திரை விமரிசனம்

சிம்புவுக்கு வெற்றி கொடுக்குமா இந்த 'மாநாடு' ?: படம் எப்படி இருக்கிறது ? திரைப்பட விமர்சனம்

எஸ். கார்த்திகேயன்

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்து சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மாநாடு'. வெங்கட் பிரபு இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். 

மாநாடு ஒன்றில் முதல்வர் கொலை செய்யப்படுகிறார். அந்தக் கொலை பற்றி அப்துல் காலிக்கிற்கு தெரியவருகிறது. அந்தக் கொலையை முன்கூட்டியே தடுக்கக் கூடிய விசேஷ சக்தி அவருக்கு கிடைக்கிறது. அவர் எப்படி அந்தக் கொலையைத் தடுக்கிறார் என்பதே மாநாடு படத்தின் கதை. 

டைம் லூப் என்ற முறையில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. தமிழில் இதே முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டு கடந்த வாரம் ஜாங்கோ என்ற படம் வெளியாகியிருந்தது. சுவாரசியமான திரைக்கதையால் இந்தப் படம் வெற்றிப் படமாகிறது. 

படத்தின் துவக்கத்தில் வரும் காட்சிகள் பெரிதும் அழுத்தமில்லாமலேயே நகருகின்றன. ஆனால் கதைக்குள் செல்லச் செல்ல படம் விறுவிறுப்பாகிறது. டைம் லூப் என்பதால் சில காட்சிகளைத் திரும்ப திரும்ப பார்க்க வேண்டியிருக்கிறது. முதல் முறை ஒரு காட்சி வரும்போது அதில் காட்சிக்கு சம்பந்தமில்லாமல் சில விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் திரும்ப அந்தக் காட்சி காட்டப்படும்போதுதான் முதலில் சம்பந்தமில்லாததாக நாம் நினைத்தது படத்துக்கு எவ்வளவு முக்கியம் என்று உணர முடிகிறது. இப்படி வெங்கட் பிரபுவின் புத்திசாலித்தனமான எழுத்து நிறைய இடங்களில் படத்தை சுவாரசியமாக்கியுள்ளது. 

வழக்கமாக வெங்கட் பிரபுவின் படங்களில் பழைய வெற்றிப் படங்களை நினைவுபடுத்தும்படியான காட்சிகள் வந்துபோகும். இந்தப் படத்திலும் அப்படி நிறைய காட்சிகள் ரசிக்கும்படி வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக சர்கார் படத்தை இந்தப் படத்துடன் இணைத்த விதம் சிறப்பு. மேலும் வெங்கட் பிரபுவின் நகைச்சுவை கலந்த வசனங்கள் நிறைய இடங்களில் ரசிக்கும்படி இருக்கின்றன. ஒரு காட்சியில்  எஸ்ஜே சூர்யாவை குறிப்பிடும் விதமாக, ''அவன் உன்ன விட ஓவர் ஆக்டிங் பண்ணுவான்'' என்று சிம்பு சொல்லும் வசனத்துக்கு அரங்கம் அதிர்ந்தது.

இந்தப் படத்தில் அப்துல் காலிக் மற்றும் தனுஷ்கோடி என்ற இரண்டு கதாப்பாத்திரங்களைச் சுற்றிதான் கதை நகருகிறது. அப்துல் காலிக்காக சிம்புவும், தனுஷ்கோடியாக எஸ்.ஜே. சூர்யாவும் நடித்துள்ளார்கள். இருவரும் அதனை உணர்ந்துகொண்டு போட்டிபோட்டு நடித்துள்ளார்கள். தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை சிம்பு மீண்டும் நிரூபித்திருக்கிறார். குறிப்பாக உணர்வுபூர்வமான காட்சிகளில் அவரது நடிப்பு தத்ரூபமாக இருந்தது. விரல் வித்தையை ஓரம் வைத்துவிட்டு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்ததற்கு அவருக்கு பாராட்டுகள்.  

தனுஷ்கோடி என்ற எதிர்மறை வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா.  இதற்காகவே இவ்வளவு நாள் காத்திருந்தேன் என்பது போல ருத்ர தாண்டவம்  ஆடியிருக்கிறார். நக்கல் கலந்த பாணியில் அவர் செய்யும் வில்லத்தனம் படத்தை சுவாரசியப்படுத்தியிருக்கிறது. 

குறிப்பாக இரண்டாம் பாதியில் இருவரும் பேசும் விதமாக நீண்ட காட்சி  ஒன்றை வெங்கட் பிரபு வடிவமைத்திருப்பார். அந்தக் காட்சியில் இருவரின் நடிப்பும் மிக சிறப்பாக இருந்தது.  சிம்பு, எஸ்.ஜே.சூர்யாவுக்கு பிறகு கவனம் ஈர்ப்பது அரசியல்வாதியாக வரும் ஒய்.ஜி.மகேந்திரன். வழக்கமான அரசியல்வாதி வேடம்தான் என்றாலும் தனது நடிப்பால் வித்தியாசப்படுத்திப்  படத்துக்கு கூடுதல் சுவாரசியம் சேர்த்திருக்கிறார். கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷனுக்கு வழக்கமான கதாநாயகி வேடம். 

எப்போதும் போல வெங்கட் பிரபு படத்தில் பிரேம்ஜி இருக்கிறார். அவருடன்  கூடுதலாக கருணாகரனும் இருக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, சுப்பு பஞ்சு, வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களை சரியாக செய்திருக்கிறார்கள். 

சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு போட்டியாக யுவன் பின்னணி இசை படத்துக்கு பெரும் பக்கபலமாக இருந்தது. திரையரங்கைவிட்டு வெளியே வந்த பிறகு அவரது பின்னணி இசையை முணுமுணுக்கும் அளவுக்கு இருக்கிறது. பட விழாவில் வெங்கட் பிரபு சொன்னது போல, சிம்பு படம் என்றால் யுவன் கூடுதல் கவனம் செலுத்துவார் என்றார். அதனை மெய்ப்பிக்கும் மிக சாதாரண காட்சிகளுக்கு கூட ஓவர் டைம் வேலை செய்து பின்னணி இசையின் மூலம் வலுச் சேர்க்க முயற்சித்திருக்கிறார். அந்தக் காட்சிகளில் மட்டும் அவரது இசை துருத்திக்கொண்டு தெரிந்தது. மற்றபடி அவர் மாநாடு படத்துக்கு இன்னொரு கதாநாயகன்.

 ஒரு காட்சி திரும்ப வருகிறது என்பதை நமக்கு புரிய வைக்க வேண்டும், ஆனால் அந்தக் காட்சி நமக்கு சலிப்பை ஏற்படுத்தக் கூடாது. இதனை மிகச் சரியாக செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல். இது அவரது 100வது படம். குறிப்பாக இடைவேளைக்கு முன் வரும் ஒரு சண்டைக்காட்சியில் அவரது பங்களிப்பு வேற லெவல். நேர்த்தியான ஒளிப்பதிவின் மூலம் கவனம் ஈர்க்கிறார் ரிச்சர்டு எம்.நாதன். துவக்கத்தில் மட்டும் காட்சிகளின்  தரம் சிறப்பாக இல்லாதது போல் தோன்றியது. 

படத்தில் இந்து முஸ்லிம் பிரச்னைகள் குறித்த பேசப்படும் கருத்துகள் முக்கியத்துவமானதாக தோன்றியது. ஒரு முஸ்லிம் கதாநாயகனான சிம்பு, அந்த மதம் மீது கட்டமைக்கப்படும் போலி பிம்பங்களை குறித்து பேசும் வசனங்கள் நன்றாக இருக்கின்றன. 

படத்தின் முக்கிய பிரச்னை ஆங்காங்கே வரும் லாஜிக் மீறல்கள். ஆனால் அது குறித்து யோசிக்க முடியாத அளவுக்கு விறுவிறுப்பாக திரைக்கதையை அமைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. வழக்கமான பாணி கதையில் டைம் லூப் என்ற வித்தியாசமான முறையில் சுவாரசியமான திரைக்கதையின் மூலம் சொன்ன விதத்தில் களைகட்டுகிறது இந்த 'மாநாடு'. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT