திரை விமரிசனம்

’சர்தார்’ வெறும் உளவாளியா.. அசாதாரண உளவாளியா? - திரை விமர்சனம்

21st Oct 2022 12:48 PM | சிவசங்கர்

ADVERTISEMENT

கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் எப்படி இருக்கிறது?

‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் இந்திய உளவுத் துறையின் உளவாளியாக கார்த்தி நடித்திருக்கும் திரைப்படம் சர்தார்.

இந்தியாவில் 'ஒரே நாடு, ஒரே குழாய்’ மூலம் தண்ணீர் விநியோகம் செய்யும் திட்டத்தை மறைமுகமாக செயல்படுத்த முயற்சி நடக்கிறது. இதனால், தண்ணீர் முழுக்கத் தனியார்மயமானால் என்னென்ன விளைவுகளை மக்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்கிற கருவை எடுத்துக்கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார் பி.எஸ். மித்ரன்.

தமிழக காவல்துறையில் சூப்பர் காவலராக இருக்கும் விஜய்பிரகாஷ் (கார்த்தி) எந்த வழக்காக இருந்தாலும் திறம்பட முடித்துக்கொடுப்பதுடன் தன்னைப் பற்றிய 'நல்ல’ பிம்பம் வெளியே தெரிய வேண்டும் என்பதிலும் அதிக கவனத்துடன் இருக்கும் அதிகாரி.  அப்படி எதிர்பாராத விதமாக ஒரு வழக்கைக் கையில் எடுக்கிறார். யாரோ ஒருவர் உளவுத்துறையின் முக்கிய கோப்பு ஒன்றை திருடிச் செல்கிறார். அந்தக் ஆவணம் யாரைப் பற்றியது? எதற்காக இந்தத் திருட்டு என்கிற கேள்விகளோடு கதை துவங்குகிறது.

ADVERTISEMENT

அதற்கு முன், 1988 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் வைத்து இந்திய பாதுகாப்பு ஆலோசகரை உளவுத் துறையின் மிகச்சிறந்த உளவாளியான சர்தார் (கார்த்தி) சுட்டுக்கொல்கிறார். இதனால், சர்தாரை இந்திய அரசு தேசத்துரோகியாக அறிவிக்கிறது. அதன் பின், சர்தார் இந்தியாவிற்குள் வராமல் தானாகவே ஒரு பிரச்னையில் சிக்கிக்கொண்டு சிறைக்குச் செல்கிறார். பின், 32 ஆண்டுகள் கழித்து சர்தார் அங்கிருந்து தப்பித்துச் செல்கிறார். 

ஏன் இத்தனை ஆண்டுகள் கழித்து சர்தார் தப்பிக்க வேண்டும்? விஜய்பிரகாஷ் தேடிச்செல்லும் ஆள் யார் என்பது மீதிக் கதை.

இதையும் படிக்க: 'பிரின்ஸ்' திரை விமர்சனம்: நகைச்சுவை என்ன விலை?

உளவாளியாக சர்தார் சண்டையிடும் காட்சிகள் அதிரடியாக உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, படத்தின் இரண்டாம் பாதியில் காட்சிப்படுத்தப்பட்ட, 1980-களில் நடைபெறும் பிளாஷ்பேக் காட்சிகளும் ரஷிதா விஜயன் கார்த்தியை காதலிக்கும் காட்சிகளும் ரசிக்கும்படியாக படமாக்கப்பட்டுள்ளன. 

’சிறுத்தை’ படத்திற்குப் பின் நேருக்கு நேர் சந்திக்கும் இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்திருக்கிறார். ஆனால், வயதான சர்தார் கதாபாத்திர தோற்றத்தில் சண்டைக்காட்சியின்போது உடல்மொழியில் இளம் கார்த்தியே தென்படுகிறார்.

மேலும், படம் முழுக்க சில நல்ல காட்சிகள் இருந்தாலும் பொறுமையைச் சோதிக்கும் திரைக்கதை, படத்தின் நீளம், கிளைமாக்ஸ் காட்சிகளில் அதிகப்படியான சினிமாத்தனம் ஆகியவை பொறுமையைச் சோதிக்கின்றன.

ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் சர்தார் வரும் காட்சிகளில் பின்னணி இசை நன்றாக இருந்தாலும் பாடல்களில் கவனம் செலுத்தவில்லை.

இதையும் படிக்க: இளம்பெண்ணை  சின்னத்திரை நடிகர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக தகவல்

பிரபல யூடியூபர் ரித்விக், லைலா, ராஷிகண்ணா, ரஷிதா விஜயன் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. 

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இரும்பத்திரையில் ’தொழில்நுட்பத் திருட்டு’, ஹீரோவில் ’அறிவுத் திருட்டு’, சர்தாரில் ‘தண்ணீர் திருட்டு’ என்கிற கதையுடன் வந்தாலும் திரைக்கதையில் தொடர்ந்து சறுக்கலையே சந்தித்து வருகிறார். இதனால், சர்தார் படமும் கலவையான எண்ணங்களையே தருகிறது.

தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடிய கதாநாயகன்  நடிகர் கார்த்தி என்பதால் ரசிகர்களிடையே சர்தார் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. ஆனால், தீபாவளி வெளியீடான இந்தப் படம் அந்த லெவலில் ரசிகர்களை ஈர்க்குமா? சராசரி படமாக நின்றுவிடுமா? பார்க்கலாம்!

ADVERTISEMENT
ADVERTISEMENT