ஸ்பெஷல்

அரங்குகளில் திரைப்படங்கள் வெளியாகாத தீபாவளி 2020?

29th Oct 2020 11:31 AM | டி. குமார்

ADVERTISEMENT

 


கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் இறுதி வாரம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் திரையரங்குகள் மூடப்பட்டன. நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் தீபாவளியன்று வெளியாகின்றன. இந்த நிலையில் கடந்த 89 ஆண்டுகளில் தீபாவளியன்று திரையரங்குகளில் தமிழ்த் திரைப்படம் எதுவும் வெளியாகாத ஆண்டாக 2020 இருக்கப் போகிறதா என்கிற அச்சம் சினிமா ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்பட உலகின் முதல் பேசும் படமான காளிதாஸ் (1931) தொடங்கி கடந்த ஆண்டு இரண்டே நாள்களில் நூறு கோடி வசூல் சாதனை செய்த பிகில் (2019)  வரை தீபாவளிக்கு வெளியான திரைப்படங்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளன. புத்தாடை, பட்டாசு, இனிப்புகளுடன் தீபாவளி பண்டிகை தினத்தில் வெளியாகும் திரைப்படத்தைப் பார்த்து விடுவதும் தீபாவளி கொண்டாட்டமாகவே கருதப்படுகிறது. தீபாவளியன்று வெளியாகும் தங்களது ஹீரோக்களின் திரைப்படங்களைக் காண அதிகாலையிலேயே திரையரங்குக்கு வரும் ரசிகர்களின் அலப்பறைகள் தீபாவளி பண்டிகையையே திணறடிக்கும். தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக இருந்து வந்த பி.யூ.சின்னப்பா - தியாகராஜ பாகவதர் தொடங்கி, எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜீத் உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்களுக்கு தீபாவளி ஹிட் திரைப்படங்கள் ரசிகர்களிடையே தனி அந்தஸ்தைப் பெற்றுத் தந்துள்ளன. 

ரஜினி - கமல் போட்டி

ADVERTISEMENT

கடந்த 1983-ஆம் ஆண்டு தீபாவளியில் இருந்து பண்டிகை நாள்களில் ரஜினி - கமல் திரைப்பங்கள் வெளியாகும் போட்டி தொடங்கியுள்ளது. அந்த ஆண்டு வெளியான ரஜினியின் தங்கமகன், கமலின் தூங்காதே தம்பி தூங்காதே இரண்டு திரைப்படங்களும் நூறு நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தன. 1985-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான ரஜினியின் படிக்காதவன், 1986-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான கமலின் புன்னகை மன்னன் திரைப்படங்கள் நூறு நாள்களைக் கடந்து வெற்றி பெற்றன. அதே போன்று 1987-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான ரஜினியின் மனிதன், கமலின் நாயகன் திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டன. 1989-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான ரஜினியின் மாப்பிள்ளை, கமலின் வெற்றி விழா திரைப்படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. 1991-ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் தளபதி வசூலை வாரிச் சுருட்டி வெற்றி கண்ட நிலையில், கமலின் குணா திரைப்படம் அவரது நடிப்பாற்றலுக்கு பலம் சேர்க்கும் படமாக அமைந்தது.

தமிழ்த் திரையுலகம் மறவா 1992-ஆம் ஆண்டு

1992-ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரஜினியின் பாண்டியன், கமலின் தேவர் மகன், கே.பாக்யராஜின் ராசுக்குட்டி, பிரபுவின் செந்தமிழ்ப்பாட்டு, விஜயகாந்தின் காவியத் தலைவன், சத்யராஜின் திருமதி பழனிச்சாமி உள்பட பல திரைப்படங்கள் வெளியாயின. தேவர் மகன் திரைப்படம் கமலின் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. மேலும் அந்த ஆண்டு முழுவதும் வெளியான திரைப்படங்கள் வசூலித்த  ரூ.76 கோடியில் பாதி தீபாவளித் திரைப்படங்கள் மூலம் கிடைத்ததாக கூறப்படுகிறது.

விஜய் - அஜித்

ரஜினி - கமலைத் தொடர்ந்து கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் விஜய் - அஜித்தின் திரைப்படங்களும் தீபாவளிக்கு வெளியாகின. அந்த ஆண்டு விஜய் நடித்த பகவதி, அஜித் நடித்த வில்லன் திரைப்படங்கள் வெளியாகின. 2003-ஆம் ஆண்டு தீபாவளிக்கு விஜயின் திருமலை, அஜித்தின் ஆஞ்சநேயா வெளியாயின. 2005-ஆம் ஆண்டு தீபாவளிக்கு விஜய்யின் சிவகாசி, 2006-ஆம் ஆண்டு தீபாவளிக்கு அஜித்தின் வரலாறு திரைப்படங்களும் வெளியாயின. 2007-ஆம் ஆண்டு தீபாவளிக்கு விஜய்யின் அழகிய தமிழ்மகன், 2012-ஆம் ஆண்டு தீபாவளிக்கு விஜய்யின் துப்பாக்கி திரைப்படம் வெளியானது. 2013-ஆம் ஆண்டு தீபாவளிக்கு அஜித்தின் ஆரம்பம் உள்ளிட்ட திரைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தன.

1944-ஆம் ஆண்டு வெளியாகி 1945, 1946 என 3 ஆண்டுகள் ஓடிய ஹரிதாஸ், இசைமேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த மீரா,  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தி, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் ரத்தக்கண்ணீர், இளையராஜாவின் நூறாவது படமான மூடுபனி, மணிவண்ணன் இயக்குநராக அறிமுகமான கோபுரங்கள் சாய்வதில்லை, விஜயகாந்துக்கு பெரும்புகழைத் தேடி தந்த வைதேகி காத்திருந்தாள், பாரதிராஜா, வைரமுத்து, ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவான கிழக்குச் சீமையிலே, ஷங்கரின் முதல்வன், ஏ.ஆர்.முருகதாஸின் ரமணா, பாலாவின் பிதாமகன், வெற்றிமாறனின் பொல்லாதவன், பிரபு சாலமனின் மைனா, சுசீந்திரனின் பாண்டியநாடு, லோகேஷ் கனகராஜின் கைதி, அட்லியின் பிகில் உள்பட அனைத்துமே தீபாவளிக்கு வெளியான திரைப்படங்கள் தான்.

Tags : Deepavali movie release
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT