திரை விமரிசனம்

நாயகியாக வென்றாரா சமந்தா? யசோதா - திரை விமர்சனம்

11th Nov 2022 06:16 PM | சிவசங்கர்

ADVERTISEMENT

 

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘யசோதா’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

இயக்குநர்கள் ஹரி சங்கர் - ஹரிஸ் நாராயண் இயக்கத்தில் வாடகைத் தாய் பிரச்னையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் யசோதா. 

பணத்திற்காக யசோதா (சமந்தா) வாடகைத் தாயாக மாற ஒப்புக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்கிறார். அங்கு மூன்றாவது மாத பரிசோதனைகளை முடித்துக் காத்திருக்கும் அவருக்கு ஓர் அழைப்பு வருகிறது.

ADVERTISEMENT

வயிற்றில் இருக்கும் குழந்தையின் பெற்றோர்கள் பணக்காரர்கள் என்பதால் ஏழ்மையில் சிரமப்படும் யசோதாவை மருத்துவமனை அமைப்புடன் கூடிய கட்டடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு யசோதாவைப் போலவே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வயிற்றில் குழந்தையுடன் செவிலியர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

யசோதாவிற்கும் குழந்தை பிறக்கும்வரை இங்கேயே இருக்க வேண்டும் என  உத்தரவு வருகிறது. ஆனால், ஒவ்வொரு நாளும் அந்த இடத்தில் மர்மமாக சில விஷயங்கள் நடக்கின்றன. பின், அடுத்தடுத்து யசோதா அங்கு சந்திக்கும் பிரச்னைகள் என்ன என்பது மீதிக் கதை.

இதையும் படிக்க: ’வாரிசு’ இசை வெளியீட்டு விழா எப்போது?

’தி ஃபேமிலி மேன்’ இணையத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய சமந்தா இந்தப் படத்திலும் தன் வெகுளித்தனமான நடிப்பால் ரசிக்க வைக்கிறார்.

அதேநேரம், சண்டைக் காட்சிகளிலும் ஆண்களிடம் உள்ள உறுதியை உடல்மொழியில் கடத்தியிருக்கிறார்.

கிரைம் திரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகியிருந்தாலும் முதல் பாதியில் சில இடங்களைத் திரைக்கதைத் தேக்கம் காரணமாக ‘சிரமத்துடன்’ கடக்க வேண்டியிருக்கிறது. இரண்டாம் பாதியில் சஸ்பென்ஸ் காட்சிகள் கைதட்ட வைக்கின்றன. 

குறிப்பாக, படத்தின் மையமாக மருத்துவம் சார்ந்த விஷயத்தைக் கையில் எடுத்திருப்பதால் சில காட்சிகளை நம்ப முடியவில்லை. இதற்கெல்லாம் வாய்ப்பு இருக்காது என்கிற எண்ணமே எழுகிறது. மருத்துவர்களுக்கே வெளிச்சம்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் சர்க்கார் திரைப்படத்திற்குப் பின் இப்படத்தில் மீண்டும் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வில்லியாக மாறினால் கண்டிப்பாகத் தமிழ் சினிமாவில் ஒரு சுற்று வருவார் என்கிற அளவிற்குக் கதையுடன் ஒன்றி நடித்துள்ளார்.

இதையும் படிக்க:’நான் செத்துருவேன்னு..’ உடல்நிலை குறித்து உடைந்து அழுத சமந்தா!

உன்னி முகுந்தன், சம்பத் ராஜ் உள்ளிட்டோரும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒளிப்பதிவு, பின்னணி இசை போன்றவை படத்திற்கு பலமாக அமைந்துள்ளன. பெரும்பாலான காட்சிகள் ஒரே இடத்தில் நடப்பதால் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

பெயரைப் பார்த்து அந்த யசோதாவை நினைத்துக்கொண்டு செல்லாமல், எதிர்பார்ப்பின்றிச் சென்றால் த்ரில்லான இந்த ‘யசோதா’வை ரசிக்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT