செய்திகள்

கர்ணன் படத்தில் சொந்தக் குரலில் பேசாதது ஏன்?: நடிகர் லால் விளக்கம்

DIN

கர்ணன் படத்தில் சொந்தக் குரலில் பேசாததற்கு நடிகர் லால் விளக்கம் அளித்துள்ளார்.

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படம் - கர்ணன். தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். தயாரிப்பு - தாணு, இசை - சந்தோஷ் நாராயணன். மலையாள நடிகை ரஜிஷா விஜயன், 96 புகழ் கெளரி, லக்‌ஷ்மி குறும்படப் புகழ் லட்சுமி ப்ரியா சந்திரமெளலி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

சந்தோஷ் நாராயணனின் பாடல்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்த நிலையில் கர்ணன் படம் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியாகி,  ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. அமேசான் பிரைம் ஓடிடியில் மே 14 அன்று வெளியானது.

இந்நிலையில் இந்தப் படத்தின் நடிகர் லால் சொந்தக் குரலில் பேசாமல் அவருக்கு டப்பிங் குரல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு நடிகர் லால் விளக்கம் அளித்துள்ளதாவது:

கர்ணன் படத்தில் எமராஜா கதாபாத்திரத்தில் சொந்தக் குரலில் ஏன் பேசவில்லை எனப் பலரும் கேட்டிருந்தீர்கள். கர்ணன் படம் திருநெல்வேலிப் பின்னணியில் அமைக்கப்பட்ட படம். திருநெல்வேலித் தமிழ், சென்னைத் தமிழை விடவும் வித்தியாசமானது.

மலையாளத்தில் கூட திருச்சூர் வழக்கில் மலையாளத்தைப் பேசச் சொன்னால் யாராலும் நன்றாகப் பேச முடியாது. கர்ணன் படம் மொழிக்கும் கலாசாரத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. எனவே கதாபாத்திரத்தின் முழுமைக்காக தமிழ் மொழியின் வட்டார வழக்கைப் பேசியாக வேண்டும். படத்தின் பெரும்பாலான கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் உள்ளூர்க்காரர்கள். எனவே அவர்களுடைய பேச்சிலிருந்து என்னுடைய உச்சரிப்பு தனியாகத் தெரியவே வாய்ப்புகள் அதிகம். என்னுடைய பங்களிப்பில் 100%க்கும் குறைவாக இருக்கக் கூடாது என எண்ணியிருந்த எனக்கு இதனால் தயக்கம் ஏற்பட்டது, 

இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் தாணு ஆகியோர் விடாப்பிடியாகச் சொன்னதால் சென்னையில் நடைபெற்ற டப்பிங் பணிகளில் நான் பங்கேற்றேன். என்னுடைய வேண்டுகோள் மற்றும் படத்தின் முழுமைக்காக ஒரு திருநெல்வேலிக்காரரின் குரல் எனது கதாபாத்திரத்துக்குப் பயன்படுத்தப்பட்டது. அனைவருடைய ஆதரவுக்கும் நன்றி என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT