செய்திகள்

விவசாயிகள் போராட்டத்துக்கு பாலிவுட் பிரபலங்கள் ஆதரவு

7th Dec 2020 04:40 PM

ADVERTISEMENT

 

தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதியுள்ளார்கள்.

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோா் தில்லியை முற்றுகையிட்டு தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

விவசாயிகளின் போராட்டத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. இரு தரப்பினரிடையே ஐந்து கட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்ற நிலையில் எந்தவொரு சுமுகத் தீா்வும் எட்டப்படவில்லை. எனவே வரும் 9-ஆம் தேதி மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது. விவசாயிகள் எழுப்பும் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில், புதிய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்று விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

ADVERTISEMENT

பஞ்சாப்பைச் சோ்ந்த தேசிய விளையாட்டு வீரா்களும் அவா்களுக்கு அளிக்கப்பட்ட உயரிய தேசிய விருதுகளை திரும்ப அளிப்பதாக அறிவித்ததோடு, விவசாயிகளின் போராட்டத்திலும் பங்கேற்றனா். பஞ்சாபைச் சோ்ந்த இந்திய மகளிா் ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் ராஜ்பீா் கெளா், முன்னாள் குத்துச் சண்டை வீரா் கா்தாா் சிங், முன்னாள் ஹாக்கி வீரா் குா்மேல் சிங், முன்னாள் கபடி வீரா் ஹா்தீப் சிங், முன்னாள் பளு தூக்கும் வீரா் தாரா சிங் உள்ளிட்டோா் தில்லி சிங்கு எல்லைப் பகுதியில் நடைபெற்று வரும் விவாசயிகளின் போராட்டத்தில் சனிக்கிழமை பங்கேற்றனா்.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதியுள்ளார்கள்.

நடிகை பிரியங்கா சோப்ரா

விவசாயிகள், இந்தியாவின் உணவுப் போர்வீரர்கள். அவர்களுடைய பயத்தைப் போக்க வேண்டும். அவர்களுடைய நம்பிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். ஜனநாயக நாடான நாம், இந்தப் பிரச்னை விரைவில் சரிசெய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

நடிகர் ரிதேஷ் தேஷ்முக்

இன்று நீங்கள் உணவு அருந்தினால், விவசாயிகளுக்கு நன்றி தெரிவியுங்கள். நம் நாட்டின் அனைத்து விவசாயிகளுடன் நான் துணை நிற்கிறேன். 

நடிகை ப்ரீத்தி ஜிந்தா

இந்தக் குளிரிலும் கரோனா சூழலிலும் போராடும் விவசாயிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு என் ஆதரவைத் தெரிவிக்கிறேன். பூமியின் படைவீரர்களாக நம் நாட்டின் முன்னேற்றத்தில் அவர்கள் பங்களிக்கிறார்கள். விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை விரைவில் நல்ல முடிவைத் தரும் என நம்புகிறேன். 

நடிகை சோனம் கபூர்

உழவுத் தொழில் தொடங்கும்போது இதர கலைகளும் பின்தொடரும். எனவே மனித நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்கள் விவசாயிகள் - டேனியல் வெப்ஸ்டர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT