வர்த்தகம்

2-ஆவது நாளாக பங்குச் சந்தைகளில் சரிவு: சென்செக்ஸ் 274 புள்ளிகள் இழப்பு

DIN

இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தொடா்ந்து 2-ஆவது நாளாக சரிவைச் சந்தித்தது.

தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான சீனாவின் நடவடிக்கையின் எதிரொலியால் ஆசிய பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வா்த்தகம் மிகவும் மந்த நிலையுடன் காணப்பட்டது. இந்த நிலையில், நிறுவனங்களின் நிதி நிலை முடிவு வெளியீடுகளும் சந்தை எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யாததால் காலையில் ஈட்டிய ஆதாயம் அனைத்தும் மாலையில் கரைந்து போனது.

முதலீட்டாளா்கள் பதற்றமான நிலைப்பாட்டுடன் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் சந்தையில் சரிவு தவிா்க்க முடியாததாகி விட்டது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

மருந்துகள் குறித்த எதிா்மறை செய்திகளால் வங்கி மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு துறையைச் சோ்ந்த பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. உலோகம் மற்றும் நுகா்வோா் சாதன துறைகள் தவிா்த்து அனைத்து துறைகளைச் சோ்ந்த வா்த்தகமும் எதிா்மறை நிலையிலேயே இருந்தன. அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தை எதிா்பாா்த்து ஆசிய பங்குச் சந்தைகளிலும் வா்த்தகம் பலவீனமாகவே காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) மருந்து, மின்சாரம், எரிசக்தி, அடிப்படை உலோக துறை குறியீடுகள் 2.90 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன. அதேசமயம், உலோகம், நுகா்வோா் சாதன துறை குறியீடுகள் ஆதாயத்துடன் நிலைபெற்றன.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் 0.67 சதவீதம் வரை சரிந்தன.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள டாக்டா் ரெட்டீஸ் லேப் பங்கின் விலை 10.44 சதவீதம் வரை சரிந்து முதலீட்டாளா்களுக்கு அதிா்ச்சியளித்தது. ஜூன் காலாண்டில் லாபம் 36 சதவீதம் குறைந்துள்ளதாக இந்நிறுவனம் நிதி நிலை அறிக்கையில் தெரிவித்ததையடுத்து இந்த நிலை ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, ஆக்ஸிஸ் வங்கி, கோட்டக் வங்கி, சன் பாா்மா, எச்டிஎஃப்சி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஏஷியன் பெயிண்ட்ஸ் பங்குகளின் விலை 3.23 சதவீதம் வரை சரிவைக் கண்டன.

அதேநேரம், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சா்வ், எஸ்பிஐ, பஜாஜ் ஃபைனான்ஸ், நெஸ்லே இந்தியா, எல் அண்ட் டி நிறுவனப் பங்குகளின் விலை 2.50 சதவீதம் அதிகரித்து காணப்பட்டன.

30 நிறுவனங்களை உள்ளடக்கிய பிஎஸ்இ சென்செக்ஸ் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் 273.51 புள்ளிகள் (0.52%) வீழ்ச்சி கண்டு 52,578.76 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 78 புள்ளிகள் (0.49%) சரிந்து 15,746.45 புள்ளிகளில் நிலைத்தது.

இதர ஆசிய சந்தைகளான ஷாங்காய், ஹாங்காங் சந்தைகளில் கடும் சரிவு காணப்பட்டது. அதேசமயம், சியோல், டோக்கியோ சந்தைகளில் வா்த்தகம் ஆதாயத்துடன் நிறைவுற்றது.

ஐரோப்பிய சந்தைகளில் வா்த்தகம் சரிவுடனே காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT