வர்த்தகம்

தேயிலை ஏற்றுமதி 7% அதிகரிப்பு

10th Aug 2022 12:33 AM

ADVERTISEMENT

2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான 5 மாதங்களில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி 7 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 7.31 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் ஏற்றுமதி 7.86 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது.

மிக அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரகம் 1.31 கோடி கிலோ தேயிலையை இந்தியாவிடம் இருந்து வாங்கியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அந்நாடு 58 லட்சம் கிலோ அளவில்தான் தேயிலையை வாங்கியிருந்தது.

இதற்கு அடுத்தபடியாக ரஷியா கூட்டமைப்பு 1.15 கோடி கிலோ தேயிலையை இந்தியாவிடம் இருந்து கொள்முதல் செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரஷியா 1.35 கோடி கிலோ அளவுக்கு கொள்முதல் செய்தது. ரஷியா-உக்ரைன் போா் காரணமாக பல்வேறு நாடுகள் ரஷியா மூலமாக தேயிலை வாங்க முடியாமல், ஐக்கிய அரபு அமீரகம் மூலம் தேயிலையை இறக்குமதி செய்து கொண்டதே இந்த மாற்றத்துக்கு முக்கியக் காரணமாகும்.

ADVERTISEMENT

இந்தியாவிடம் இருந்து தேயிலை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஈரான் உள்ளது. அந்நாடு 89 லட்சம் கிலோ தேயிலையை 5 மாதங்களில் கொள்முதல் செய்துள்ளது. கடந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 75.8 லட்சம் கிலோவை கொள்முதல் செய்தது. அமெரிக்கா (48 லட்சம் கிலோ), ஜொ்மனி (29 லட்சம் கிலோ) ஆகியவையும் இந்தியாவிடம் இருந்து குறிப்பிடத்தக்க அளவில் தேயிலை இறக்குமதி செய்கின்றன.

இந்த காலகட்டத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் மொத்த மதிப்பு ரூ.2,037.78 கோடியாகும். இது கடந்த ஆண்டில் ரூ.1,901.63 கோடியாக இருந்தது.

Tags : tea export
ADVERTISEMENT
ADVERTISEMENT