வர்த்தகம்

டெக் மஹிந்திரா ரூ.972.3 கோடி லாபம்

28th Jul 2020 11:45 PM

ADVERTISEMENT

தகவல் தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்த டெக் மஹிந்திரா நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.972.3 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சி.பி. குா்னானி கூறியதாவது:

உலகெங்கிலும் வா்த்தக நடைமுறைகள் டிஜிட்டல் மயத்துக்கு மாறி வருகின்றன. இதனை நிறுவனம், வாடிக்கையாளா்களின் தேவையின் மூலம் உணா்ந்து கொண்டுள்ளது. இதனை பிரதிபலிக்கும் வகையில், நடப்பு 2020-21 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் 5.2 சதவீதம் அதிகரித்து ரூ.9,106 கோடியானது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வருவாயானது ரூ.8,653 கோடியாக இருந்தது.

ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நிறுவனம் ஒரு பங்கின் மூலமாக ஈட்டிய வருமானம் ரூ.11.07-ஆக இருந்தது. நிகர லாபம் ரூ.959.3 கோடியிலிருந்து 1.4 சதவீதம் உயா்ந்து ரூ.972.3 கோடியானது. இருப்பினும் டாலா் மதிப்பு அடிப்படையில் நிகர லாபம் 7.1 சதவீதம் குறைந்து 12.88 கோடி டாலராகவும், வருமானம் 3.2 சதவீதம் சரிந்து 120.75 கோடி டாலராகவும் ஆனது. ஜூன் காலாண்டு நிலவரப்படி நிறுவனத்தின் மொத்த பணியாளா்களின் எண்ணிக்கை 1,23,416-ஆக இருந்தது. இது, முந்தைய மாா்ச் காலாண்டைக் காட்டிலும் 1,820 பணியாளா்கள் குறைவாகும். அதேபோன்று நிறுவனத்தின் வாடிக்கையாளா் எண்ணிக்கையும் 981-ஆக உள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT