செய்திகள்

ஏ.ஆர். முருகதாஸ் வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு

6th Feb 2020 12:10 PM

ADVERTISEMENT

 

தர்பார் படத்தின் விநியோகஸ்தர்கள் இழப்பீடு கோரி தன்னை மிரட்டுவதால் பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மனு அளித்துள்ளார்.     

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியானது. முதல் நான்கு நாள்களில் தர்பார் படம் ரூ. 150 கோடி வசூலித்ததாக லைகா நிறுவனம் தகவல் வெளியிட்டது. 

ஆனால், தர்பார் படம் எதிர்பார்த்த அளவில் வசூலை ஈட்டவில்லை என்கிற புகாருடன் ரஜினியை நேரில் சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளார்கள் விநியோகஸ்தர்கள். கடந்த வாரம், சென்னையிலுள்ள ரஜினியின் இல்லத்துக்கு நேரில் சென்று பார்க்கச் சென்றபோது அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதேபோல இந்த வாரமும் தர்பார் படத்தை வட ஆற்காடு - தென் ஆற்காடு, திருநெல்வேலி, மதுரை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், சேலம் ஆகிய பகுதிகளில் விநியோகம் செய்த விநியோகஸ்தர்கள் ரஜினி மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகிய இருவரையும் சந்திக்க முயன்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, இதுபோல தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டால், வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருப்போம் என்று விநியோகஸ்தர்கள் கூறியுள்ளார்கள்.

ADVERTISEMENT

தர்பார் படத்தின் விநியோகஸ்தர்கள் இழப்பீடு கோரி தன்னை மிரட்டுவதால் தனது வீடு மற்றும் அலுவலகத்துக்குப் பாதுகாப்பு வழங்க சென்னை மாநகர காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. முருகதாஸின் மனு தொடர்பாக பிப்ரவரி 10-ம் தேதிக்குள் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT