ஸ்பெஷல்

ஓடிடியில் வெளியாகும் விஜய்யின் மாஸ்டர் படம்: திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தி!

எழில்

திரையுலகுக்குப் புத்துணர்ச்சி அளித்ததாகப் பாராட்டப்படும் மாஸ்டர் படம், திரையரங்குகளில் வெளியான 16 நாள்களில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாவதால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியானது. 

மாஸ்டர் படம் வரும் வெள்ளியன்று (ஜனவரி 29) அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 13-ம் தேதி திரையரங்குகளில் திரையிடப்பட்ட மாஸ்டர் படம், அடுத்த 16 நாள்களில் ஓடிடியில் வெளியாகிறது. இதனால் இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

ஜனவரி 29 முதல் இந்தியா மற்றும் 240 நாடுகளில் மாஸ்டர் படத்தை ஓடிடியில் காண முடியும் என அமேசான் பிரைம் அறிவித்துள்ளது. 

ஜனவரி 13 அன்று மாஸ்டர் படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியானபோது பல தரப்புக்கும் மிகப்பெரிய உற்சாகத்தை அளித்தது. படத்துக்கு ரசிகர்கள் ஆதரவு தந்ததால் விஜய்க்கும் மாஸ்டர் படத் தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்தார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். மாஸ்டர் படத்துக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்டு பல படங்கள் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டன. இந்திய அளவில் மாஸ்டர் படம் வெளியானது. ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டது. கேரளாவில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டபோது முதலில் வெளியானதே மாஸ்டர் படம் தான். 

இந்நிலையில் படம் திரையரங்குகளில் வெளியான 16 நாள்களில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாவதாகக் கிடைத்த தகவல் திரையரங்கு உரிமையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

ஒரு படம் வெளியான மூன்றாவது வாரத்திலிருந்து தான் திரையரங்கு உரிமையாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் (அதே சமயம் தயாரிப்பாளருக்குக் குறைய ஆரம்பிக்கும்). முதல் இரு வாரங்களில் 70-%-30% (அல்லது ஒப்பந்தத்தில் உள்ளது போல) என்கிற அளவில் வருமானத்தை தயாரிப்பாளரும் திரையரங்கு உரிமையாளர்களும் பிரித்துக் கொள்வார்கள். அதாவது ரூ. 100 வருமானம் கிடைத்தால் அதில் ரூ. 70 தயாரிப்பாளருக்கும் ரூ. 30 திரையரங்கு உரிமையாளருக்கும் செல்லும். மாஸ்டர் படம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் படம், கட்டாயம் திரையரங்கில் வெளியிட வேண்டும் என்பதால் சில திரையரங்கு உரிமையாளர்கள் 80%-20% ஒப்பந்தத்துக்கும் சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது. மூன்றாவது வாரத்திலிருந்து திரையரங்கு உரிமையாளரின் பங்கு 10% அதிகமாகும். இதனால் ஓடிடியில் வெளியாகும் முன்பு வரும் நாள்களில் அதிக வருமானத்துக்காகக் காத்திருந்தார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.

மாஸ்டர் படத்தை ஓடிடியில் வெளியிடாமல் திரையரங்கில் வெளியிடுவதற்காக 10 மாதங்களாகக் காத்திருந்ததால் திரையரங்கு உரிமையாளர்களைக் காக்க வந்த பாதுகாவலனாகவே பலரும் விஜய்யைப் பார்த்தார்கள். ஆனால் ஒரே அறிவிப்பினால் மொத்த நிலைமையும் மாறிவிட்டது. நகரங்களில் இன்னமும் படத்துக்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகமாக உள்ள நிலையில், மூன்றாவது வாரத்திலிருந்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபம் அதிகமாகிற இந்தக் காலக்கட்டத்தில் திடீரென மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியாகும் என்கிற அறிவிப்பினால் கலங்கிப் போயிருக்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். 

ஓடிடி வெளியீடு குறித்து எங்களுக்குத் தெரியாது என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் பேட்டிகளில் கூறியுள்ளார். நேற்றிரவு, மாஸ்டர் ஓடிடி வெளியீடு தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்களிடையே ஒரு கூட்டம் நடைபெற்றுள்ளது. எனினும் மாஸ்டர் படக்குழுத் தரப்பில் சாதகமாகப் பதில் கிடைக்காததால் திரையரங்கு உரிமையாளர்களின் கூட்டத்தில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. 20 நாள்களுக்குள் படம் ஓடிடியில் வெளியாகும் எனத் தெரிந்திருந்தால் வேறு வகையில் வியாபாரம் பேசியிருப்போம் எனத் திரையரங்கு உரிமையாளர்கள் தங்களுடைய ஆதங்கத்தைத் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்கள். இன்னும் 10 நாள்கள் அல்லது இரு வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிடப்பட்டிருந்தால் யாருக்கும் எந்தப் புகாரும் இருந்திருக்காது என திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது. 

எனினும் அமேசான் தரப்பில் மாஸ்டர் படத் தயாரிப்பாளருக்கு அளித்த பெரும் தொகை காரணமாகவே 16 நாள்களில் ஓடிடியில் வெளியிடுவது என்கிற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்களின் வருத்தங்களுக்குத் தற்போதைக்குத் தீர்வு எதுவும் இல்லை.

ஓடிடி வெளியீடு தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் சில முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று, மாஸ்டர் என தமிழ்த் திரையுலகில் ஓடிடி நிறுவனங்கள் ஒரு பெரிய மாற்றத்தையும் பல விவாதங்களையும் கிளப்பியுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT