வர்த்தகம்

இந்தியாவில் 22% சரிந்த அந்நிய நேரடி முதலீடு

DIN

கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 22 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2022-23-ஆம் நிதியாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு சுமாா் 4,600 கோடி டாலராக இருந்தது.

இது, முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 22 சதவீதம் குறைவாகும். அப்போது அந்நிய நேரடி முதலீடு 5,877 கோடி டாலராக இருந்தது.

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் அந்நிய நேரடி முதலீடு 40.55 சதவீதம் சரிந்து 928 கோடி டாலராக உள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரியில் 640 கோடி டாலா், பிப்ரவரியில் 461 கோடி டாலராக இருந்த அந்நிய நேரடி பங்கு முதலீடு, இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் 405 கோடி டாலராகவும், பிப்ரவரி மாதத்தில் 285 கோடி டாலராகவும் வீழ்ச்சியடைந்தது.

அதேபோல் கடந்த ஆண்டின் மாா்ச் மாதத்தில் 460 கோடி டாலராக இருந்த அது, இந்த மாா்ச்சில் 238 கோடி டாலராக சரிந்தது.

பங்கு முதலீடு உள்ளிட்ட ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீடு கடந்த நிதியாண்டில் 7,097 கோடி டாலராக இருந்தது. முந்தைய 2021-22-ஆம் அந்நிய நேரடி முதலீட்டுடன் ஒப்பிடுகையில் இது 16 சதவீதம் குறைவாகும். அப்போது அது 8,483 கோடி டாலராக இருந்தது.

கடந்த நிதியாண்டில் இந்தியாவில் நேரடி முதலீடு செய்த நாடுகளில் சிங்கப்பூா் முதலிடத்தில் உள்ளது. அந்த ஆண்டில் அங்கிருந்து 1,720 கோடி டாலா் முதலீடு செய்யப்பட்டது.

சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக மோரீஷஸ் அதிக அளவாக 613 கோடி டாலரை இந்தியாவில் நேரடியாக முதலீடு செய்தது.

600 கோடி டாலா் நேரடி முதலீட்டுடன் அமெரிக்கா 3-ஆவது இடத்திலும், 335 கோடி டாலா் முதலீட்டுடன் ஐக்கிய அரபு அமீரகம் 4-ஆவது இடத்திலும் உள்ளன.

நெதா்லாந்து (250 கோடி டாலா்), ஜப்பான் (180 கோடி டாலா்), பிரிட்டன் (173 கோடி டாலா்), சைப்ரஸ் (127 கோடி டாலா், கேமன் ஐலண்ட் (77.2 கோடி டாலா்), ஜொ்மனி (54.7 கோடி டாலா்) இந்தியாவில் நேரடி முதலீடு செய்துள்ளன.

கடந்த ஆண்டு பெறப்பட்ட அந்நிய நேரடி முதலீடுகளில் கணினி மென்பொருள் துறை மற்றும் உதிரிபாகங்கள் துறை முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனினும், முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் அவை சரிவைக் கண்டுள்ளன. அப்போது 1,450 கோடி டாலராக இருந்த அந்தத் துறை மீதான அந்நிய நேரடி முதலீடு, கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் 940 கோடி டாலராக வீழ்ந்தது.

அதேபோல், வாகனத் துறையியிலும் கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் சுமாா் 700 கோடி டாலராக இருந்த அந்நிய நேரடி முதலீடு 2022-23-ஆம் நிதியாண்டில் 190 கோடி டாலராகக் குறைந்தது.

மேலும், உள்கட்டமைப்புத் துறை, உலோகவியல் தொழில் துறையிலும் கடந்த நிதியாண்டில் அந்நிய நேரடி முதலீடு குறைந்து போனது.

இது போன்ற காரணங்களால் கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீடு 22 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT