வர்த்தகம்

மத்திய பட்ஜெட்: பங்குச் சந்தையில் தள்ளாட்டம்

தினமணி

பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி, இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்திருந்தது. சந்தை திசை தெரியாமல் தள்ளாட்டத்தில் இருந்தாலும், இறுதியில் நேர்மறையாக முடிந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 49 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 13.20 புள்ளிகள் (0.07 சதவீதம்) உயர்ந்து 17,662.15-இல் நிலைபெற்றது.
 2023 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டதால், பங்குச் சந்தை மற்றொரு நிலையற்ற அமர்வை கண்டது. காலையில் நேர்மறையான தொடக்கத்திற்குப் பிறகு, சந்தை முதல் பாதியில் அழுத்தத்திற்கு உள்பட்டது. பின்னர் மீட்சி பெற்றாலும், இரண்டாவது பாதியிலும் நிலையற்ற தன்மையில் இருந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. பொருளாதார வளர்ச்சி 6-6.8 சதவீதம் என கணிக்கப்பட்டிருந்தாலும், வட்டி விகிதம் தொடர்பான அமெரிக்க மத்திய வங்கியின் முடிவுக்காகவும் முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர் என்று வர்த்தகர்கள் தெரிவித்தன.
 சென்செக்ஸ் சிறிதளவு உயர்வு: சென்செக்ஸ் காலையில் 270.42 புள்ளிகள் கூடுதலுடன் 59,770.83-இல் தொடங்கி அதிகபட்சமாக 59,787.63 வரை மேலே சென்றது. பின்னர், 59,104.59 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 49.49 புள்ளிகள் (0.08 சதவீதம்) கூடுதலுடன் 59,549.90-இல் முடிவடைந்தது.
 வர்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் உச்சநிலையில் இருந்து 683.04 புள்ளிகளை இழந்திருந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 15 பங்குகள் ஆதாயமும் 15 பங்குகள் நஷ்டத்தையும் சந்தித்தன.
 எம் அண்ட் எம் முன்னேற்றம்: பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான எம் அண்ட் எம் 3.53 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, அல்ட்ரா டெக் சிமெண்ட், எஸ்பிஐ, ஐடிசி, பவர் கிரிட், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்டவை 2 முதல் 3 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், டைட்டன், ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல், மாருதி, எல் அண்ட் டி, ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை உயர்ந்த பட்டியலில் இடம் பெற்றன.
 டிசிஎஸ் சரிவு: அதே சமயம், பிரபல முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் 2.27 சதவீதம், தனியார் நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ், 2.26 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, டெக் மஹிந்திரா, சன்பார்மா, ஏசியன் பெயிண்ட், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்டவை 1 முதல் 2 சதவீதம் வரை குறைந்தன. மேலும், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, இன்ஃபோஸிஸ், விப்ரோ உள்ளிட்ட உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
 சந்தை மூலதன மதிப்பு ரூ.1.76 லட்சம் கோடி உயர்வு
 கடந்த வார இறுதியிலிருந்து பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்து வந்ததால் சந்தை மூலதன மதிப்பு வெகுவாகக் குறைந்திருந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சந்தை மூலதன மதிப்பு ரூ.1.76 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.270.23 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) திங்கள்கிழமை ரூ. 6,792.80 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT