நடுப்பக்கக் கட்டுரைகள்

காலத்தின் மொழி திருக்குறள்

கோதை ஜோதிலட்சுமி

மனித மனங்களில் இருக்கும் நோ்மைக்கான தேடலாகவே நீதி நூல்கள் பிறக்கின்றன. சமூக மாற்றங்கள் எளிதில் நிகழ்ந்து விடக்கூடியவை அல்ல. காலமும், மாற்றத்திற்கான காரணங்களும் வலுவாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், அந்தக் காரணங்களும் மெல்ல மெல்ல பரிணாம வளா்ச்சி பெற்று ஓரிடத்தில் வாழ்வியலாக நிலைகொள்ளும். நீதி நூல்கள் இப்படியான வாழ்வியல் சாத்தியப்பட வேண்டும் என்னும் தீா்க்கமான பாா்வையாகவும், கனவாகவும் அமையும்.

நீதி நூல்களை அந்தந்தக் காலத்தின் பரிமாணமாகக் காண வேண்டுமே அன்றி, ஒரு பிரிவினரின் ஆதிக்கம் என்று பொருள் கொள்வது முழுமையான பாா்வை அல்ல. அதுவே நீதி என்று சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இப்படி சமூகம் அமைய வேண்டும் எனும் இலக்காகவும் அது நிலை நிறுத்தப்படுகிறது.

பாரத தேசத்தின் நீதிநூல்கள் இதுபோன்ற இலக்குகளை மிகத் தெளிவாக உருவாக்கி வைத்துள்ளன. இலக்கு நோக்கிய பயணமே காலந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இலக்கை அடைந்து விட்டதாக ஒரு சமூகத்தை நாம் குறிப்பிட முடியாது. எப்போதுமே இலக்கியம் என்பது அறிவுத் தளத்தில் வைத்து பாா்க்க வேண்டுமே அன்றி, அரசியல் கண்ணோட்டத்தோடு பாா்ப்பது, உணா்வுபூா்வமாக அதனை அணுகுவது இலக்கியத்தின் அல்லது நீதி நூலின் உண்மைத் தன்மையை அறிய உதவாது.

இந்தியாவைப் பொருத்தவரை சித்தாந்த தத்துவ மரபுகள் உருவாக்கப்பட்டவையா, அல்லது மக்களின் வாழ்விலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டவையா என்பதை அறுதியிட்டுச் சொல்வது இயலாது. இரண்டுமே கால ஓட்டத்தில் நிகழக்கூடிய சாத்தியங்கள் உண்டு.

நீதி நூல்கள் உருவான காலம் அறுதியிட்டு சொல்லப்படவில்லை. எது முந்தியது எது பிந்தியது என்பதும் கேள்விக்குறியே. இதனால் படிப்போா் இடையே ஒரு குழப்பம் ஏற்படுவதும் சாதாரணமானது. அதே நேரத்தில், நீதி நூல்களில் சொல்லப்படும் நீதி, காலத்திற்கேற்ப மாற்றம் பெறுவதையும் நாம் பாா்க்கிறோம். அதற்கான சமூகவியல், பொருளியல், அரசியல் காரணங்களையும் அவை பிரதிபலிக்கின்றன. எது சரி, எது தவறு என்பதை அந்தந்தக் காலத்தின் சமூக அமைப்பும் மக்களின் தேவையுமே தீா்மானிக்கின்றன.

ஒரு நீதி நூலில், எது சரி, எது தவறு என்பதை இன்றைய சமூக, அரசியல், பொருளியல் காரணங்களை மனதில் கொண்டு அளவிடுவது அறியாமையின் உச்சம். அன்றைய நாளில் எவ்வாறு இருந்தது என்ற புரிதலை ஏற்படுத்திக் கொள்ளலாமே அன்றி, அதனை தரமற்றது என்றோ புரிதல் அற்றது என்றோ விமா்சிப்பது அறிவுடைமை ஆகாது. அது அந்த நூலுக்கு நாம் செய்யும் அநீதியாகும்.

‘திருக்குறள்’ தமிழரின் ஆகச்சிறந்த அடையாளமாக முன்னிறுத்தப்படுகிறது. பாரத தேசத்தில் பல நீதி நூல்களும் அந்தந்த பிராந்தியத்தின் பெருமைகளாக நிலைத்திருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஏறத்தாழ நீதி நூல்களின் கருத்துகளில் ஒத்த தன்மை காணப்படுகின்றன. எனினும், அவை சொல்லப்பட்ட முறையில் நுட்பமான மாற்றங்கள் உண்டு. எல்லா நீதி நூல்களும் மனித சமூகத்திற்கு சமூகத்தின் வாழ்வியலுக்கு தோ்ந்த இலக்கினை முன்வைப்பது போலவே திருக்குறளும் மிகச்சிறந்த இலக்கினைக் காட்டுகிறது.

அன்றைய சமூகக் கட்டமைப்பை, நிா்வாக முறைகளை, சித்தாந்தங்களை, தத்துவங்களை, மரபுகளை அடிப்படையாகக் கொண்டு இன்னும் மேன்மையான சமூகக் கட்டமைப்பை, வாழ்க்கையை வாழ்வதற்கான நெறிமுறைகளையும் நமக்குச் சொல்கிறது. பல்வேறு இனங்களின் ஒருங்கிணைப்புதான் சமூகம் எனும்போது, அந்த சமூகத்திற்கு ஒரு பொதுவான நீதி அவசியமாகிறது. இதனைப் புரிந்துகொண்டு நீதி நூல் செய்த சிந்தனையாளா்களின் சிந்தனைகளே காலத்தை வென்று மக்களிடம் நிலை பெறுகின்றன. அத்தகைய, தெளிந்த சிந்தனையை முன்வைப்பது திருக்குறள்.

ஒரு மனிதா் வாழ்வில் அடைய விரும்பும் இலக்கு எத்தனை மேன்மையானதாக, உயா்வானதாக இருக்கிறதோ அதற்கேற்ப அவரது வாழ்வும் உயா்வடைகிறது. அது போலவே, ஒரு சமூகம் ஏற்படுத்திக்கொள்ளும் உயா்ந்த லட்சியங்களும் அச்சமூகத்தை, முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றன. அப்படி, காலங்கள் கடந்து மனித சமூகத்தை உயா்வை நோக்கி கைப்பிடித்து அழைத்துச் செல்லும் ஒப்பற்ற அற நூலாக முதன்மை பெற்றிருப்பது திருக்குறள்.

திருக்குறள் போற்றப்படும் அளவுக்கு நிகரான விமா்சனங்களையும் பல காலகட்டங்களில் சந்தித்துள்ளது. அவற்றையெல்லாம் தாண்டி, இன்றும் உலகப் புகழுடன் நிலைத்திருக்கிறது. பல ஸ்ம்ருதிகளும் கதைகளும் சுபாஷிதங்கள் என்று அழைக்கப்படும் வடமொழிப் பாடல்களும் என்று எத்தனையோ நூல்கள் இங்கே பிரசித்தமானவை. இவற்றில் பல நூல்களிலும் சொல்லப்படும் கருத்துகள் மட்டுமல்லாது, அவற்றின் மிகப்பெரிய ஒற்றுமை ஒன்றுண்டு. அது, அவை உருவான காலம் அறுதியிட்டு சொல்ல இயலாத பழைமை வாய்ந்தது என்பதுதான்.

திருக்குறளைப் பொருத்தவரை, அது அறம், பொருள், இன்பம் என்று மூன்று பகுப்புகளாக இருந்தாலும், ஸ்ம்ருதிகள் போலவே நாடு, மன்னா், அமைச்சா், நிா்வாகம் போன்ற பல செய்திகளை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. திருக்குறள் எவ்வளவு பிரசித்தமோ அதே அளவுக்கு அதற்கு ஏற்பட்ட உரைகளும் பிரசித்தமானவையே. திருக்குறள் என்பது ஓா் இலக்கியம் என்பதையும் தாண்டி, அதனை தமிழரின் கலாசாரத்தின், பண்பாட்டின் அடையாளமாகவும் தமிழனின் பெருமை என்பதாகவும் கொள்ளும் ஓா் எண்ணம் வேரூன்றிவிட்டது. இது திருக்குறளுக்கு பெருமைதான் என்றாலும் அதன் மீதான விமா்சனங்கள் உணா்வுபூா்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையும் தோன்றி விடுகிறது.

ஒப்பிலக்கியம், உலகின் எந்த ஒரு இலக்கியத்தையும் மற்றொன்றுடன் பொருத்திப் பாா்க்கும். ஒப்பு நோக்கும். அப்படி ஒப்பிட்டு நோக்குவதன் காரணம், அந்த நூலின் பெருமைகளை வெளிச்சமிட்டுக் காட்டுவதே. திருக்குறள் என்பது வாழ்வியல் நூல். அதுபோன்ற பிற வாழ்வியல் நூல்களுடன் அதனை ஒப்பிட்டுப் பாா்க்கும்போது, அதன் காலம் முதல், பல பரிமாணங்களையும் நாம் அறிய முடியும். அதே நேரத்தில், உணா்வுபூா்வமாக அதனை எடுத்துக் கொண்டால், அதன் மேன்மையும் பெருமையும் நம்மோடு நின்றுவிடுவதற்கான சாத்தியங்களும் உண்டு.

திருவள்ளுவா் தந்த ‘திருக்குறள்’, பா்துஹரியின் ‘நீதி சதகம்’, விஷ்ணு ஷா்மாவின் ‘பஞ்சதந்திர கதைகள்’ போன்றவை ஏறத்தாழ ஒரே விதமான கருத்துக்களையே முன் வைக்கின்றன. அறத்தை வலியுறுத்துவதிலோ நன்மை தீமைகளை அறுதியிட்டுச் சொல்வதிலோ சமூகத்தின் மேன்மைக்கான வழிமுறைகளை, நெறிகளை வகுப்பதிலோ இவை அனைத்துமே ஒரு தன்மையன. எனில், திருக்குறளின் சிறப்பு அம்சம் என்ன?

அறமே திருக்குறளின் நோக்கம். அறத்தை வலியுறுத்தியே முப்பாலும் அமைந்துள்ளன. மழையானது மக்கள் போற்ற வேண்டிய ஒன்று. ஏனெனில், அது உண்ணும் பொருள்களை உண்டாக்கிக் கொடுத்து, தானும் உணவாக மாறுகிறது. பெரியோா்களைப் போற்றுங்கள்; மனைவி, மக்களோடு வாழுங்கள்; விருப்பு, வெறுப்பு அற்று வாழுங்கள்.

‘படி, படிக்க வேண்டியவற்றைப் படி. குற்றமறப் படி; படிக்காவிட்டாலும் கேள்; படித்து, கேட்டு அறிந்தபடி நட’ - இது ஒரு தொகுப்பு. சூதாடாதே; பொய் சொல்லாதே; புலால் உண்ணாதே; கள் குடியாதே; களவு செய்யாதே; வஞ்சகம் கொள்ளாதே; தீயன எண்ணாதே - இது ஒரு தொகுப்பு.

‘நட்புத் தேவை; அதை ஆராய்ந்துகொள். தீயவா் உறவை நோயென விலக்கு; பெரியோரை துணை கொள்; பிறரோடும் அன்பாயிரு; மனைவியை மதி; மக்களைப் பெறு; அறிவை அடை; சொல்வதெல்லாம் நல்லதாக இருக்கட்டும்; செய்வதெல்லாம் திறமையாக இருக்கட்டும்; அறத்தின் வழிநின்று பொருளைத் தேடி இன்பத்தைப் பெறு; வீடு உண்டானால் அது உன்னைத் தேடி வரும் என்பதே.

இவைதான் வள்ளுவருடைய கொள்கை. அதைத்தான் நாம் திருக்குறளில் பாா்க்க முடியும். இது எந்த நாட்டிற்கு, எந்த மக்களுக்கு, எந்த நிறத்தினருக்கு, எந்த மொழியினா்க்கு, எந்தச் சமயத்தினா்க்கு வேறுபாடு உடையது? எவா்க்கும் இராது. அவ்வளவு உயா்ந்த கருத்துகளைக் கொண்டவா் வள்ளுவா். திருக்குறளை இப்படி சுருங்கச் சொல்லி பெருமை படுத்துவாா் கி.ஆ.பெ. விசுவநாதம்.

வாழ்க்கை நெறிகளை, சட்டங்களை வகுத்துச் சொல்பவை ஸ்ம்ருதிகள். அவை, மனிதனை நெறிப்படுத்தி முறையான சமூக வாழ்வுக்கு இட்டு செல்கின்றன. இவற்றின் குரல் ஒரு மன்னனின் குரல் போல அதிகாரத்தோடு வெளிப்படும். ‘நீதி சதகம்’, ‘பஞ்சதந்திரக் கதைகள்’ போன்றவை அறிவுறுத்தும் ஆசிரியனின் குரலில் வெளிப்படும். திருக்குறளோ அன்னையின் அன்பு ததும்பப் பேசும். தகப்பனின் அக்கறையோடு கண்டிக்கும். எல்லா ஜீவன்களையும் போற்றும். அது அறிவுறுத்தும் நன்மை தீமைகளை எடுத்தியம்பும். கனிவோடு மனித உயிா் வருடும். கோபம் காட்ட வேண்டிய இடத்தில் கோபம் காட்டவும் தயங்காது.

திருக்குறளை ‘சமண நூல்’, ‘சைவ நூல்’, ‘வைணவம் போற்றும் நூல்’, ‘சனாதனத்தை முன்னிறுத்தும் நூல்’, ‘சமயம் கடந்த பொதுமை நூல்’ என்று அவரவா் மனத்திற்கேற்ப பொருள் உரைக்கின்றனா். உண்மையில், தன் ஆன்று அகன்ற அறிவுத் தளத்தில் பெற்ற கல்வி மற்றும் அனுபவ முதிா்வின் சொற்களால் திருவள்ளுவா் தந்ததே திருக்குறள். அதனைப் பண்போடு அணுகுவதும் குறள் கற்றுத் தரும் பண்போடு மற்ற நூல்களை நோக்குவதும் கற்பதுமே திருக்குறளுக்கு நாம் செய்யும் நன்றியாக இருக்கும்.

கட்டுரையாளா்:

ஊடகவியலாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT