செய்திகள்

இவ்வளவு பாராட்டும் வாய்ப்புகளும் மற்ற பாடகர்களுக்குக் கிடைக்கவில்லை: எஸ்.பி.பி. பற்றி கமல் ஹாசன்

1st Oct 2020 01:50 PM

ADVERTISEMENT

 

 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் தாமரைப்பாக்கம் - செங்குன்றம் சாலையில் உள்ள பண்ணை வீட்டில் காவல் துறை மரியாதையுடன் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு திரைத் துறையினா், அரசியல் பிரமுகா்கள் அஞ்சலி செலுத்தினா்.

இந்நிலையில் சென்னையில் எஸ்.பி.பி. நினைவஞ்சலிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு எஸ்.பி.பி. தொடர்பான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். காணொளி வழியாக எஸ்.பி.பி. பற்றி நடிகர் கமல் ஹாசன் கூறியதாவது:

ADVERTISEMENT

அதில இந்தியப் பாடகராக இருந்ததால் என்னுடனேயே சேர்ந்து பயணித்தார் எஸ்.பி.பி. நான் எந்த மொழியில் நடித்தாலும் அங்கெல்லாம் அவர் பாடினார். அவர் குரல் எனக்குப் பக்கபலமாக இருந்தது. பல வடநாட்டுக் கதாநாயகர்கள் மார்க்கெட்டைத் தக்கவைத்துக்கொள்ள அவருடைய குரல் உதவியது. அவரே வணங்கி மதிக்கும் பாடகர்களுக்குக் கூட இந்தப் புகழ் கிடைத்ததில்லை. இவ்வளவு பாராட்டுகளும் வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. 

பிழைக்க மாட்டார் என்று தெரிந்தபோது அவருடைய உருவத்திலேயே ஒரு சோர்வு தெரிந்தது. அப்படி அவர் இருக்கவே மாட்டார். நடுவில் அவர் தேறிவிடுவார் என நினைத்தேன். நான் சரணுக்கு ஆறுதல் சொல்வதற்காகப் போன போது இந்த மாபெரும் காவியத்துக்கு கிளைமாக்ஸ் என்ன என்று தெரிந்துவிட்டது. அப்போது எனக்குக் கண் கலங்கியது. எல்லோர் முன்னிலையிலும் அழக்கூடாது என்பதாலும் என்னை விட இளையவரான சரணுக்கு ஆறுதலாக இருக்கவேண்டும் என்பதாலும் கண்ணீரை அடக்கிக் கொண்டேன். 

இந்தச் சோகம் பிறகு அதிகமாகிவிட்டது. இது எனக்கு மட்டும்தான் என நினைத்தேன். என்னுடன் பேசிய பலரும் அப்படித்தான் இருந்தார்கள். இந்தச் சோகம் இன்னும் 10 நாள் நீடிக்கும் என நினைக்கிறேன். எல்லோரும் அவர் பாடிய பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் என்னுடன் இருக்க முயற்சி செய்வார். இல்லாவிட்டால் போனில் வாழ்த்துவார். நானும் கமலும் என்கிற நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறார். என்னுடைய சமீபத்திய பிறந்த நாளுக்கு அவர் அழைத்தபோது அதிர்ஷ்டவசமாக நான் போனை எடுக்கவில்லை. அப்போது அவர் தனது பிறந்த நாள் வாழ்த்தை குரல் பதிவாக அனுப்பினார். இனி என்னுடைய எல்லாப் பிறந்த நாள்களுக்கும் அதுவே அவருடைய வாழ்த்தாக இருக்கும். நான் இருக்கும்வரை எனக்குப் பின்னணிப் பாடுவார் என எண்ணிக்கொண்டிருந்தேன். 

ஐந்து தலைமுறை கலைஞர்களுக்குப் பின்னணி பாடியிருக்கலாம். ஆனால் அவருடைய புகழ் ஏழு தலைமுறைக்கும் இருக்கும். இவருடைய புகழ் எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு இணையாக உள்ளது. சில நாள்களில் இதை உணரமுடிந்தது. நடிகர்களுக்கு மட்டுமல்ல வெங்கடாசலபதிக்கும் இவர்தான் பின்னணி பாடியிருக்கிறார். அங்கு போனாலும் இவர் குரல் ஒலிக்கிறது. அதேபோல எல்லா மதங்களையும் அவர் ஆதரித்தார் என்றார்.

Tags : SPB Kamal Haasan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT