வர்த்தகம்

மீண்டெழுமா மனை வணிகம்?

சுரேந்தர் ரவி

வரலாறு தொட்டே நிலத்துக்கென தனிச்சிறப்பு உண்டு. நிலத்தை அடிப்டையாகக் கொண்டு மக்கள் சமூகம் அறியப்பட்ட காலமும் இருந்தது. நிலத்தின் மீது மோகம் கொண்டே அரசர்களின் படையெடுப்புகளும் நடந்தன. குறிப்பிட்ட அளவு நிலத்தைச் சொந்தம் கொண்டாடுவதில் அனைவருக்குமே பெருமை இருந்துள்ளது. 

அரசர்கள், ஜமீன்தாரர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் அதிக அளவிலான நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு முயன்றனர். நாம் சுதந்திரம் பெற்ற காலத்தில் நிலத்துக்கென பல்வேறு சட்டப் போராட்டங்களை அரசு நடத்த வேண்டியிருந்தது. 

பெரும் நிலச்சுவான்தாரர்களிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்தி ஏழை விவசாயிகளின் கையில் ஒப்படைப்பதற்காக அத்தகைய போராட்டங்கள் அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டன. ஆரம்பத்தில் விவசாய நிலங்களுக்கு அதிக அளவிலான தேவை காணப்பட்டது. 

காலப்போக்கில் தொழில்நுட்பம் பெருமளவில் வளர்ச்சியடைந்தது. சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மக்கள்தொகை வேகமாக அதிகரித்தது. அதன் காரணமாக குறைந்த ஊதியத்துக்கு பணியாளர்கள் கிடைத்தனர். புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறுவப்பட்டன. குறைந்த ஊதியப் பணியாளர்கள் மூலமாக லாபம் ஈட்ட முயன்ற அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்கள் தங்கள் பணிகளை வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கத் தொடங்கின. 

அத்தகைய தொழில்நுட்ப நிறுவனங்களில் பட்டதாரி இளைஞர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு அதிக ஊதியம் தரப்பட்டது. அவர்களின் வாழ்வாதாரமும் அதிகரித்தது. அதே காலகட்டத்தில் பணிக்குச் சென்று அதிக ஊதியம் ஈட்டுபவர்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

நிலத்தை வாங்கி பெரிய வீடு கட்டுவது உள்ளிட்டவற்றில் அவர்கள் ஈடுபட்டனர். அதன் காரணமாக மனை வணிகம் என்ற துறை சிறிது சிறிதாக வளர்ச்சியடையத் தொடங்கியது. அதே வேளையில், நகர்ப்பகுதிகளில் புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. எனவே, அந்நிறுவனங்களில் பணியாற்றியவர்களும் நகர்ப்பகுதிகளை நோக்கி படையெடுத்தனர். 

அவற்றின் காரணமாக நகர்ப்பகுதிகளில் மனை வணிகத் துறை அசுர வளர்ச்சியடையத் தொடங்கியது. கூடுதல் வருமானம் ஈட்டியவர்கள், வங்கி சேமிப்பை மற்ற விவகாரங்களில் முதலீடு செய்வதற்கு விழைந்தனர். அதில் முக்கிய இடத்தைப் பிடித்தது தங்கம். அதே வேளையில், மனை வணிகத் துறையையும் மிகப் பெரும் முதலீடாக அவர்கள் கருதத் தொடங்கினர். 

அதையடுத்து, 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மிகப் பெரிய முதலீடாக மனை வணிகம் விளங்கியது. 2008-ஆம் ஆண்டில் உலக நாடுகளின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. அதற்கான ஆணிவேர் மனை வணிகத் துறையிலேயே எழுந்தது. அந்த பொருளாதார மந்தநிலை இந்தியாவை பெருமளவில் பாதிக்கவில்லை என்றபோதும், இங்கும் மனை வணிகத் துறை சற்று வீழ்ச்சியை சந்தித்தது.

அத்துறை சிறிய அளவில் தடம்புரண்டது. எனினும், அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பத் தொடங்கியது மனை வணிகம். முக்கியமாக நடுத்தர மக்கள் புதிய மனையை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டினர். எதிர்காலத்துக்கான சிறந்த முதலீடாக மனை வணிகம் திகழ்ந்ததால், அத்துறை மீண்டும் வளர்ச்சி காணத் தொடங்கியது.

எனினும், 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மத்திய அரசு திடீரென அமல்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கை, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் திவாலானது, நாட்டில் பணப்புழக்கம் குறைந்தது உள்ளிட்டவை மனை வணிகத் துறையை மீண்டும் பதம்பார்த்தன. அப்போதிலிருந்து மீண்டெழ முடியாமல் தவித்து வந்த அத்துறைக்கு கரோனா நோய்த்தொற்று பரவல் மற்றுமொரு இடியாக விழுந்துள்ளது. 

அந்நோய்த்தொற்று பரவலால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. பலர் வேலையிழந்தனர். பல நிறுவனங்கள் பணியாளர்களுக்கான ஊதியத்தைக் குறைத்தன. வெளிநாட்டுப் பணியாளர்கள் பலர் இந்தியா திரும்பினர். மக்களின் சேமிப்பு குறைந்ததன் காரணமாக மனை வணிகத் துறையின் மீதான முதலீடும் பெருமளவில் குறைந்தது.

கரோனா நோய்த்தொற்று சூழலால் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு ஊக்குவித்து வருகின்றன. அதனால் நகர்ப்பகுதிகளில் முகாமிட்டிருந்த பணியாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்டனர். எனவே, நகர்ப்பகுதிகளில் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்குவதற்கும், புதிய மனைகளை வாங்குவதற்கும் ஆளில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

முக்கியமாக நகர்ப்பகுதிகளில் நிலத்துக்கான தேவை பெருமளவில் குறைந்துவிட்டது. அதனால், மனைகளின் விலை குறைந்து வருகிறது. இது தொடர்பாக நைட் ஃபிராங்க் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் மனைகளின் விலை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.9 சதவீதம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மனைகளின் விலையேற்றம் குறித்து 56 நாடுகளில் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் இந்தியா 54-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா 11 இடங்கள் சரிவைக் கண்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவலால் பெரும்பாலான நாடுகளில் மனைகளின் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில்தான் அதிகபட்சமாக விலை குறைந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. அதற்கான தடுப்பு மருந்தும் தயாரிக்கப்படவில்லை. அந்நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்குத் தொடர்ந்து ஊக்குவிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

எனவே, மனை வணிகத் துறை மீண்டெழுவது கடினம் என்றே தோன்றுகிறது. எனினும், நகர்ப்பகுதிகளில் குவிந்திருந்த பணியாளர்கள், கிராமப்பகுதிகளுக்குத் திரும்பியுள்ளனர். எனவே, அப்பகுதிகளில் மனை வணிகத் துறை வளர்ச்சி காண்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

வெளிநாடுகளிலும் மனைகளின் விலை குறைந்துள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் முதலீட்டுக்காக இந்தியாவிலுள்ள மனைகள் மீது கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளனர். எப்படி இருந்தாலும் அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்கு மனை வணிகத் துறை பெரும் சவாலைச் சந்திக்க வேண்டிவரும் என்றே தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT