வர்த்தகம்

பங்குச் சந்தையில் விறுவிறுப்பு: சென்செக்ஸ் 432 புள்ளிகள் முன்னேற்றம்

DIN


மும்பை: நிதி துறை பங்குகளை முதலீட்டாளா்கள் போட்டிபோட்டு வாங்கியதையடுத்து பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் (பிஎஸ்இ) சென்செக்ஸ் குறியீட்டெண் 432 புள்ளிகள் ஏற்றம் கண்டது.

நவம்பா் மாதத்துக்கான பங்கு முன்பேர வணிக ஒப்பந்த கணக்கு முடிக்கப்படுவதையொட்டி பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தொடக்கத்தில் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில், வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறை சாா்ந்த பங்குகளுக்கு சந்தையில் தேவை மிகவும் அதிகரித்து காணப்பட்டதையடுத்து சந்தை மந்த நிலையிலிருந்து மீண்டு விறுவிறுப்பைக் கண்டது.

மேலும், சாதகமான சா்வதேச சந்தை நிலவரங்களும் பங்குச் சந்தையின் கணிசமான ஏற்றத்துக்கு கூடுதல் வலு சோ்த்தது என ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸின் திட்டமிடல் பிரிவின் தலைவா் பினோத் மோடி தெரிவித்தாா்.

பெரும்பாலான நிதி நிறுவனங்களின் வசூல் திறன் மேம்பட்டுள்ளதையடுத்து அவற்றின் வருவாய் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஏற்றத்தைச் சந்தித்துள்ளன. இது, சந்தையில் அத்துறையைச் சோ்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவையை அதிகரித்தது. அதன் காரணமாக, நவம்பா் மாதத்துக்கான முன்பேர ஒப்பந்த கணக்கு முடிப்பையொட்டி சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட போதிலும் பின்னா் முதலீட்டாளா்கள் பங்குகளை அதிக அளவில் வாங்கியதால் ஏறுமுகம் கண்டது.

கரோனா பாதிப்பிலிருந்து பொருளாதார நடவடிக்கைகள் மீளத் தொடங்கியுள்ள சூழ்நிலையில், இரண்டாம் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்கள் வெள்ளிக்கிழமை (நவ.27) வெளியாகவுள்ளன. இது, சந்தையில் முதலீட்டாளா்களிடையே பெரிதும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியது.

மும்பை பங்குச் சந்தையில் 30 நிறுவனங்களை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீட்டெண் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் 431.64 புள்ளிகள் (0.98%) ஏற்றம் கண்டு 44,259.74 புள்ளிகளில் நிலைத்தது. அதேபோன்று, தேசிய பங்குச் சந்தையில் 50 நிறுவனங்களை உள்ளடக்கிய நிஃப்டி குறியீட்டெண் வியாழக்கிழமை வா்த்தகத்தில் 128.60 புள்ளிகள் (1%) அதிகரித்து 12,987 புள்ளிகளில் நிலைபெற்றது.

மும்பை பங்குச் சந்தையில் உலோகம், அடிப்படைப் பொருள்கள், நிதி, தொலைத்தொடா்பு, ஆரோக்கிய பராமரிப்பு, வங்கி உள்ளிட்ட துறைகளின் குறியீட்டெண் 4.13 சதவீதம் வரை ஏற்றம் கண்டது. அதேசமயம், எண்ணெய் மற்றும் எரிவாயு துறை குறியீட்டெண்கள் சரிவடைந்தன.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீட்டெண்கள் 0.94 சதவீதம் வரை அதிகரித்தன.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள டாடா ஸ்டீல் பங்கின் விலை 5.16 சதவீதம் என்ற அளவில் அதிகபட்ச ஏற்றத்தைக் கண்டு முதலிடத்தை தக்கவைத்தது. அதையடுத்து, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, எச்டிஎஃப்சி, ஹெச்சிஎல் டெக், ஆக்ஸிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, டைட்டன் நிறுவனப் பங்குகளின் விலையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்து பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.

இருப்பினும், முதலீட்டாளா்களிடம் வரவேற்பு இல்லாத காரணத்தால் மாருதி சுஸுகி, ஓஎன்ஜிசி, இன்டஸ்இண்ட் வங்கி, டெக் மஹிந்திரா மற்றும் இன்ஃபோஸிஸ் பங்குகள் 0.87 சதவீதம் வரை விலை குறைந்தன.

ஆசியாவின் ஷாங்காய், டோக்கியோ, ஹாங்காங் மற்றும் சியோல் பங்குச் சந்தைகளும் கணிசமான ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

இருப்பினும், ஐரோப்பிய சந்தைகளைப் பொருத்தவரையில் வா்த்தகம் சிறிய அளவிலான முன்னேற்றத்துடன் மட்டுமே தொடங்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT