ஸ்பெஷல்

2020-2021-ல் இளையராஜா வாழ்க்கை: புதிய படங்களும் புதிய ஸ்டூடியோவும்!

2nd Jun 2021 11:47 AM | ச.ந. கண்ணன்

ADVERTISEMENT

 

இளையராஜா தனது 78-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். சமூகவலைத்தளங்களில் திரையுலகினர் பலரும் ரசிகர்களும் இளையராஜாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

2020 ஜூன் மாதம் முதல் 2021 மே மாதம் வரையிலான இந்த ஒரு வருட காலகட்டத்தில் இளையராஜாவின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பு:

ஜூன் 2: புதிய தளத்தில் இசை அனுபவங்களைப் பகிரவுள்ள இளையராஜா
 

ADVERTISEMENT

இசை ஓடிடி என்கிற புதிய தளத்தில் தன்னுடைய இசை அனுபவங்களைக் கூறவுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

தன்னுடைய பிறந்த நாளுக்காக தனது யூடியூப் தளத்தில் அவர் விடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது: 

எனக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லத் துடிதுடித்துக் கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களே, உங்களையும் என்னையும் சந்திக்க விடாமல் இந்த கரோனா காலக்கட்டம் தடுக்கிறது. உங்கள் அன்பு உள்ளங்களை நான் நன்றாகவே அறிவேன். உங்களுடன் இசை வடிவில் தினமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

வெறும் இசை வந்தால் மட்டும் போதுமா, நான் வரவேண்டாமா உங்கள் இல்லத்துக்கு? உங்கள் இல்லம் தேடி நானே நேரடியாக வருகிறேன், இசை ஓடிடி மூலமாக. ஓவ்வொரு பாடலும் எப்படி உருவானது, அதைப் பதிவு செய்ய எவ்வளவு சிரமப்பட்டோம் என்பதைப் பற்றி சொல்லவிருக்கிறேன். வேறு எந்த சேனலிலும் கேட்கமுடியாத தகவல்கள் இதில் வெளியாகும். உலகின் மாபெரும் இசைக்கலைஞர்கள் என்னைப் பற்றிய அபிப்ராயங்களைப் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள். புகழ்பெற்ற இசைக்கலைஞர்களும் இதில் பங்கு பெற்று சுவாரசியமான தகவல்களை அளிக்கக் காத்திருக்கிறார்கள். இதெல்லாம் உங்கள் வீடு தேடி இசை ஓடிடி மூலமாக வருகிறது. அந்த நாளுக்காகக் காத்திருங்கள். என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள உங்கள் வீடு தேடி வந்துகொண்டிருக்கிறேன் என்று கூறினார்.

ஜூலை 16: இளையராஜாவின் அண்ணன் மகன் காலமானார்

இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் இளைய மகன் ஹோமோ ஜோ உடல்நலக்குறைவால் காலமானார். 

ஹோமோ ஜோ, இயக்குநர் ஆர்.வி. உதயகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். கிழக்கு வாசல், சிங்கார வேலன், சின்ன கவுண்டர் போன்ற படங்களில் இணை இயக்குநராகவும் கற்க கசடற படத்துக்கு வசனகர்த்தாகவும் பணியாற்றியுள்ளார். தற்போது, நாலு பேரும் ரொம்ப நல்லவங்க என்கிற படத்தை இயக்கி வந்தார்.

ஹோமோ ஜோ-வின் மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்தார்கள்.

ஆகஸ்ட் 15: பாலு சீக்கிரம் வா என இளையராஜா உருக்கம்

பாலு, சீக்கிரமாக எழுந்து வா. உனக்காகக் காத்திருக்கிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமாகப் பேசிய விடியோ வெளியானது.

ஆகஸ்ட் மாதம், பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். 

எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து மிகவும் வேதனையடைந்ததால் தன்னுடைய எண்ணங்களை விடியோவாக வெளியிட்டார் இளையராஜா. அதில் அவர் கூறியதாவது:

பாலு, சீக்கிரமாக எழுந்து வா. உனக்காகக் காத்திருக்கிறேன். நம்முடைய வாழ்வு வெறும் சினிமாவோடு முடிந்து போவதில்லை. சினிமாவோடு தொடங்கியதுமில்லை. எங்கேயோ ஒரு மேடை கச்சேரிகளில் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த அந்த இசை நிகழ்ச்சி. அந்த இசை நமது வாழ்வாகவும் நமக்கு முக்கியமான வாழ்வுக்கு ஆதாரமாகவும் அமைந்தது.

அந்த மேடை கச்சேரிகளில் ஆரம்பித்தது நமது நட்பும் இசையும். இசை எப்படி சுவரங்களை விட்டு ஒன்றோடு ஒன்று பிரியாமல் இருக்கிறதோ, அதுபோல உன்னுடைய நட்பும் என்னுடைய நட்பும். நமது நட்பு எந்தக் காலத்திலும் பிரிந்தது இல்லை. நாம் சண்டை போட்டாலும் சரி. நமது இருவருக்குள்ளும் சண்டை இருந்தாலும் அது நட்பே, சண்டை இல்லாமல் போன போதும் அது நட்பே என்பதை நீயும் நன்றாக அறிவாய், நானும் நன்றாக அறிவேன்.

அதனால் இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன். நீ நிச்சயமாகத் திரும்பி வருவாய் என்று என் உள்ளுணர்வு சொல்லுகிறது. அது நிஜமாக நடக்கட்டும் என்று இறைவனை நான் பிரார்த்திக்கிறேன். பாலு சீக்கிரம் வா என்று பேசினார்.

ஆகஸ்ட் 20: எஸ்.பி.பி.க்காகக் கூட்டுப் பிரார்த்தனை: இளையராஜா வேண்டுகோள்

பாடகர் எஸ்.பி.பி. உடல்நலம் பெற அனைவரும் ஆகஸ்ட் 20, மாலை 6 மணிக்குக் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இளையராஜா வேண்டுகோள் விடுத்தார். 

இதுகுறித்து வெளியிட்டுள்ள விடியோவில் அவர் கூறியதாவது: 

மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி.க்காக நடைபெறுகிற கூட்டுப் பிரார்த்தனையில் நீங்கள் அனைவரும் கலந்துகொண்டு பிரார்த்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

செப்டம்பர் 9: இளையராஜா இசையமைக்கும் படத்தில் ஷ்ரேயா சரண், நித்யா மேனன்

இளையராஜா இசையமைப்பில் கமனம் என்கிற படம் உருவாகியுள்ளது.

ஷ்ரேயா சரண், நித்யா மேனன் நடிப்பில் கமனம் என்கிற படத்தை சுஜானா ராவ் இயக்கியுள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளிவரவுள்ளது. கமனம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதனால் விரைவில் இப்படம் வெளிவரவுள்ளது. ஒளிப்பதிவு - ஞானசேகர். சமீபத்தில் ஷ்ரேயா சரண் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியானது. தற்போது, நித்யா மேனன் நடிக்கும் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தும் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கர்நாடக இசைக் கலைஞர்கள் பற்றிய படம் என்பதால் இளையராஜாவின் பாடல்கள் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர் 25: எஸ்.பி.பி. மறைவுக்கு உருகிய இளையராஜா


 

 

எஸ்.பி.பி. மறைவுக்குப் பிறகு உருக்கமான விடியோ ஒன்றை இளையராஜா வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:

பாலு, சீக்கிரம் எழுந்து வா.. உன்னைப் பார்க்க நான் காத்திருக்கிறேன் என்று சொன்னேன். நீ கேட்கலை. போயிட்ட. எங்க போன? கந்தர்வர்களுக்காகப் பாட போய்ட்டியா? இங்க உலகம் ஒரே சூன்யமாகப் போச்சு. உலகத்துல ஒன்றுமே எனக்குத் தெரியல. பேசுறதற்குப் பேச்சு வரல. சொல்றதுக்கு வார்த்தை இல்ல. என்ன சொல்றதுன்னே தெரியல. எல்லாத் துக்கத்துக்கும் ஒரு அளவு இருக்கு. இதுக்கு அளவு இல்லை என்றார்.

செப்டம்பர் 26: மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா

எஸ்.பி.பி.யின் ஆத்மா சாந்தி அடைய திருவண்ணாமலைக்குச் சென்ற இளையராஜா, மோட்ச தீபம் ஏற்றினார்.

அக்டோபர் 12: திரைப்படமாகும் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை: இளையராஜா இசையமைக்கிறார்
 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை, தேசிய தலைவர் என்கிற பெயரில் படமாக உருவாகவுள்ளது. இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ட்ரென்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம்டி சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில், இந்தப்படத்தை ஜெ.எம்.பஷீர் மற்றும் ஏ.எம்.சௌத்ரி இணைந்து தயாரிக்கின்றனர்.

தேவர் கதாபாத்திரத்தில் ஜெ.எம். பஷீர் நடிக்கிறார்.. இஸ்லாமியரான இவர் இந்தப்படத்திற்காக 48 நாட்கள் விரதமிருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை, ஊமை விழிகள், உழவன் மகன், கருப்பு நிலா என விஜயகாந்த் நடித்த வெற்றிப் படங்களை தந்த அரவிந்தராஜ் இயக்குகிறார். மறைந்த பிரபல நடிகரும் பசும்பொன் தேவருடன் இணைந்து பயணித்தவருமான லட்சிய நடிகர் எஸ்எஸ்.ராஜேந்திரனின் மகன் எஸ்.எஸ்.ஆர். கண்ணன் இந்தப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் உறுதுணை வகித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

இப்படம் பற்றி இயக்குனர் அரவிந்தராஜ் கூறியதாவது: 

இந்தப் படத்திற்கு இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என்பதில் நான் தீவிரமாகவே இருந்தேன். காரணம் ஏற்கனவே புகழ்பெற்ற, போற்றிப் பாடடி பெண்ணே பாடலை மிஞ்சும் விதமான ஒரு பாடலை தர அவரால் மட்டும்தான் முடியும்.. இத்தனை வருடங்களில் அவருடன் நான் இணைந்து பணியாற்றும் முதல் படம் இதுதான். இந்தப் படத்தில் நீங்கள் இசையமைக்க ஒப்புக்கொண்டால் அதுவே எனக்கு 60 சதவீத வெற்றி என அவரிடம் கூறினேன். அவரும் புன்னகைத்தபடியே, “இனி வரும் நாட்களில் எங்கெங்கும் தேவர் பற்றிய புகழ் பாடப்பட வேண்டும் என்றால் அது இந்த படத்தின் பாடல்களாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அளவுக்கு சிறப்பாக பாடல்களை உருவாக்கி தருகிறேன் என உறுதியளித்தார் என்றார்.

நவம்பர் 29: கார்த்திகை தீபத் திருவிழா - திருவண்ணாமலை கோயிலில் இளையராஜா சாமி தரிசனம்

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார் இளையராஜா. மலை மீது ஏற்றப்பட்ட மகா தீப திருவிழா நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். 

டிசம்பர் 28: மன உளைச்சலில் இளையராஜா: பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து

பிரசாத் ஸ்டூடியோ விவகாரம் தொடர்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் இளையராஜா தாக்கல் செய்த மனுவில், பிரசாத் ஸ்டுடியோவில், திரைப்படங்களுக்காக நான் கைப்பட எழுதிய இசைக் கோப்புகள், இசைக் கருவிகள், எனக்கு கிடைத்த விருதுகள் உள்ளன. அவற்றை எடுத்துக் கொள்ளவும், தியானம் செய்யவும் அனுமதி வழங்க ஸ்டுடியோ உரிமையாளா்களுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு விசாரணையின் போது, இளையராஜா தன்னுடைய பொருள்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறி அதற்காக ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்கக் கோரி உரிமையியல் வழக்குத் தொடா்ந்துள்ளாா். மேலும் பிரசாத் ஸ்டுடியோவுக்கு இளையராஜா வருகிறாா் என்ற தகவல் வெளியானால், அங்கு ரசிகா்கள் குவிந்து விடுவாா்கள். எனவே, இதன் காரணமாக இளையராஜாவை ஸ்டுடியோவுக்குள் அனுமதிக்க முடியாது என பிரசாத் ஸ்டுடியோ நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இருதரப்பும் சமரசமாக போகும் பட்சத்தில், இளையராஜாவுடன், நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் வழக்குரைஞா் ஆணையா், இருதரப்பு வழக்குரைஞா்கள் ஆகியோரை பொருள்களை எடுக்க ஒருநாள் ஸ்டுடியோ வளாகத்துக்குள் அனுமதித்தால் என்ன என கேள்வி எழுப்பி, இதுதொடா்பாக இருதரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்து. அதனைத் தொடா்ந்து இருதரப்பிலும் சம்மதம் தெரிவித்து மனுதாக்கல் செய்தனா்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் மூத்த வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் மூத்த வழக்குரைஞா் பி.எச்.அரவிந்த்பாண்டியன் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த பிரசாத் ஸ்டுடியோ அரங்கத்தில் இளையராஜாவை ஒருநாள் அனுமதிக்க வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இளையராஜா அங்கு இருக்கலாம். அதே நேரம் அங்குள்ள பொருள்களை எடுத்துக் கொள்வதோடு, தியானமும் செய்யலாம். மாலை 4 மணிக்கு மேல் அங்கு இருக்கக்கூடாது. இளையராஜா அங்கு இருக்கும் போது வேறு யாரும் செல்லக்கூடாது. இருதரப்பினரும் ஒருவரோடு ஒருவா் பேசிக் கொள்ளக்கூடாது. இவற்றைக் கண்காணிக்க வழக்குரைஞா் வி.லட்சுமிநாராயணன், வழக்குரைஞா் ஆணையராக நியமிக்கப்படுகிறாா் என உத்தரவிட்டாா்.

இரண்டு தரப்பினரும் இவரிடம் தான் பேசிக் கொள்ள வேண்டும். இளையராஜா எந்த நாளில் அங்கு செல்கிறாா் என்பது குறித்து இருதரப்பு வழக்குரைஞா்களும் பேசி முடிவு செய்ய வேண்டும். இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவுக்கு செல்லும் நாளில் உரிய போலீஸ் பாதுகாப்பை சென்னை மாநகர ஆணையா் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.

டிசம்பர் 28, காலை 9 மணியளவில் இளையராஜா பிரசாத் ஸ்டியோவுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து தனது பொருள்களையெல்லாம் எடுத்துக்கொண்டு, தியானம் செய்துவிட்டு பிரசாத் ஸ்டுடியோவை இளையராஜா காலி செய்வாா் என எதிா்பாா்க்கப்பட்டது. இதனால் காவல் துறையினா், பத்திரிகையாளா்கள் ஸ்டுடியோவில் குவிந்தனா். ஆனால், திட்டமிட்டபடி இளையராஜா வரவில்லை.

இளையராஜா தரப்பிலும், பிரசாத் ஸ்டுடியோ தரப்பிலும் வழக்கறிஞா்கள் வந்தனா். இளையராஜா மன உளைச்சலில் இருப்பதால், இன்று அவா் வரவில்லை என்று அவருடைய செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா். முதலில், இளையராஜா அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்த தகவல், அவருக்குச் சொல்லப்பட்டது. இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்ததால் அவா் வரவில்லை எனத் தெரிகிறது. பிறகு, இளையராஜா தனது ஸ்டுடியோவைக் காலி செய்தார். இரு லாரிகளில் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

ஜனவரி 3: கைவிடப்பட்டது பாரதிராஜா - இளையராஜா படம்

பாரதிராஜா - இளையராஜா கூட்டணியில் உருவாகவிருந்த ஆத்தா படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: 

என் இனிய தமிழ் மக்களே... 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய கதை ஆத்தா. முன்பே இந்தக் கதையைப் படமாக்கியிருந்தால் உங்கள் பாரதிராஜாவைக் கண்டிருக்கலாம். காலசூழ்நிலை ஒன்று உள்ளது. நடைமுறை நவீன முற்போக்கான இந்தk காலகட்டத்தில் வந்த பல சினிமாக்களின் கருவை நாடியுள்ளது ஆத்தா. இதை மீண்டும் கையில் எடுத்தால் பொருள் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் பெரும் நட்டம் ஏற்படும் என்ற காரணத்தினால்,ஆத்தா கைவிடப்படுகிறது. புதிய அறிவிப்பு, புதிய தலைப்புடனும் புதிய தொழில்நுட்ப கூட்டணியுடன். மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

ஜனவரி 18: பத்ம விபூஷன் விருதைத் திருப்பித் தரப்போவதில்லை - இளையராஜா விளக்கம்

பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக பத்ம விபூஷண் விருதை திருப்பி அளிக்கவுள்ளதாக வெளியான தகவல்களை இளையராஜா மறுத்தார். இதுபற்றி வெளியிட்ட விடியோவில் இளையராஜா தெரிவித்ததாவது:

நான் சொல்லாத ஒரு கருத்தை, ஒரு தனிப்பட்ட நபர்களுடைய கருத்தை நான் சொன்னதாக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறு என சொல்லிக் கொள்கிறேன். அப்படி, ஒரு கருத்தை நான் வெளியிடவே இல்லை எனவும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

ஜனவரி 31: இளையராஜாவின் ஆஸ்தான இசைக்கலைஞர் சசிதரன் காலமானார் 

படம் -facebook.com/napols8

இளையராஜாவின் ஆஸ்தான இசைக்கலைஞரான சசிதரன் காலமானார்.

இளையராஜா மனைவியின் சகோதரரும் இசைக் கலைஞருமான சசிதரன், இளையராஜாவின் பெரும்பாலான பாடல்களுக்கு பாஸ் கிடார் வாசித்துள்ளார். இந்நிலையில் ஜனவரி 31 அன்று சசிதரன் காலமானார். இதையடுத்து திரை இசைக் கலைஞர்கள் பலரும் சசிதரனின் மறைவுக்குச் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்தார்கள். 

பிப்ரவரி 3: இளையராஜா ஸ்டூடியோ திறப்பு, வெற்றிமாறன் படத்துக்கு முதலில் ஒலிப்பதிவு

படங்கள் - twitter.com/idiamondbabu

புதிய ஸ்டூடியோவில் வெற்றிமாறன் இயக்கும் படத்துக்கான இசைப்பணிகளைத் தொடங்கினார் இளையராஜா.

40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில் இளையராஜாவின் ஸ்டுடியோ செயல்பட்டு வந்தது. அங்குதான் அவரின் இசைப் பயணம் நடந்து வந்தது. பிரசாத் ஸ்டுடியோ வளாகத்திலிருந்து இளையராஜா இடம் மாற வேண்டும் என்று ஸ்டுடியோ நிா்வாகம் தெரிவித்தது. இதனைத் தொடா்ந்து, பிரசாத் ஸ்டுடியோ நிா்வாகத்துக்கும், இளையராஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தனது அறையில் இருந்து தான் எழுதிய இசைக் கோா்ப்புகள், இசைக் கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருள்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும், அங்கு ஒரு நாள் தியானம் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்று இளையராஜா சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு விசாரணையின்போது முதலில் ஆட்சேபம் தெரிவித்த பிரசாத் ஸ்டுடியோ நிா்வாகம், பின்னா் சில நிபந்தனைகளுடன் இளையராஜாவை அனுமதிக்க சம்மதம் தெரிவித்தது. ஒரு நாள் மட்டும் காலை 9 மணி முதல் 4 மணிக்குள் பிரசாத் ஸ்டுடியோவிற்குள் சென்று தியானம் செய்யவும், உடைமைகளை எடுத்துவரவும் இளையராஜாவிற்கு அனுமதி அளித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இளையராஜாவுடன் அவரது ஓா் உதவியாளா் மற்றும் இரண்டு இசை உதவியாளா்கள் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டது. தனது பொருள்களையெல்லாம் எடுத்துக்கொண்டு, தியானம் செய்துவிட்டு பிரசாத் ஸ்டுடியோவை இளையராஜா காலி செய்வாா் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், தனது அறையின் பூட்டு உடைக்கப்பட்டதால் அதிா்ச்சியடைந்தார் இளையராஜா. இதனால் பிரசாத் ஸ்டூடியோவுக்கு அவர் செல்லவில்லை. ஸ்டுடியோவைக் காலி செய்து 2 லாரிகளில் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டன. 

இதையடுத்து சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றைத் தொடங்கியுள்ளார் இளையராஜா. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம். பிரிவியூ திரையரங்கில் இளையராஜாவின் புதிய ஸ்டூடியோ அமைந்துள்ளது. 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்துக்கான இசைப்பணிகளைத் தனது புதிய ஸ்டூடியோவில் தொடங்கினார் இளையராஜா. ஸ்டூடியோவின் தொடக்க நாளன்று வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி போன்றோர் பங்கேற்றார்கள்.

பிப்ரவரி 3: இன்றைய படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லாததற்கு அப்பாடல்களே காரணம் - இளையராஜா
 

இளையராஜா ஸ்டூடியோவின் தொடக்க நாளன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இளையராஜா பேசியதாவது:

ஸ்டூடியோக்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கிற பட்டியலில் பிரசாத் ஸ்டூடியோவும் சேரவேண்டும் என்று நான் வெளியே வந்துவிட்டேன். என் சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தை வைத்து இந்த இடத்தை வாங்கி ஸ்டூடியோவை இப்போது ஆரம்பித்துள்ளோம். வெற்றிமாறனின் புதிய படத்துக்காக பாடல் பதிவுடன் ஆரம்பமாகியுள்ளது. இன்னும் சில வேலைகள் உள்ளதால் அடுத்த ஒரு வாரத்தில் ஸ்டூடியோ முழு வீச்சில் இயங்கும். 

இன்று எது நவீனத்துவமோ அந்த நவீனத்துவம் ஸ்டூடியோவில் உள்ளது.

பிரசாத் ஸ்டூடியோவை விட்டு புதிய ஸ்டூடியோவை ஆரம்பித்துள்ளது குறித்து வருத்தம் உள்ளதா எனக் கேட்கிறீர்கள். நடந்த வாழ்க்கைக்கு வருத்தப்படுவோமா? அதற்கு வருத்தப்பட்டு இன்று வேலை செய்வோமா? அது அது வருகிறது, போகிறது.... அப்படித்தான். போய்க்கொண்டே இருக்கிறோம்... மழை பெய்கிறது, காக்கை எச்சில் போடுகிறது, என்ன செய்வீர்கள்? எல்லாம் எதிர்கொள்ள வேண்டும். எல்லாம் சவால் தான். முன்னேறுகிறவனைத் தடுப்பதற்கு எவ்வளவோ இடைஞ்சல் வரும். நம் வேலையை முயற்சியுடன் செய்யும்போது நாம் அடைகிற இடமே வேறாக இருக்கும். 

இப்போதைய சினிமாவில் பாடல்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்றால் பாடல்கள் அப்படி இருக்கிறது. அதனால் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லை. பாடல் தான் முக்கியத்துவம் எடுக்க வேண்டும். பாடலுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க முடியாது. பாடல் உங்களைப் பிடித்து இழுக்க வேண்டும். வேண்டுமென்று பாடலைப் போட்டால் போட முடியாது என்றார்.

மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் இளையராஜா பேசியதாவது:

பிரசாத் ஸ்டூடியோவுக்குப் பிறகு வெளியே வந்த பிறகு எனக்கு ரெக்கார்டிங் தியேட்டர் தேவைப்பட்டதால் இந்த தியேட்டரை வாங்கி புதிய ஸ்டூடியோ இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இன்று பூஜை. உள்ளே சில வேலைகள் உள்ளதால் 7, 8 தேதிகளில் இருந்து இசையமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.  

மழை கொட்டும் நேரத்தில் கொட்டப் போகிறது. இசை எந்தெந்த இடத்தில் இருந்து எப்படி வருகிறதோ அப்படித்தான் வரும். நாங்கள் இசையமைப்பதைத்தான் ரசிகர்கள் கேட்டாக வேண்டும். அது தலையெழுத்து. மாற்ற முடியாது. எப்படி பாடல் தருவீர்கள் என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்? யாரால் சொல்ல முடியும்? மழை எப்போது வருகிறது என்று மழையிடம் கேட்க முடியுமா என்றார்.

பிப்ரவரி 16: இளையராஜா ஸ்டூடியோவில் ரஜினி 

இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்தார். அப்போது ரஜினி முன்பு, ஒரு படத்தின் ஒலிப்பதிவை நிகழ்த்திக் காட்டினார் இளையராஜா. இதன் விடியோ வெளியானது. 

ஏப்ரல் 7: இளையராஜா - யுவன் இசையமைத்த மாமனிதன்: தட்டிப்புட்டா பாடல் வெளியானது!

யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி. இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்கள். 

தட்டிப்புட்டா பாடல் இன்று வெளியானது. இளையராஜா பாடிய இப்பாடலை பா. விஜய் எழுதியிருந்தார்.

ஏப்ரல் 15: இளையராஜா இசையமைத்த மதுரை மணிக்குறவன் படப் பாடல், டீசர் வெளியீடு!

()

ஹரிகுமார், மாதவி லதா நடிப்பில் ராஜரிஷி இயக்கியுள்ள படம் - மதுரை மணிக்குறவன். தயாரிப்பு - ஜி. காளையப்பன். 

சுமன், சரவணன், ராதாரவி, ராஜ்கபூர் போன்றோரும் நடித்துள்ளார்கள். பாடல்கள் - முத்துலிங்கம். 

இளையராஜா இசையமைத்த இப்படத்தின் டீசரும் ஒரு பாடலின் விடியோவும் வெளியாகின. 

ஏப்ரல் 22: இளையராஜா இசையமைப்பில் வெற்றி மாறன் இயக்கும் விடுதலை - போஸ்டர் வெளியானது

இளையராஜா இசையமைப்பில் வெற்றி மாறன் இயக்கும் விடுதலை படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

அசுரன் படத்துக்குப் பிறகு சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றி மாறன். இதில் முதல்முறையாக இளையராஜாவுடன் இணைந்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம். பிரிவியூ திரையரங்கில் இளையராஜாவின் புதிய ஸ்டூடியோ அமைந்துள்ளது. இப்படத்துக்கான இசைப்பணிகளைத் தனது புதிய ஸ்டூடியோவில் தொடங்னார் இளையராஜா. ஸ்டூடியோவின் தொடக்க நாளன்று வெற்றி மாறன், சூரி, விஜய் சேதுபதி போன்றோர் பங்கேற்றார்கள். 

இந்நிலையில் சூரி கதாநாயகனாக நடிக்கும் வெற்றி மாறன் படத்துக்கு விடுதலை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. 

மே 4: இளையராஜா இசையமைத்த மருத படப் பாடல்கள் வெளியீடு

ராதிகா, விஜி, சரவணன், லவ்லின் நடிப்பில் ஜி.ஆர்.எஸ் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள மருத படத்தின் பாடல்கள் வெளியாகின.

மே 17: மதுரை மணிக்குறவன் பாடல்கள்

இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள மதுரை மணிக்குறவன் படப் பாடல்கள் அவருடைய யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளன. 

மே 28: இளையராஜா, யுவன் இசையமைத்த மாமனிதன்: 2-வது பாடல் வெளியானது!

மாமனிதன் படத்தில் இடம்பெற்றுள்ள ஏ ராசா என்கிற பாடல் இன்று வெளியானது. பா. விஜய் எழுதிய இப்பாடலின் விடியோவில் யுவன் சங்கர் ராஜா பாடி நடித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT