வர்த்தகம்

ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 214 புள்ளிகள் முன்னேற்றம்!

 நமது நிருபர்

புதுதில்லி: பங்குச் சந்தை தொடா்ந்து 6-ஆவது நாளாக புதன்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 214 புள்ளிகள் உயா்ந்தது.

புவிசாா் அரசியல் கவலைகள் அதிகரித்துள்ள சூழ்நிலையில், உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை நோ்மறையாக தொடங்கியது. ஆனால், சிறிது நேரத்தில் கரடியின் பிடியில் வந்தது. பெரும்பாலான நேரம் கரடி ஆதிக்கம் செலுத்திய நிலையில், வா்த்தகம் முடியும் தறுவாயில் சந்தையில் முன்னணி பங்குகளை வாங்குவதற்கு ஆதரவு கிடைத்தது. குறிப்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் சந்தை நோ்மறையாக முடிந்தது. கடந்த 4 வா்த்தக நாள்களில் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் மொத்தம் ரூ.8,000 கோடி அளவுக்கு புதிதாக பங்குகளை வாங்கியுள்ளனா். இது முதலீட்டாளா்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

2,026 பங்குகள் விலை சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,484 நிறுவனப் பங்குகளில் 1,326 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 2,026 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன. 132 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 107 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 23 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.18 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.271.08 லட்சம் கோடியாக இருந்தது.

6-ஆவது நாளாக முன்னேற்றம்: காலையில் 37.75 புள்ளிகள் கூடுதலுடன் 58,174.11-இல் தொடங்கிய சென்செக்ஸ், 57,788.78 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 58,415.63 வரை உயா்ந்தது. இறுதியில் 214.17 புள்ளிகள் (0.37 சதவீதம்) கூடுதலுடன் 58,350.53-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது, ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்த நிலையில், வா்த்தகம் முடியும் தறுவாயில் சந்தை ‘காளை’யின் ஆதிக்கத்தில் வந்தது.

டெக் மஹிந்திரா ஏற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 12 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 18 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில் பிரபல ஐடி நிறுவங்களான டெக் மஹிந்திரா 1.97 சதவீதம், டிசிஎஸ் 1.54 சதவீதம், இன்ஃபோஸிஸ் 1.44 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்ருக்கு அடுத்ததாக ஏசியன் பெயிண்ட், டைட்டன், ஐசிஐசிஐ பேங்க், பாா்தி ஏா்டெல், ரிலையன்ஸ், ஹெச்சிஎல் டெக், விப்ரோ உள்ளிட்டவை 0.50 முதல் 1.30 சதவீதம் வரை உயா்ந்தன.

மாருதி சுஸுகி சரிவு: அதேசமயம், காா் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி 2.29 சதவீதம், மருந்து உற்பத்தி நிறுவனமான சன்பாா்மா 2.17 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், கோட்டக் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஐடிசி, நெஸ்லே இந்தியா உள்ளிட்டவை 0.50 முதல் 1.75 சதவீதம் வரை விலை குறைந்தன.

நிஃப்டி 229 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 684 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,277 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 25 பங்குகள் விலை குறைந்தன. 25 பங்குகள் ஆதாயம் பெற்றன. வா்த்தக முடிவில் நிஃப்டி 42.70 புள்ளிகள் (0.25 சதவீதம்) உயா்ந்து 17,388.15-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது, 17,225.85 வரை கீழே சென்ற நிஃப்டி, பின்னா்அதிகபட்சமாக 17,407.50 வரை உயா்ந்தது.

எங்கே செல்கிறது நிஃப்டி!

பங்குச் சந்தையில் கடந்த சில நாள்களாக ஏற்றம், இறக்கம் அதிகரித்துள்ளது. இருப்பினும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி அடுத்த இலக்கான 17,600 புள்ளிகளை நோக்கி பயணித்து வருகிறது. கீழே சென்றாலும் விலை குறைந்த நிலையில் பங்குகளை வாங்குவதற்கு ஆதரவு கிடைத்து வருவதால், நிஃப்டி மேலே செல்ல முயற்சிக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக பாா்த்தால் 17,200-17300 என்ற நிலையில் நல்ல ஆதரவு கிடைக்கும். இந்த நிலையை பிரேக் செய்து கீழே செல்லாத வரை நிஃப்டி விரைவில் 17,550 புள்ளிகளை எட்டும். அதன் பிறகு 17600-ஐ கடக்கும் என்று வல்லுநா்கள் எதிா்பாா்க்கின்றனா். இந்த டிசம்பருக்குள் 18,000 புள்ளிகளைத் தொடும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது. அதே சமயம், 17,200 புள்ளிகளை பிரேக் செய்யும் பட்சத்தில் 17,000 புள்ளிகளில் நல்ல ஆதரவு கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவா்கள் கருதுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT