செய்திகள்

கலகலப்பால் திணறடிக்கும் கட்டா குஸ்தி: திரைவிமர்சனம்

2nd Dec 2022 06:00 AM | கி.ராம்குமார்

ADVERTISEMENT

இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோர் நடப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கட்டா குஸ்தி. காளி வெங்கட், கருணாஸ், முனீஸ்காந்த், கிங்ஸ்லீ உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை விஷ்ணு விஷால், ரவி தேஜா இணைந்து தயாரித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.

குஸ்தி சண்டையை லட்சியமாகக் கொண்ட நாயகி ஐஸ்வர்யா லஷ்மி, தனக்கு மனைவியாக வருபவருக்கு இருக்க வேண்டிய தகுதிகளாக இடுப்பு வரை கூந்தல், தன்னை விடக் குறைந்த படிப்பு என பட்டியலுடன் காத்திருக்கும் நாயகன் விஷ்ணு விஷால். இதில் குடும்ப நெருக்கடி காரணமாக நாயகன் விஷ்ணு விஷாலை மணக்க பொய் சொல்லி திருமணம் செய்து வைக்கப்படுகிறார் நாயகி ஐஸ்வர்யா லஷ்மி. இது விஷ்ணு விஷாலுக்கு தெரிய வர அதன்பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை.

தமிழ் சினிமா பழக்கப்பட்ட கதைக்களம். ஆனால் எதை பேச இந்த கதைக்களத்தை இயக்குநர் தேர்வு செய்தார் என்பதிலிருந்து தனித்திருக்கிறது கட்டா குஸ்தி. படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இதுதான் கதை, இவர்கள்தான் கதாபாத்திரங்கள் என தேவையான விஷயங்களை இயக்குநர் தெரிவித்து விடுவதால் படம் எந்த சிக்கலும் இல்லாமல் நகருகிறது.

காட்சிக்கு காட்சி காமெடி தெறிக்க திரையரங்கில் மக்களுக்கு நல்ல எண்டர்டெயின்மெண்டாக அமைந்திருக்கிறது திரைப்படம். நாயகியாக வரும் ஐஸ்வர்யா லஷ்மி மற்றும் நாயகன் விஷ்ணு விஷாலின் நடிப்பு படத்திற்கு நன்றாக கைகொடுத்துள்ளன. தனது மனைவி தன்னைப் பற்றி உயர்வாக நினைக்க வேண்டும் என அவர் செய்யும் காரியங்களில் தொடங்கி தன் மனைவியாலேயே தனக்கு அவமானம் வருவதாக கருதுவது வரை விஷ்ணு விஷால் கச்சிதமான நடிப்பை கொடுத்திருக்கிறார். 

ADVERTISEMENT

சண்டைக் காட்சிகளில் ஐஸ்வர்யா லஷ்மியின் நடிப்பு சாலப்பொருத்தம். தமிழுக்கு நல்ல ஆக்‌ஷன் ஹீரோயின் கிடைத்துவிட்டார் எனலாம். திருமணமானதால் அடங்கி ஒடுங்கி இருப்பதில் தொடங்கி கணவனுக்காக சண்டைக்காட்சியில் வில்லன்களை பறக்கவிடுவது வரை திரையரங்குகளில் விசில் பறக்கச் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா லஷ்மி.

 

துணைக் கதாபாத்திரங்களாக வருபவர்கள் அனைவரும் சரியான தேர்வு. சித்தப்பாவாக வரும் முனீஸ்காந்த், வழக்குரைஞர் காளி வெங்கட், மாமன் கருணாஸ் என ஒவ்வொருவரும் அளவான அதேசமயம் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கருணாஸ், முனீஸ்காந்த், காளி வெங்கட், கிங்ஸ்லீ ஆகியோரின் காமெடியெல்லாம் சிரித்துக் கொண்டே இருக்கலாம். குறிப்பாக கணவன் குறித்து மனைவிகளும், மனைவி குறித்து கணவன்களும் பேசிக் கொள்ளும் இடம் இனி சமூக வலைத்தளங்களில் வைரலானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆக்‌ஷன் காட்சிகள் படத்திற்கு பக்கபலமாக உள்ளன. ஐஸ்வர்யா லஷ்மியின் ஆக்‌ஷன் காட்சிகள் முன்பு கூறியதைப் போல ஆச்சர்யம் கொள்ளத்தக்க வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

படத்தின் கரு பெண்ணின் சுதந்திரத்தை, அவர்களின் வலிகளை அடிப்படையாகக் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தாலும் வித்தியாசமான முறையில் அதனை காட்சிப்படுத்தியிருப்பது படத்திற்கு கைகொடுத்துள்ளது. “மத்த நாட்டுல எல்லாம் போட்டியில ஜெயிக்க எதிரிகளோட சண்ட போடனும். இங்க மட்டும்தான் முதல்ல நம்ம குடும்பத்தோட சண்ட போடனும்” போன்ற வசனங்கள் யதார்த்தத்தை பிரதிபலிக்கின்றன. கருணாஸின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்தவர் பேசும் வசனங்கள் ஆண்களை சுடும்.

படத்தின் முதல் பாதி சிரிக்க வைத்து வெளியில் அனுப்ப இரண்டாம் பாதி சிரிப்புடன் கலந்து சீரியஸாகவும் சில விஷயங்களை பேசியுள்ளது. ஆண் பெண் உறவுகளில் பெண்ணின் முக்கியத்துவத்தை ஆண்களே ஏற்றுக்கொள்ளும் வகையில் பேசியுள்ளது திரைப்படம்.

ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவு ஆக்‌ஷன் காட்சிகளுக்கு நன்றாக உதவியுள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசை ஓகே ரகம். காட்சிகளுக்கு மத்தியில் தேவையற்ற பாடல்களைத் தவிர்த்திருக்கலாம். படத்திற்கு இரண்டாவது வில்லன் தேவையே இல்லையே. எனினும் கிளைமேக்ஸ் காட்சி வழக்கமான ஒன்றாக இருந்தாலும் பெரிதாக ஏமாற்றவில்லை.

ஆண்டின் தொடக்கத்தில் எஃப்ஐஆர் திரைப்படத்தில் வெற்றியுடன் தொடங்கிய விஷ்ணுவிற்கு ஆண்டின் இறுதியில் வெற்றியுடன் நிறைவாகியிருக்கிறது கட்டா குஸ்தி. கலகலப்பாக இந்த ஆண்டை நிறைவு செய்ய கட்டா குஸ்தி நல்ல சாய்ஸ்.

ADVERTISEMENT
ADVERTISEMENT