நடுப்பக்கக் கட்டுரைகள்

சூது என்னும் ஒருவழிப் பாதை

இரா. சுந்தரபாண்டியன்

ஒரு சமுதாயத்தின் சீரழிவுக்கு மதுவும் சூதும் ஊற்றுக்கண்களாகத் திகழ்கின்றன. ஒரு காலத்தில் சூதாட்டத்தின் நவீன வடிவமான லாட்டரி சீட்டுகளின் பிடியில் தமிழகம் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. பெரும்பாலான கூலி தொழிலாளர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் தங்களது வருமானத்தில் கணிசமான தொகையை லாட்டரியில் தொலைத்துக் கொண்டிருந்தனர். 

2003-ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டு லாட்டரி மோகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதன் பிறகு சுரண்டல் லாட்டரி, இணைய லாட்டரி என அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை சட்ட விரோதமாக அவ்வப்போது நடைபெற்றாலும்கூட, லாட்டரி சீட்டு விற்பனை தமிழகத்தில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்றுதான் கூற வேண்டும். 

என்னதான் லாட்டரி, இணையவழி லாட்டரிகளை அரசு தடை செய்தாலும் தற்போது முகநூல், கட்செவி அஞ்சல், சுட்டுரை போன்ற சமூக ஊடகங்களும் பல்வேறு இணையதளங்களும் இணையவழியில் சூதாட அழைப்பு விடுக்கின்றன. பெருகிவிட்ட அறிதிறன் பேசி பயன்பாடுகளும், மலிவு விலையில் கிடைக்கும் இணைய சேவையும் நிமிஷத்துக்கொருமுறை இணைய சூதாட்ட விளம்பரங்களை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கின்றன. 

போதாக்குறைக்கு திரைத்துறை, விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் இணையவழி சூதாட்டத்துக்கு வலுசேர்க்கும் விதமாக விளம்பரங்களில் தோன்றி ஆசை வார்த்தைகளை அள்ளி வீசுகின்றனர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இணையத்தில் பணம் செலுத்தி சூதாடுவது சட்ட விரோதமானது அல்ல என்று கடந்த 2015-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அதன் விளைவு? கோடிக்கணக்கில் பணம் புரளக்கூடிய, லட்சக்கணக்கில் பயனாளர்களைக் கொண்ட, நூற்றுக்கணக்கில் மனித உயிர்களைக் காவு வாங்கும் விளையாட்டாக இணையவழி சூதாட்டம் இன்று உருவெடுத்துள்ளது.

புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் அருகேயுள்ள கோர்க்காட்டைச் சேர்ந்த விஜயகுமார் எனும் முப்பத்தாறு வயது நபர் கடந்த ஆறு மாத காலமாக இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். தனது சொந்தப் பணத்தை இழந்ததோடு மட்டுமல்லாது, பிறரிடம் கடன் வாங்கியும் சூதாடினார். வாங்கிய கடன் விஜயகுமாரின் கழுத்தை நெரித்தது. 

விளைவு? அவர் தற்கொலை செய்துகொண்டார். கணவனை இழந்த அவரது மனைவியும், தந்தையை இழந்த இரண்டு குழந்தைகளும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு ஓரளவு வலுப்பெற்று வரும் இவ்வேளையில்  குடும்பத்தின் தலைவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது கொடுமை எனில், அவரது தற்கொலைக்கு இணையவழி சூதாட்டம் காரணமாக இருந்தது பெருங்கொடுமை.  

இணையவழி சூதாட்டத்தின் தற்போதைய இந்திய சந்தை மதிப்பு சுமார் ரூ. 2,200 கோடி எனவும், இதன் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 50% அதிகரிக்கும் எனவும் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. மேலும், தமிழகத்தில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் பேர் இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர் எனவும், ஒவ்வொரு நாளும் புதிதாக 15,000 முதல் 20,000 பேர் வரை இணையவழி சூதாட்டத்தில் தங்களைப் பதிவு செய்துகொள்கின்றனர் எனவும் அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மதுவும், சூதும் மனிதர்களை அடிமையாக்கும் இயல்புடையவை. ஆரம்பத்தில் எளிதான விளையாட்டுகளையும், ஊக்கத் தொகையையும் பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் இணையவழி சூதாட்ட நிறுவனங்கள், சில ஆட்டங்களுக்குப் பிறகு, பயனாளர்களை முழுவதுமாக தன்வசப்படுத்துகின்றன. 

சூதாட்டத்தில் ஒரேயொரு முறை வெற்றி பெற்றுவிட்டால், மீண்டும் மீண்டும் அதில் ஈடுபடுமாறு தூண்டுதலும், மன மயக்கமும் ஏற்படும். ஒரு வெற்றிக்குப் பிறகு, பலமுறை தோல்வி கண்டு பணத்தை இழந்தாலும், குருட்டு அதிருஷ்டத்தின் மீது நம்பிக்கையும், மீண்டும் ஒரேயொரு வெற்றியையாவது பெற்றுவிட மாட்டோமா என்கிற நப்பாசையும் கொண்டு பெரும்பாலானோர் இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். 

மதுப் பழக்கத்துக்கு அடிமையானோரின் எண்ணிக்கைக்கு அடுத்தபடியாக, இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மட்டுமல்ல, அதில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 

மத்திய - மாநில அரசுகள் இணையவழி சூதாட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக ஆர்வலர்களால் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது. அரசு இணைய சூதாட்டத்துக்கு தடை விதிப்பது குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டிய தருணமிது.

அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பது ஒருபுறம் இருக்கட்டும். ஒருவன் கணினி, கைப்பேசி வழியாக இணைய மாயாவியுடன் சூதாடுவது என்பது அவன் தனக்குத்தானே சாவுமணி அடித்துக்கொள்வதற்கு சமம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதைத்தான் பாரதியாரும், "படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான் போவான் ஐயோவென்று போவான்' எனக் குறிப்பிட்டார். 

மாதவியின் பின் சென்ற கோவலன் தன் மனைவி கண்ணகியை மறந்தான். மாதவியிடமிருந்து விடுபட்டு கண்ணகியை அடையும் எண்ணமே கோவலனுக்கு எழாமல் போயிற்று. கோவலனின் இந்த நிலையை "விடுதல் அறியா விருப்பினன்' என்று குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள்.  

சூது என்பது ஒருவழிப் பாதையாகும். அதில் ஒருமுறை நுழைந்து விட்டால், சிலப்பதிகார நாயகன் கோவலனைப்போல "விடுதல் அறியா விருப்பினன்' ஆகி, எந்தப் பாவமும் அறியாத மனைவி, மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிட்டு தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். "தீதும் நன்றும் பிறர் தர வாரா'.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

SCROLL FOR NEXT