திரை விமரிசனம்

விக்ரமிற்கு வெற்றியைக் கொடுக்குமா 'கோப்ரா' ? - திரை விமர்சனம்

எஸ். கார்த்திகேயன்

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

கணித முறையில் வித்தியாசமாக தொடர் கொலைகளை செய்கிறார் விக்ரம். அவற்றை விசாரிக்க சிபிஐ அதிகாரி இர்ஃபான் பதான் களமிறங்குகிறார். அப்போது அவருக்கு சில சுவாரசியத் தகவல்கள் கிடைக்கின்றன. விக்ரம் யார், அவர் ஏன் தொடர் கொலைகள் செய்கிறார் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறது கோப்ரா. 

3 மணி நேரத்துக்கு மேலாக ஓடும் படத்தை சலிப்பில்லாமல் பார்க்க பெரிதும் உதவுவது விக்ரமின் தேர்ந்த நடிப்பு. டிரெய்லரிலேயே விக்ரம் பல தோற்றங்களில் வருவது தெரிந்திருக்கும். அதனையும் தாண்டி உணர்வுப்பூர்வமான காட்சிகளில் கலக்கியிருக்கிறார் விக்ரம். விக்ரம் ரசிகர்கள் கொண்டாடுவதற்காகவே இரண்டாம் பாதியில் சில  காட்சிகள் இருக்கின்றன. 

அவருக்கு பிறகு ரோஷன் மேத்யூ, ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, மீனாட்சி, ரோபோ ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட யாருடைய கதாபாத்திரங்களும் வலுவாக எழுதப்படவில்லை. இவர்களில் மீனாட்சிக்கு மட்டும் குறிப்பிடும்படியான வேடம். நடிகராக முதல் படம் என்பதால் இர்ஃபான் பதான் நடிப்பில் பெரிதாக குறை சொல்ல முடியவில்லை. ஆனால் சிபிஐ அதிகாரியாக அவர் ஏதாவது கண்டுபிடிப்பார் என்று பார்த்தால், விசாரணை என்ற பெயரில் ஒவ்வொருவரிடமும் கதை கேட்க மட்டுமே செய்கிறார். 

ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறது. ஆதிரா பாடலைத் தவிர பிற பாடல்கள் படத்துக்கு வேகத் தடையாகவே இருக்கின்றன. விக்ரம் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டிக்கான காதல் காட்சிகள் சுவாரசியமாக இல்லாததால் படத்தில் 'தும்பி துள்ளல்' பாடல் கூட பெரிதாக ஈர்க்கவில்லை. ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கின்றன. படத்தில் ஆங்காங்கே வரும் திடீர் திருப்பங்கள் சுவாரசியப்படுத்துகின்றன.

படத்தில் விக்ரம் தனது கணிதத் திறமையைக் கொண்டு வித்தியாசமாக கொலைகள் செய்கிறார் என கேட்பதற்கு சுவாரசியமாக இருந்தாலும் படத்தில் அதனை படமாக்குவதில் மெனக்கெட்டிருக்கலாம். குறிப்பாக அந்தக் காட்சிகளில் ஏகப்பட்ட லாஜிக் கேள்விகள் எழுகின்றன. ஆனாலும் படம் பெரிதாக தொய்வில்லாமல் நகர்கிறது.

முதலில் சொன்னது போல விக்ரம் - ஸ்ரீநிதி இடையேயான காதல் காட்சிகள் அழுத்தமாக இல்லாததால் அந்தக் காட்சிகள் சுவாரசியத்தைக் குறைக்கின்றன. 

வில்லனாக வரும் ரோஷன் மேத்யூ தமிழ் சினிமாவின் வழக்கமான கார்பரேட் வில்லன்களை நினைவுபடுத்துகிறார். கத்துவது, துப்பாக்கியால் சுடுவது தவிர அவர் நடிப்பதற்கு பெரிதாக வேலையில்லை. 

இரண்டாம் பாதியில் ஆங்காங்கே உணர்வுபூர்வமான காட்சிகள், விக்ரமின் விசாரணைக் காட்சிகள் போன்றவை படத்துக்கு கைகொடுத்திருக்கின்றன. விக்ரம் ரசிகர்களுக்கு அந்தக் காட்சிகள் விருந்தாக இருக்கும். 

படத்தை பிரம்மாண்டமாக படமாக்குவதில் காட்டிய அக்கறையை இயக்குநர் திரைக்கதையில் காட்டியிருந்தால் கூடுதல் சுவாரசியமாக இருந்திருக்கும். இருப்பினும் லாஜிக் பார்க்கக் கூடாத பொழுதுபோக்கு திரைப்படமாக வந்திருக்கிறது இந்த கோப்ரா. விக்ரம் ரசிகர்கள் நிச்சயம் முயற்சிக்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

SCROLL FOR NEXT