செய்திகள்

டான்சிங் ரோஸ் யார்?

24th Jul 2021 01:12 PM | டி. குமாா்

ADVERTISEMENT

 

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளிவந்துள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைவருமே தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர். இதனால் திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்த திரைப்படத்தில் வரும் டான்சிங் ரோஸ் என்ற  கதாபாத்திரம் பார்வையாளர்கள் அனைவரையுமே ஈர்த்துள்ளது. டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தை வைத்து திரைப்படத்தை எடுத்திருக்காலாமே என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதனால் டான்சிங் ரோஸாக நடித்துள்ள நடிகர் ஷபீர் கல்லரக்கல்லை சமூக  ஊடகங்களில் தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவரது சமூக ஊடகப் பக்கங்கள், அவரது பேட்டிகளைப் பார்த்து ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். 

ADVERTISEMENT

ஷபீர் கல்லரக்கல் சென்னையைச் சேர்ந்த நாடகப் பயிற்சியாளர். கடந்த 2014-ஆம் ஆண்டு வெளிவந்த நெருங்கி வா முத்தமிடாதே திரைப்படம் மூலம் அறிமுகமானார். அடங்க மறு, பேட்ட, டெடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்காக பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் ஷபீர். இவர் பார்க்கூர், டிரெக்கிங், ஜிம்னாஸ்டிக்ஸ், தற்காப்புக் கலைகள், சிலம்பம் உள்ளிட்டவற்றைக் கற்றுள்ளார். சிலம்பமும், கிக் பாக்சிங்கும் கலந்த காலடி குத்து வரிசையையும் கற்று வருகிறார்.

டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்துக்கான மாதிரி (ரெபரென்ஸ்), இங்கிலாந்து  நாட்டைச் சேர்ந்த பிரபல குத்துச் சண்டை வீரர் பிரின்ஸ் நசீம் ஹமீத் என தெரிவிக்கிறார் ஷபீர்.

அதுமட்டுமல்ல திரைப்படத்தில் கபிலனாக வரும் ஆர்யாவுக்கு பிரபல குத்துச் சண்டை வீரரான முகமது அலியின் ஸ்டைலும், வேம்புலியாக வரும் ஜான் கொகேனுக்கு மைக் டைசன் ஸ்டைலும் ரெபரன்ஸாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஷபீர் முன்மாதிரியான பிரின்ஸ் நசீம் ஹமீத் யார்?

இங்கிலாந்தைச் சேர்ந்த  நசீம் ஹமீத், பாக்சிங் வளையத்துக்குள் எவ்வளவு பெரிய வீரனையும் சந்திக்கும் திறன் கொண்டவராக இருந்துள்ளார். கடந்த 1995-ஆம் ஆண்டு பிரிட்டனின் இளம் குத்துச் சண்டை வீரரான இவர், தனது 21-ஆவது வயதில் பெஃதர் வெய்ட் பிரிவில் உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். கடந்த 2002-ஆம் ஓய்வு பெறும் வரை தான் ஆடிய 37 ஆட்டங்களில் 36-ல் வெற்றி பெற்றுள்ளார். 

குத்துச் சண்டை அரங்கத்துக்குள் பிரின்ஸ் நசீம் ஹமீத் நுழையும் விதமும், அவரது உடை, டான்சிங் அசைவுகள், ஷம்மர் சால்ட், பவர்புல் பஞ்ச்களும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தன.

மேலும் நடனத்துடன் கூடிய இவருடைய குத்துச்சண்டை யுக்திகள் எதிராளிகளை திணறடித்தன. ஆனால்  நசீம் ஹமீத் குத்துச்சண்டை வளையத்துக்கு வெளியே பல்வேறு பிரச்னைகளை சந்தித்தார். பலமுறை குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்தது.

எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சார்பட்டா பரம்பரையால் நினைவுகூரப்படுகிறார் பிரின்ஸ் நசீம் ஹமீத். வாழ்த்துகள் ஷபீர்!

Tags : Pa Ranjith Arya Sarpatta Parambarai dancing rose
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT