ஸ்பெஷல்

பிக் பாஸ்: வெற்றியாளர் ஆகிறாரா ஆரி?

5th Jan 2021 04:11 PM | எழில்

ADVERTISEMENT

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டத்தை நடிகர் ஆரி வெல்வதற்கான சூழல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம் ஷெட்டி, பாலா, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ரேகா, ரியோ, சம்யுக்தா என 16 பேர் பிக் பாஸ் இல்லத்துக்குள் முதலில் நுழைந்தார்கள். பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா மற்றும் பிரபல பாடகி மற்றும் ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா ஆகியோர் வைல்ட் கார்ட் வழியாகப் புதிய போட்டியாளர்களாக நுழைந்தார்கள். 

ADVERTISEMENT

இன்னும் இரு வாரத்தில் பிக் பாஸ் போட்டி முடிவடையவுள்ளது. ஆரி, பாலா, ரம்யா பாண்டியன், சோம், ஷிவானி, கேப்ரியலா, ரியோ என ஏழு பேர் போட்டியாளர்களாக உள்ளார்கள். 

இந்நிலையில் மக்களின் ஆதரவு பெற்றவராக இருப்பதால் இந்தமுறை பிக் பாஸ் பட்டத்தை நடிகர் ஆரி எளிதாக வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கேற்றாற் போல கமல் ஹாசனும் ஆரிக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கடந்த வார இறுதி நிகழ்ச்சியில் எடுத்தார். 

கடந்த சனிக்கிழமை, பாலா உள்பட போட்டியாளர்கள் அனைவரும் ஆரிக்கு எதிராக நடந்துகொள்வது குறித்து விவாதித்தார் கமல். அப்போது ஆரிக்கு ஆதரவாக கமல் பேசியது போட்டியாளர்களை ஆச்சர்யப்படுத்தியது. ஃபிரீஸ் டாஸ்க்கில் இல்லத்துக்குள் குடும்பத்தினர் வந்தபோது அனைவருமே ஆரிக்கு ஆதரவாகப் பேசியது பற்றி என்ன நினைக்கிறீர்கள், இதன் உட்கருத்து உங்களுக்குப் புரிகிறதா என்கிற கேள்வியைக் கேட்டார் கமல். தினமும் நாங்கள் பார்க்கும் ஆரியை மக்கள் பார்ப்பதில்லையோ என்று போட்டியாளர்கள் சிலர் பதில் அளித்தார்கள். இதனால் ஆரிக்கு உள்ள மக்கள் ஆதரவை அவர்கள் அறியாமல் இருப்பது எளிதாகத் தெரிந்தது. 

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியபோது நடிகை ரம்யா பாண்டியனே மக்களின் ஆதரவு பெற்றவராக இருந்தார். போட்டியாளர்கள் பலரும் ரம்யாவையே தங்களுக்குச் சவால் அளிக்கும் போட்டியாளராக எண்ணினார்கள். ஆனால் நாள்கள் செல்லச் செல்ல ஆரி, மக்கள் மனத்தை வெல்லக் கூடியவராக இருந்தார். அவருடைய நேர்மையான செயல்களை பல முறை கமல் பாராட்டினார். பாலாவுடனான மோதல்களும் போட்டியாளர்களுடன் தனி ஆளாகப் போராடுவதும் எந்தக் குழுவிலும் இணையாததும் அவர் மீது மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தின. இதனால் பிக் பாஸ் இல்லத்துக்குள் போட்டியாளர்களின் எதிர்ப்பை அவர் தொடர்ந்து சந்தித்தாலும் வெளியே மக்களின் ஆதரவு அவருக்கு அதிகமானது. போட்டியாளர்கள் மீது அதிகக் குற்றச்சாட்டுகளை வைக்கிறார் என்பது ஆரியின் பலவீனமாகச் சொல்லப்பட்டாலும் பிக் பாஸ் இல்லத்துக்கு வெளியே இந்தப் புகார் பெரிதாக எடுபடவில்லை.

இதனால் தான் கடந்த வாரம் பிக் பாஸ் இல்லத்துக்குள் நுழைந்த போட்டியாளர்களின் குடும்பத்தினர், ஆரி மீதான தங்களது மரியாதையை வெளிப்படுத்தினார்கள். அதுவரை ஆரி பற்றிய மக்களின் எண்ணங்களைத் தெரியாமல் இருந்த போட்டியாளர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. ஆரியை ஒவ்வொரு வாரமும் வெளியேற்றத் துடிப்பது ஏன், அவர் என்ன தவறு செய்தார் என்று ஷிவானியின் தாயார், தன் மகளிடம் கேட்டது ஓர் உதாரணம். இதனால் தான் கமலும் வார இறுதியில் ஆரிக்கு ஆதரவாகப் பேசி, போட்டியாளர்களுக்குக் கள நிலவரத்தைத் தெரியப்படுத்தினார்.

இன்னும் இரு வாரங்களில் அதாவது  ஜனவரி 17 அன்று பிக் பாஸ் 4 பருவம் முடிவடைகிறது. இந்த வாரம், இறுதி வாரத்துக்கு நேரடியாகத் தகுதி பெறுவதற்கான போட்டி நடைபெறுகிறது. தற்போதைய சூழலில் அடுத்த வாரத்துக்கு மிக எளிதாக ஆரி தகுதி பெறுவார் என்று தெரிகிறது. நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு அதிகரித்து வருவதால் இன்றைய தேதியில் பிக் பாஸ் பட்டத்தை வெல்லக் கூடியவராக அனைவரும் எதிர்பார்ப்பது ஆரியை மட்டுமே. ரம்யா பாண்டியனும் பாலாவும் ஆரிக்குச் சவாலாக விளங்கினாலும் இறுதிக்கட்டத்தைத் தாண்டும் அளவுக்கு அவர்களால் அதிசயத்தை நிகழ்த்த முடியுமா என்கிற கேள்வியும் எழுகிறது. 

ஆனால், ஒரு போட்டியின் முடிவு இவ்வளவு சுலபமாக முடிந்து விடுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 2-ம் பருவத்தில் தான் அனைவரும் எதிர்பார்த்தது போல நடிகை ரித்விகா வென்றார். முதல் பருவத்தை ஆரவும் 3-ம் பருவத்தை முகெனும் வென்றது யாரும் எதிர்பாராத முடிவுகள்.

ஆரியைத் தவிர வேறு யார் பிக் பாஸ் பட்டத்தை வெல்ல நினைத்தாலும் அதற்காக வரும் நாள்களில் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டாக வேண்டும். மக்களின் ஆதரவைப் பெற விசேஷமாக ஏதாவது செய்தாக வேண்டும். மீதமுள்ள 10 நாள்களில் இந்த அதியசத்தை யார் நிகழ்த்தப் போகிறார்கள்? ஆரியைத் தாண்டிச் சென்று பிக் பாஸ் பட்டத்தை வெல்லும் சக்தி யாரிடம் உள்ளது? பிக் பாஸ் 4-ன் முடிவு ஆச்சயம் அளிக்குமா அல்லது மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா?

Tags : Bigg Boss Tamil aari arjuna
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT