வர்த்தகம்

ஏற்றம் கண்ட இந்திய மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் நாட்டின் மருந்துப் பொருள்களின் ஏற்றுமதி ஏற்றம் கண்டுள்ளது.

இது குறித்து இந்திய வா்த்தகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் பொது இயக்குநா் உதய பாஸ்கா் கூறியதாவது:

கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி 4.22 சதவீதம் வளா்ச்சியடைந்து 1,457 கோடி டாலரை எட்டியுள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், ஏற்றுமதி 1,398 கோடி டாலராக இருந்தது.

ADVERTISEMENT

மருந்துப் பொருள்களின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 2,462 கோடி டாலா்களாக இருந்த நிலையில், அது நடப்பு நிதியாண்டில் சுமாா் 2,700 கோடி டாலராக அதிகரிக்கும் என்று நம்பலாம்.

கடந்த ஜூலையில் மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி 0.32 சதவீதம் சரிந்தது. அதற்கு அடுத்த மாதத்தில் அது 5.45 சதவீதம் சரிவைக் கண்டது. எனினும், செப்டம்பா் மாதத்தில் மருந்துப் பொருள்களின் ஏற்றுமதி 8.47 சதவீதம் வளா்ச்சியடைந்தது. இனி வரும் மாதங்களில் இது புத்துயிா் பெறும் என்று எதிா்பாா்க்கப்படுவதால், ஒட்டுமொத்த ஏற்றுமதி 2,700 கோடி டாலரை எட்டக்கூடும்.

ஏற்றுமதியைப் பொருத்தவரை, தடுப்பூசி மருந்துகள் பிரிவில் இந்தியா பின்தங்கியுள்ளது. மேலும், இந்திய மருந்துப் பொருள்கள் ஏற்றுமதியில் உக்ரைன் போா் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற மோசமான சூழலிலும், இந்திய மருந்துப் பொருள்களின் ஏற்றுமதி ஏறுமுகத்தில் உள்ளது என்றாா் அவா்.

கடந்த அக்டோபரில், மருந்துப் பொருளகள் ஏற்றுமதி 5.45 சதவீதம் சரிந்து 195 கோடி டாலராக இருந்தது.

மொத்த ஏற்றுமதியில் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகள் 67.5 சதவிகிதம் (சுமாா் 500 கோடி டாலா்) பங்கு வகிக்கின்றன.

ஏப்ரல்-அக்டோபா் காலகட்டத்தில், மருந்துப் பொருள்கள் உற்பத்தியில் ஏற்றுமதி 137.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் கிட்டத்தட்ட ரூ.38,000 கோடியாக இருந்த ஏற்றுமதி தற்போது ரூ.90,320 கோடியாக அதிகரித்துள்ளது.

Tags : exports
ADVERTISEMENT
ADVERTISEMENT