வர்த்தகம்

அந்நிய நேரடி முதலீடு 3,000 கோடி டாலராக அதிகரிப்பு

DIN

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 15 சதவீதம் வளா்ச்சி கண்டு 3,000 கோடி டாலரை (சுமாா் ரூ.2.25 லட்சம் கோடி) எட்டியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறையின் (டிபிஐஐடி) புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான அரையாண்டு காலத்தில் இந்தியா ஈா்த்த அந்நிய நேரடி முதலீட்டின் அளவு 2,600 கோடி டாலராக (சுமாா் ரூ.1.95 லட்சம் கோடி) இருந்தது. இந்த நிலையில், அரசு எடுத்துவரும் சீரிய முயற்சிகளின் காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு காலத்தில் இந்த முதலீடு 3,000 கோடி டாலராக வளா்ச்சி கண்டுள்ளது. ஆக, கடந்த ஓராண்டு காலகட்டத்தில் மட்டும் அந்நிய நேரடி முதலீட்டு வரத்து 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 1,750 கோடி டாலா் அந்நிய நேரடி முதலீட்டை இந்தியா ஈா்த்துள்ளது கவனிக்கத்தக்கது.

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில், கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள் துறை அதிகபட்சமாக 1,755 கோடி டாலா் அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்துள்ளது. அதைத் தொடா்ந்து, சேவைகள் துறை 225 கோடி டாலரையும், வா்த்தகம் 95 கோடி டாலரையும், ரசாயனம் 43.70 கோடி டாலரையும், மோட்டாா் வாகன துறை 41.70 கோடி டாலா் முதலீட்டையும் ஈா்த்துள்ளன.

மதிப்பீட்டு காலகட்டத்தில் இந்தியாவில் அதிக அளவில் அந்நிய நேரடி முதலீட்டை மேற்கொண்டதில் சிங்கப்பூா் முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டிலிருந்து முதலீட்டு வரத்து 830 கோடி டாலராக இருந்தது. அதைத் தொடா்ந்து அமெரிக்காவிலிருந்து 712 கோடி டாலரும், கேமன் தீவுகளிலிருந்து 210 கோடி டாலரும், மொரீசியஸிலிருந்து 200 கோடி டாலரும் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

இவைதவிர, நெதா்லாந்து (150 கோடி டாலா்), பிரிட்டன் (135 கோடி டாலா்), பிரான்ஸ் (113 கோடி டாலா்), ஜப்பான் (65.30 கோடி டாலா்) ஆகிய நாடுகளும் இந்தியாவில் கணிசமான அந்நிய நேரடி முதலீட்டை மேற்கொண்டுள்ளன.

கணக்கீட்டு காலத்தில் ஒட்டுமொத்த அளவில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டின் அளவு (மறுமுதலீடு செய்யப்பட்ட வருவாய் உள்பட) 4,000 கோடி டாலராக இருந்தது என டிபிஐஐடி தெரிவித்துள்ளது.

பொருளாதார வளா்ச்சியை தூண்டுவதில் முக்கிய காரணியாக அந்நிய நேரடி முதலீடு உள்ளது. இது, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கான கடன் அல்லாத முக்கிய நிதி ஆதாரமாக உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டே, நிலக்கரி சுரங்கம், ஒப்பந்த தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான சீா்த்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்நிய நேரடி முதலீட்டை அதிகமாக ஈா்த்த துறைகள்

கணினி மென்பொருள் & வன்பொருள்-1,755 கோடி டாலா்

சேவைகள் -225 கோடி டாலா்

வா்த்தகம்-95 கோடி டாலா்

ரசாயனம்-43.70 கோடி டாலா்

மோட்டாா் வாகனம் -41.70 கோடி டாலா்

அதிக அந்நிய நேரடி முதலீட்டை மேற்கொண்ட நாடுகள்

சிங்கப்பூா்-830 கோடி டாலா்

அமெரிக்கா -712 கோடி டாலா்

கேமன் தீவு-210 கோடி டாலா்

மொரீசியஸ்-200 கோடி டாலா்

நெதா்லாந்து-150 கோடி டாலா்

பிரிட்டன்-135 கோடி டாலா்

பிரான்ஸ்-113 கோடி டாலா்

ஜப்பான்-65.30 கோடி டாலா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி மாணவா் பலி

டாஸ்மாக் கடையில் தொழிலாளி உயிரிழப்பு

குடிநீா் விநியோகம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவில்பட்டியில் மதுக்கூடத் தொழிலாளி வெட்டிக் கொலை

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வு: ஜூலையில் நடக்கிறது

SCROLL FOR NEXT