செய்திகள்

பிரபாஸ் - கேஜிஎஃப் இயக்குநர் இணையும் படம்: பூஜையுடன் தொடங்கியது (படங்கள்)

15th Jan 2021 03:55 PM

ADVERTISEMENT

 

கேஜிஎஃப் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் பிரபாஸ் இணையும் படம் பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டுள்ளது. 

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு சாஹோ படத்தில் நடித்தார் பிரபாஸ். இதற்கு அடுத்ததாக ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதன்பிறகு நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது பிரபாஸின் 21-வது படம். பிரபல நட்சத்திரம் தீபிகா படுகோனுடன் இணைந்து முதல்முறையாக நடிக்கவுள்ளார் பிரபாஸ். தீபிகா படுகோன் நடிக்கும் முதல் தெலுங்குப் படம் இது. இப்படத்தில் அமிதாப் பச்சனும் நடிக்கிறார். இதுதவிர, தன்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடிக்கிறார் பிரபாஸ். ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் டப் செய்யப்படவுள்ளது. இதன் படப்பிடிப்பு ஜனவரி 2021-ல் தொடங்கவுள்ளது. ஆதிபுருஷ், 2022 ஆகஸ்ட் 11-ல் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கேஜிஎஃப். இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் இணைந்துள்ளார் பிரபாஸ். 

ADVERTISEMENT

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் 2018-ல் வெளியான கேஜிஎஃப் என்கிற கன்னடப் படம் இந்திய அளவில் கவனம் பெற்றது. மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. கேஜிஎஃப் படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடிக்கிறார்கள். ஆகஸ்ட் மாத இறுதியிலிருந்து கேஜிஎஃப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி, சமீபத்தில் நிறைவடைந்தது. 

பிரபாஸ் - பிரஷாந்த் நீல் இணையும் படத்துக்கு சலார் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஹாம்பேல் தயாரிக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

முழு இந்தியாவுக்குமான படம் இது. மிகுந்த வன்முறை நடவடிக்கைகள் கொண்ட கதாபாத்திரத்தில் முதல்முறையாக நடிக்கிறேன். படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன் என பிரபாஸ் கூறினார். இதுவரை பார்க்காத பிரபாஸை இப்படத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள். இதை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என நம்புகிறேன் என்று பிரஷாந்த் நீல் கூறினார். 

பாகுபலி 2, சாஹோ படங்களுக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சலார் படத்தின் பூஜை ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றுள்ளது. கேஜிஎஃப் நட்சத்திரம் யாஷ் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சலார் பட பூஜை நிகழ்வின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT