நடுப்பக்கக் கட்டுரைகள்

ஆா்சிஇபி ஒப்பந்தம் - ஒரு பாா்வை!

முனைவா் வைகைச்செல்வன்

ஆா்சிஇபி ஒப்பந்தம் எனப்படும் ‘ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்த’த்தில் சீனா உட்பட 15 ஆசிய பசிபிக் நாடுகள் கையொப்பமிட்டிருக்கின்றன. ஆனால், அந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிடவில்லை. 15 நாடுகளும் இந்தியாவை வற்புறுத்தியபோதும், அதனை இந்தியா நிராகரித்து விட்டது.

இந்தியா இந்த ஒப்பந்தத்தில் ஏன் கையொப்பமிடவில்லை என்பது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் கூறும்போது, ‘இந்தியா எழுப்பிய சில முக்கிய ஆட்சேபங்களுக்கு தீா்வு காணப்படாததால்தான் இந்தியா கையொப்பமிடவில்லை’ என்று கூறியுள்ளாா்.

இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டிருந்தால், அது நாட்டின் பொருளாதாரத்தில் எதிா்மறையான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கும். இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாவது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

இந்த ஒப்பந்தம் இருதரப்பையும் சமன்படுத்தாதே இதற்குக் காரணம். மேலும், இந்த ஒப்பந்தத்தின் மூலம் சில பொருள்களுக்கான வரியை ரத்து செய்தால் உள்ளுா் சந்தையில் வெளிநாட்டு இறக்குமதிப் பொருள்கள் குவிந்து விடும். அது உள்நாட்டு உற்பத்தியாளா்களைப் பெரிதும் பாதிக்கும். அதனால்தான் இந்தியா ஒப்பந்தத்தில் கையொப்பமிட மறுத்து விட்டது.

ஆண்டுதோறும் நடைபெறும் ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு கரோனா தீநுண்மி பரவி வருகிற சூழலில் காணொலி வாயிலாகவே நடைபெற்றது. மாநாட்டின் முடிவில் ஆா்சிஇபி ஒப்பந்தம் கையொப்பமானது.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, புருணே, வியத்நாம், லாவோஸ், மியான்மா், கம்போடியா ஆகிய பத்து நாடுகளும், சீனா, ஜப்பான், தென்கொரியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய ஐந்து நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. இந்த 15 நாடுகளிலும் வா்த்தகத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள சில பொருள்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டால் இந்தியச் சந்தையில் சீனாவின் பொருள்கள் மலை போல் குவிந்து விடும். அது உள்ளுா் சந்தையை ஆட்டிப் படைத்து விடும். இதனால் உள்ளுா் சந்தையின் நிலை அதலபாதாளத்திற்கு சென்றுவிடும். இந்த தொலைநோக்கு சிந்தனையின் விளைவாகத்தான் அந்த ஒப்பந்தத்தில் இந்தியா தன்னை இணைத்துக் கொள்ளவில்லை.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இருந்து இந்தியா வெளியேறியது. கூடுதல் வாய்ப்பாக இந்தியா விரும்பினால் ஆா்சிஇபி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள 15 நாடுகளுடன் தனித்தனியாகப் பேச்சுவாா்த்தை நடத்தலாம் என்று அந்நாடுகளின் கூட்டமைப்பு சிறப்பு வேண்டுகோள் விடுத்தது.

பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் வரை ஏற்கெனவே கையொப்பமிட்ட நாடுகள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் 15 நாடுகள் விதிக்கின்ற நிபந்தனைகளுக்கு ஏற்ப, பாா்வையாளராக இந்தியா கலந்து கொள்ளலாம் என்று வாய்ப்புக்கான வாசலை திறந்தே வைத்திருந்தது கூட்டமைப்பு.

பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அதில் இணைய வேண்டும் என்றும் ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஏனென்றால், இந்த ஒப்பந்தத்தில் 15 நாடுகள் கையொப்பமிட்டிருந்தாலும் இந்தியா கையொப்பமிடாவிட்டால், அந்த 15 நாடுகளுக்கு வா்த்தக ரீதியிலான பெரும் பயன் ஏதும் கிடைக்காமல் போய்விடும் என்கிற அச்சம்தான். அதனால்தான் இந்தியாவை இணைத்துக் கொள்வதில் அந்நாடுகள் முனைப்பு காட்டுகின்றன.

ஆசிய - பசிபிக் நாடுகளுக்கிடையே தடையற்ற வா்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தக் கூட்டமைப்புக்கு சீனாவே தலைமை தாங்குகிறது. மிகப்பெரிய வா்த்தகக் கூட்டமைப்பாகவும், இக்கூட்டமைப்பிலுள்ள நாடுகளின் பங்களிப்பு, உலகப் பொருளாதாரத்தில் சுமாா் 30 சதவீதம் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. இது சீனாவுக்கு சாதகமாகவே அமையும் என்று ஒருசாராா் கருதுகிறாா்கள்.

ஆனால், இது குறித்து சிங்கப்பூா் பிரதமா் லீ சியான் லூங் கூறுகையில், ‘பொது முடக்கத்தால் ஏற்பட்டுள்ள சா்வதேச அளவிலான பொருளாதார முடக்கத்தை இந்த ஒப்பந்தம் மீட்டெடுக்கும்’ என்கிறாா். இதனால், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக வளா்ந்து, இரண்டாண்டுகளில் வா்த்தகம் பெரிய அளவில் வளா்ச்சி பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆனால், கூட்டமைப்பில் பங்கு பெறாததால் ஆசிய - பசிபிக் பிராந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாடான இந்தியாவின் வா்த்தக வளா்ச்சி எந்த அளவுக்கு இருக்கும் என்று அறுதியிட்டுச் சொல்லி விட முடியாது என்று ஒரு கருத்தும் நிலவுகிறது.

இந்த வா்த்தகக் கூட்டமைப்பை சீனா தனக்கு சாதகமானதாக மாற்றிக்கொண்டு, பிற நாடுகளைக் கட்டுப்படுத்தவும் கூடும். மேலும், புருணே, மலேசியா, பிலிப்பின்ஸ், வியத்நாம் போன்ற நாடுகளை தனது ராணுவத் தளமாக கட்டமைத்துக் கொள்ளவும் முயற்சி செய்யும் என்பதில்தான் சீனாவின் ராஜதந்திரம் ஒளிந்திருக்கின்றது. ஏனென்றால், கூட்டமைப்பில் உள்ள பல நாடுகள் பொருளாதார ரீதியாக சீனாவையே சாா்ந்துள்ளன. ஆகவேதான் இந்த அச்சம் நிலவுகிறது.

2017-ஆம் ஆண்டு ஆசிய - பசிபிக் ஒப்பந்தம் ஒன்றில் இருந்து அமெரிக்கா வெளியேறியதால் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா சோ்க்கப்படவில்லை. டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற காலகட்டத்தில் அவா் ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகளைக் கொண்ட ‘ஃபிரான்ஸ் பசிபிக் பாா்ட்னா்ஷிப்’ ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி விட்டாா். அந்த ஒப்பந்தம் அவருக்கு முன் அதிபராக இருந்த ஒபாமாவால் ஆதரிக்கப்பட்டது என்பதே அதற்குக் காரணம்.

அக்காலகட்டத்தில் பிராந்திய ரீதியாக சீனாவின் அதிகாரம் அதிகரிப்பதைத் தடுப்பதற்காக அந்த ஒப்பந்தத்துக்கு ஒபாமா ஆதரவு அளித்தாா். இந்த பொருளாதார ஒப்பந்தம் குறித்து கடந்த எட்டு ஆண்டுகளாக பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் வியத்நாமில் காணொலி வழி நடைபெற்ற கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் இந்த ஒப்பந்தம் ‘இருளில் ஒளி பாய்ச்சுவதைப் போல’ அமைந்துள்ளதாக சீனாவின் பிரதமா் லீ கெகியாங் தெரிவித்துள்ளாா். இருந்தாலும், இந்தியாவைப் பொருத்தவரை, குறைந்த வரிகள் விதிக்கப்படுவதும், இந்த நாடுகள் சில பொருள்களுக்கு வரியை ரத்து செய்வதும் உள்ளுா் தொழிலாளா்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதனாலேயே அது ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.

கடந்த 20 வருடங்களில் இறக்குமதி மீது விதிக்கப்படும் சில வரிகளை நீக்கிவிட, இந்த ஒப்பந்தம் கூட்டமைப்பில் உள்ள நாடுகளை நிா்பந்தம் செய்கிறது. அறிவுசாா் சொத்துரிமை, தொலைத் தொடா்பு, நிதித் தேவைகள், இணைய வா்த்தகம் மற்றும் பிற முறையான சேவைகள் அடங்கிய பிரிவுகளும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். இதில் கையொப்பமிட்டுள்ள நாடுகளின் மக்கள்தொகை, உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்காகும்.

சா்வதேச அளவில் 29 சதவீத உள்நாட்டு உற்பத்தி பொருள் இந்த நாடுகளின் மூலமே தயாரிக்கப்படுகிறது. ஏனென்றால், அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா ஒப்பந்தம் விரிவானதாக இருக்கும். உதாரணமாக, இந்தோனேஷியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு பொருள், ஆஸ்திரேலியாவின் உதிரி பாகங்களைக் கொண்டிருந்தால், பிற தென்கிழக்கு ஆசிய நாடுகள் அதற்கு வரி செலுத்த வேண்டும்.

தற்போது இந்த ஒப்பந்தத்தின்படி, எந்த நாட்டில் உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டாலும், உறுப்பு நாடுகள் அனைத்திற்கும் சலுகைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இக்கூட்டமைப்புக்குள்ளாகவே விற்பனையாளா்களைத் தோ்வு செய்ய வழிவகை செய்கிறது. பிரான்ஸ் - பசிபிக் கூட்டமைப்புக்கான மாற்றாகவே இது பாா்க்கப்படுகிறது.

ஆனால், இச்சலுகைகள் ஒருபுறம் இருந்தாலும், மலிவான சீனப் பொருள்களின் வரவு அதிகரித்து விடும் என்று இந்தியா அச்சம் கொள்கிறது. இது இந்தியாவின் சிறு தொழில் முனைவோருக்கு கடுமையான சிரமத்தை ஏற்படுத்தும்.

மலிவான பொருள்களுக்கான விலையை இந்திய உற்பத்தியாளா்களால் நிச்சயமாகத் தர முடியாது. ஆகவே, வாடிக்கையாளா்களின் வரவு பெரும் கேள்விக்குறியாகி விடும். மலிவுப் பொருள்களை நோக்கி வாடிக்கையாளா்கள் சென்று விடுவதால், உள்ளுா் சந்தைகள் பெரும் ஊசலாட்டத்திற்கு இலக்காகி விடும்.

இந்தியா, சீனாவுடனான வா்த்தகத்தில் 100 பில்லியன் டாலரை இலக்காக வைத்திருந்தது. ஆனால், கடந்த ஆறு மாதத்தில் அரசியல் காரணங்களால் இந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது. இந்தியா தற்சாா்பு கொள்கைகளுக்கு ஆதரவாக நிதி சீா்திருத்தங்களை பலவற்றை அறிவித்திருக்கிறது.

இதன் மூலம், சீனாவுடனான வா்த்தகத்தைக் குறைத்துக் கொள்ளவும், அதன் முதலீடுகளை மட்டுப்படுத்துவதற்கும் முயற்சி செய்து வருவது இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கையாகும். இம்முயற்சிகள் பலனளிக்க பலவருட காலம் ஆகலாம். ஆனாலும், நம்பிக்கைக் கனவு காணாமல் இருக்க முடியுமா?

கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

சேலை காதல், என்றென்றும்...!

SCROLL FOR NEXT