திரை விமரிசனம்

இந்தியாவின் முதல் டைம் லூப் படம் 'ஜாங்கோ' - எப்படி இருக்கிறது? திரைப்பட விமர்சனம்

எஸ். கார்த்திகேயன்

திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஜென் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிப்பில் மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'ஜாங்கோ'. 

வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு வரும் இயந்திரத்தின் காரணமாக பூமிக்கு அடுத்த நாள் இல்லாமல் போகிறது. அக்டோபர் 2 என்ற ஒருநாள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கிறது. ஒரு நாள் முடிந்து மீண்டும் துவங்கும்போது மக்களுக்கு எல்லாம் மறந்துபோகிறது. கதாநாயகனுக்கு மட்டும் எல்லாம் சரியாக நினைவு இருக்கிறது. தனது நினைவாற்றலை வைத்துக் கொண்டு அவர் பூமியை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே ஜாங்கோ படத்தின் கதை. 

டைம் லூப் என்ற முறையில் இந்தியாவில் உருவாகியிருக்கும் முதல் படம் என்ற அறிவிப்புடன் வெளியாகியிருக்கிறது ஜாங்கோ. டைம் லூப் என்ற முறையில் உருவாகும் முதல் படமாக ஜாங்கோ இருக்கலாம். ஆனால், கிட்டத்தட்ட நேரத்தைக் கட்டுப்படுத்தும் முறையில் தமிழிலேயே நிறைய படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. சூர்யாவின் '24', 'இன்று நேற்று நாளை', 'ஓ மை கடவுளே' போன்ற சிலவற்றைச் சொல்லலாம். 

மேற்சொன்ன படங்களைப் போலவே இந்தப் படத்திலும் சில காட்சிகள் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்கின்றன. மேலே குறிப்பிட்ட படங்களில் ஒரே காட்சி வேறு வேறு கோணத்தில் மீண்டும் மீண்டும் காட்டப்படும். ஆனால் இந்தப் படத்தில் கதாநாயகன் பார்வையிலேயே காட்சிகள் மீண்டும் மீண்டும் காட்டப்படுகின்றன. இதனால் முதல் பாதியில் ஒரு கட்டத்துக்கு மேல் ஒருவித அயர்ச்சி ஏற்படுகின்றது. அந்தக் காட்சிகளிலும் எவ்வித அழுத்தங்களும் இல்லை. ஆனால் இரண்டாம் பாதிக்கு மேலேயே வேறு கோணத்தில் அந்தக் காட்சிகள் காட்டப்படுவதால் சுவாரசியமாக இருக்கிறது. 

கௌதம் என்ற மருத்துவர் வேடத்தில் அறிமுகமாகியிருக்கிறார் சதீஷ் குமார். அவரது மனைவியாக மிருணாளினி. ஊடகத் துறையில் பணியாற்றுகிறார். இருவரும் ஒரு கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கிறார்கள். அவர்களுக்கு இடையேயான ஊடல் சார்ந்த காட்சிகள் மிக நன்றாக எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றை சதீஷ் குமார் மிகவும் மோசமான நடிப்பால் கெடுத்து விடுகிறார். அவரை ஒப்பிடுகையில் மிருணாளினி ரவி நன்றாகவே நடித்திருக்கிறார். 

மொத்த படமுமே கதாநாயகன் சதீஷ் குமாரின் மேல்தான் பயணிக்கிறது. ஆனால் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்திருக்கிறார். நிறைய காட்சிகளில் அவருக்கு கொடுக்கப்பட்ட டப்பிங் பொருந்தாமல் தனியாக தெரிந்தது. சதீஷ் குமார், மிருணாளினி ரவி ஆகிய இருவரைச் சுற்றி நகரும் கதை. பிற கதாபாத்திரங்களுக்கு பெரிதும் முக்கியத்துவம் இல்லை. இருப்பினும் வில்லனாக நடித்திருக்கும் ஹரிஷ் பேரடி தனது பங்கைச்  சிறப்பாக செய்திருக்கிறார்.

முதலில் சொன்னது போல் முதல் பாதி முழுவதும் கதாநாயகன்  கண்ணோட்டத்திலேயே நகர்வதால் ஒருவித சலிப்பு ஏற்படுகிறது. ஆனால் பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வை நோக்கி படம் நகரத் துவங்கியதும் மெல்ல விறுவிறுப்பாகிறது. அதற்கு சில யுகங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஒரே நாளில் இவ்வளவையும் செய்து விட முடியுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆனால் ஒருசில லாஜிக் குறைகளைக் கடந்து விட்டால் இரண்டாம் பாதி சுவாரசியமாகவே இருக்கிறது. 

பூமிக்கு வரும் வேற்று கிரக இயந்திரம் பூமியின் ஒருநாளைக்  கட்டுப்படுத்துகிறது என சொல்லப்படுகிறது. ஆனால் அது எதற்காக பூமியை கட்டுப்படுத்துகிறது, அதன் நோக்கம் என்ன என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. 

படத்துக்கு ஜிப்ரானின் பின்னணி இசை மிகப் பெரிய பலமாக  அமைந்திருக்கிறது. சில சுமாரான காட்சிகளுக்கு கூட தனது பின்னணி இசையின் மூலம் வலுச் சேர்த்திருக்கிறார். ஒரே காட்சிகள் திரும்ப காட்டப்படும் படத்தில் கலை இயக்குநர் கோபி ஆனந்த் சிறப்பாகவே பணியாற்றியிருக்கிறார். குறிப்பாக சுமாரான கிராபிக்ஸ் காட்சிகளுக்கு அவரது பணி மிகவும் கைகொடுத்திருக்கிறது. நேர்த்தியான ஒளிப்பதிவின் மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் கே தில்லை. 

மொத்தத்தில் டைம் லூப் கருத்தியலைப் படத்தில் நன்றாக  பயன்படுத்தியிருந்தாலும், அதற்குப் பின்னணியில் சொல்லப்படும் கதை வலுவில்லாமல் இருப்பதால் சுமாரான படமாகவே அமைந்திருக்கிறது இந்த ஜாங்கோ.  இதே பாணியில் அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் சிம்புவின்  'மாநாடு' படத்துக்குக் காத்திருப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT