திரை விமரிசனம்

கீர்த்தி சுரேஷ் நடித்த ‘சாணிக் காயிதம்’ எப்படி இருக்கிறது? விமர்சனம்

6th May 2022 04:31 PM | ச.ந. கண்ணன்

ADVERTISEMENT

 

சாணிக் காயிதம் படம் பார்க்கும்போது ஐ படம் ஞாபகத்துக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. சில வித்தியாசங்களைத் தவிர, தன் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்தியவர்களைத் தேடித் தேடிப் பழிவாங்கும் கதைதான் இதுவும்.

கதையைப் பல அத்தியாயங்களாகப் பிரித்துவிட்டார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். இதனால் ஒவ்வொரு அத்தியாயம் முடிந்த பிறகும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடிகிறது. சில நொடிகள் தாம். பிறகு மீண்டும் ரத்தம் தெறிக்கத் தெறிக்கப் படம் நகர்கிறது. ஒவ்வொரு கொலையின் குரூரமும் இன்னொன்றை மிஞ்சுவதாகவே உள்ளது. 

காட்சிக்குக் காட்சி வன்முறை என்பதும் திரைக்கதையின் ஒரு வகைமைதான். கேஜிஎஃப் அப்படித்தானே. ஆனால் வன்முறைக் காட்சிகள் அதில் ரசிக்கும்படி இருந்தன. கதையை நகர்த்தின. ஒரு புது உலகுக்கு அழைத்துச் சென்றன. இந்தப் படம் அந்தளவுக்கு வெகுஜன ரசனைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. படமாக்கம்தான் இதன் முக்கிய குறிக்கோள். ஒரு கொலை நடைபெறுகிறது என்றால் அதை எந்தளவுக்கு தீவிரமாகக் காண்பிக்க முடியும், ஆழமான நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பதில்தால் அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விதத்தில் இது நிச்சயம் வழக்கமான படமல்ல என்பது தொடர்ந்து உணர முடிகிறது. 

ADVERTISEMENT

படத்தின் டிரெய்லரிலேயே கதையைச் சொல்லிவிட்டார்கள். தனி நபர்களிடையே வெளிப்படும் ஏற்றத்தாழ்வும் அதன்பொருட்டு நிகழும் சாதி ரீதியான மோதலும் சில விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதனால் படத்தின் தொடக்கம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஆனால் அதே ஆரம்பக் காட்சிகள்தாம் படத்தின் போக்கு இப்படித்தான் இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டி விடுகின்றன. இதன் பிறகு படத்தில் ஒரு ரசிகனுக்கு என்ன சுவாரசியம் இருந்துவிட முடியும்? ஒரு பழிவாங்கும் கதையில் திரைக்கதையைக் கொண்டு என்னவிதமான ஜாலங்களை ஏற்படுத்திவிட முடியும்? எப்படிப் பழிவாங்கப் போகிறார்கள் என்பதை மட்டும் பார்ப்பதற்காக ஒரு படத்தின் மீது ரசிகனுக்கு ஆர்வம் வருமா? 

தனி முத்திரையுடன் படமாக்குவதே இயக்குநரின் பிரதான நோக்கமாக இருக்கிறது. யாமினியின் ஒளிப்பதிவு, சாம் சி.எஸ்.சின் இசை, நாகூரானின் படத்தொகுப்பு எல்லாம் இயக்குநர் விரும்பிய தனித்துவமான படமாக்கத்தை அளித்துள்ளன. 

கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம், நடிப்பைக் கொட்ட பல வழிகளை ஏற்படுத்தித் தருகிறது. ஆரம்பத்தில் கதாபாத்திரத்துக்குப் பொருந்தாதவராகவே கீர்த்தி சுரேஷ் தெரிந்தார். பிறகு ஒரு வெறியுடன் நடித்துள்ளார். ஈடுபாடு இல்லாமல் இந்த நடிப்பு சாத்தியமில்லை. செல்வராகவனின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் புதிய சுவாரசியத்தை உருவாக்கி விடுகிறது. பிறகு பழிவாங்கல் பயணத்தில் அவரும் இணையும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. செல்வராகவன்தான் என்ன அருமையாக நடிக்கிறார்!

அந்த நீதிமன்றக் காட்சிகள் சில நொடிகள் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் அதுவே வழக்கமாகப் பழிவாங்குவதற்கான ஒரு வழியை உருவாக்கி விடுகிறது. இதன் பிறகு கதையில் எந்தப் புதுமையும் இல்லை. கீர்த்தி சுரேஷும் செல்வராகவனும் எப்படிப் பழிவாங்குகிறார்கள் என்பதில் மட்டுமே கதையின் கவனம் இருப்பதால் சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. இன்னொன்று, கீர்த்தி ஒரு பெண் காவலர் என்று தெரிந்தும் இத்தனை பேர் அவரைக் கொடுமைப்படுத்துவார்களா? குடும்பத்தை நாசமாக்குவார்களா? இந்தக் கேள்வி தோன்றாத அளவுக்குத் திரைக்கதை அமைந்திருக்க வேண்டும். கீர்த்தி சுரேஷ் வரிசையாக ஒவ்வொருவரையும் பழிவாங்கும்போது காவல்துறை எப்படி அவரை விட்டுவைத்தது? 

வழக்கமான படமாக இல்லாமல் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் ஆர்வம் அருண் மாதேஸ்வரனிடம் உள்ளது. வன்முறை வகைமையைக் கையில் எடுத்துக்கொண்டு படங்கள் உருவாக்குவதும் துணிச்சலான முடிவுதான். சாணிக் காயிதத்தை உருவாக்கிய விதத்தில் பலருடைய உழைப்பு தெரிகிறது. ஆனால் இந்த உழைப்புடன் சேர்த்து ஒரு சுவாரசியமான, மனத்தைக் கவரக் கூடிய கதை, உணர்வுபூர்வமான, புதுமையான காட்சிகள் எல்லாம் அமைந்திருந்தால் படம் எப்படி இருந்திருக்கும்!

ADVERTISEMENT
ADVERTISEMENT