செய்திகள்

விஜய்யின் மாஸ்டர்: திரையரங்குகளில் வெற்றிகரமான 50-வது நாள்!

DIN


ஓடிடியில் வெளியாகியும் விஜய் நடித்த மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 50-வது நாளைக் கொண்டாடி வருகிறது. 

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியானது. 

ஜனவரி 13 அன்று மாஸ்டர் படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியானபோது பல தரப்புக்கும் மிகப்பெரிய உற்சாகத்தை அளித்தது. படத்துக்கு ரசிகர்கள் ஆதரவு தந்ததால் விஜய்க்கும் மாஸ்டர் படத் தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்தார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். மாஸ்டர் படத்துக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்டு பல படங்கள் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டன. இந்திய அளவில் மாஸ்டர் படம் வெளியானது. ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டது. கேரளாவில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டபோது முதலில் வெளியானதே மாஸ்டர் படம் தான். 

எனினும் படம் திரையரங்குகளில் வெளியான 16 நாள்களில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். இதையடுத்து எந்தவொரு தமிழ்ப் படமும் 30 நாள்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியாக வேண்டும் என நிபந்தனை விதித்தார்கள். இதனால் திரையரங்கில் வெளியாகவிருந்த ஏலே படம், நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

இந்நிலையில் மாஸ்டர் படம் இன்று 50வது நாளைக் கொண்டாடுகிறது. 16 நாள்களில் ஓடிடியில் வெளியாகியும் திரையரங்குகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. வார இறுதி நாள்களில் நல்ல வசூல் கிடைப்பதால் திரையரங்குகளில் தொடர்ந்து திரையிடப்பட்டு வருகிறது. இதனால் தான் கிட்டத்தட்ட 50 திரையரங்குகளில் 50-வது நாளைக் கொண்டாடுகிறது மாஸ்டர் படம். ஓடிடியில் வெளியானாலும் திரையரங்கிலும் ஒரு படம் தொடர்ந்து ஓடும் என்று நிரூபித்துள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளாவிலும் இரு திரையரங்களில் 50-வது நாளை நிறைவு செய்துள்ளது. 

வசூலில் சாதனை செய்துள்ள மாஸ்டர் படம், அடுத்து வரும் தமிழ்ப் படங்களுக்கு ஒரு பெரிய இலக்காக அமைந்துள்ளது. மாஸ்டர் படத்தின் வசூலையும் வரவேற்பையும் அடுத்து எந்தப் படம் தாண்டப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT