையப் பணி நடந்து வருகிறது. இதனை அமெரிக்காவில் இருந்து பெறப்படும் நன்கொடை நிதியைக் கொண்டு இங்குள்ள சில அமைப்பினர் பொதுமக்களை முன்னிறுத்தி போராட்டம் செய்வது கண்டிக்கத் தக்கது' என்ற பொருள் படப் பேசினார்.
 அப்போதைய மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், வி. நாராயணசாமி ஆகியோரும் இதே கருத்தை வழிமொழிந்தார்கள். சில மாதங்களுக்கு முன்பாக, தில்லியில் உள்ள ஷாஹீன் பாக் என்ற பகுதியில் இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து பல மாதங்கள் போராட்டம் நடைபெற்றதிலும் அயல்நாட்டு பணம் ரூ. 50 கோடி வரை செலவிடப்பட்டதாகப் புலன் விசாரணை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
 மக்களாட்சி நடைமுறையில் சட்டம் இயற்ற வல்ல அதிகாரம் மிக்க நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒரு சட்டத் திருத்த மசோதா பல மணி நேரம் விவாதிக்கப்பட்டு, வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின் குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு சட்ட வடிவம் பெற்றிருப்பதை, எதிர்க்கட்சிகள் போராட்டம் மூலம் எதிர்ப்பதும், மாதங்கள் பலவாக மக்களின் இயல்பு வாழ்க்கையைச் சிதைப்பதும் குடியரசு நாட்டின் மாண்பினை அழிக்கும் செயல்களல்லவா?
 சட்டத் திருத்தத்தை நீக்க, அரசியல் சாசன அமர்வு முன் நீதி கேட்டு வழக்குத் தொடரலாம்; அல்லது அடுத்து வருகின்ற பொதுத் தேர்தலில் தங்கள் கருத்தை, கொள்கையை முன்நிறுத்தி வெற்றி பெற்று மாற்றத்தை காணலாம். இவற்றை விடுத்து, போராட்டத்தைத் தொடங்கி கலவர பூமியாக்கி வன்முறையில் ஏராளமான உயிருக்கும், உடைமைக்கும் கேடு செய்வது பொறுப்பான அரசியல் கட்சிகளின் பணியாக இருக்க முடியாது.
 இதைப்போன்றே, சாலை விரிவாக்கமா? ஆலை அமைப்பதா? எட்டு வழிச் சாலை திட்டமா? உயர் அழுத்த மின் கம்பி புதைவடமா? புதிய துறைமுகமா? எல்லாவற்றையும் எதிர்க்க மக்களைத் திரட்டும் முக்கிய காரணியாக இருப்பது அந்நிய நாட்டில் இருந்து வரும் நிதிப் புழக்கம்தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
 தூத்துக்குடியில் செம்பு உற்பத்தி ஆலை அமைவதற்கு, அதிகார பீடத்தில் உள்ளோர் நிலம் தந்து, ஆலை தொடங்க ஆணையும் வழங்கித் தொடக்க விழாவில் நாட்டின் தொழிற் வளர்ச்சியைப் புகழ்ந்தவர்கள், பின் ஒரு காலத்தில் "ஆலையை மூடு' என்று போராட நிதி எங்கிருந்து வருகிறது என்றால் தொண்டு அமைப்புகளின் கோடிகள்தான் என்கின்றனர்.
 இன்று உலகெங்கிலும் மதம் வளர்க்கும் பணியில் குறிப்பிட்ட நாடுகள் முழு வீச்சில் இறங்கியுள்ளன. இதற்கான பணியில், நம் நாட்டிலுள்ள பல்லாயிரக்கணக்கான என்.ஜி.ஓ.-க்கள் நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஊழியம் செய்கின்றனர்.
 பிரபல மத போதகர் ஒருவர் "இந்நாட்டில் நாம் அனைவரும் இரவு பகல் பாராது நித்திய ஜீவன் உபாசனை செய்தால் 2050-இல் இந்தியா முழுமையும் விசுவாசிகளாகப் பார்க்க முடியும்' என்று கூறுகிறார். அது உண்மையாகுமோ இல்லையோ, ஆனால் அதற்காக பல்லாயிரம் ஊழியர்களைக் கொண்டு மதமாற்றம் நடைபெறுவதை எல்லா இடங்களிலும் இன்றும் காணலாம்.
 "ஏழு சகோதரிகள்' என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா, மிசோரம், மணிப்பூர், மேகாலயம், அஸ்ஸாம் இந்த மாநிலங்கள் எல்லாம் அந்நிய மிஷினரிகளின் கைகளில் போய்விட்டன. அன்றைக்கு சமூக சீர்திருத்தவாதியாக இருந்த அயோத்தி தாசர் சொன்னபடி இந்த மத மாற்றத்தால் சமூகத்தில் பிளவுகள் ஏற்பட்டு, சண்டை சச்சரவுகள் மலியும் என்பதுதான் உண்மை.
 இது மட்டுமல்லாது ஆயிரக்கணக்கான என்.ஜி.ஓ.-க்கள், நக்சல் குழுக்களுக்கு நிதி தந்து அவற்றைப் பலப்படுத்துகின்றன. அவற்றுக்கு வேண்டியதெல்லாம் நாட்டில் அமைதி நீங்கி, போராட்டங்கள் அதிகரிக்க வேண்டும் என்பதுதான். இதனை கண்டுணர்ந்த மத்திய அரசு, எந்த வரம்புமற்ற என்.ஜி.ஓ.-க்களுக்குக் கடிவாளம் போட முனைந்துள்ளது. ஜாதி, மத உணர்வுகளைத் தூண்டுவதும், மொழி, இனப்பூசலை வளர்ப்பதும் தொண்டுகளல்ல. அவை, பகை நாடுகள் தரும் தொல்லைக்கு நிகரானவை.
 நம் நாட்டைத் துண்டாக்கிய பகை நாடான பாகிஸ்தானிடம் கையூட்டுப் பெற்று, தாய்நாட்டைப் பழிக்கும் இழிவான செயலுக்கும், தான் உற்பத்தி செய்த நாசகார கிருமியால் உலகையே அச்சுறுத்தும் சீனாவின் நலம் விரும்பிகள் செய்யும் அல்லவைகளுக்கும் அவர்தம் பணிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுத்திருப்பது மிகச்சரி.
 "பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந்தனவே' என்று பாடிய மகாகவி பாரதியார் இன்றிருப்பின், இவர்களை அறம் பாடியே அழித்திருப்பார். ஒரு நாடு என்றால் எப்படியிருக்க வேண்டும் என்று கூறவந்த வள்ளுவப் பேராசான்,பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்துஅலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு என்று கூறினார்.
 அயல் நாட்டுப் பகைவர்களை போர்களத்தில் வென்று பகை முடிக்க வேண்டும்; உள்நாட்டில் பாழ்செய்யும் உட்பகையை சட்டத்தால் முறியடிக்க வேண்டும்!
 
 கட்டுரையாளர்:
 தலைவர்,
 திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT