நூல் - திரைப்படம் 

புத்தகம் என்பது.. 

DIN


புத்தகம் என்பது... - ஈரோடு தமிழன்பன் 

கவிஞர் ஈரோடு தமிழன்பன் எழுதிய புத்தகம் என்பது... (2016) என்ற கவிதை நூலில் ஏற்கனவே புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களைக்  கூட தன் பக்கம் சுண்டியிழுக்கும் ஆற்றல் பெற்ற 122 குட்டிக் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொன்றும் வெறும் கவிதைகள் அல்ல, அவை ஒவ்வொன்றும் ஒரு முத்து. தமிழில் கவிதைப் புத்தகங்கள் நிறைய இருக்கலாம். ஆனால் இது புத்தகத்தை பற்றிய கவிதைகளைக் கொண்டிருக்கும் அற்புதமான புத்தகமாகும். இது கவிதையால் நெய்த நூல். கவிதை என்பது எப்போதும் வருவதல்ல, எப்போதாவது வருவது என்று வலம்புரி ஜான் அடிக்கடி குறிப்பிடுவார். எப்போதாவது வந்ததை தேனீக்கள் தேன் கூட்டில் தேன் சேர்ப்பதுபோல  அழகாகப் புத்தகத்தில் சேர்த்துள்ளார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.  ஒரு கவிதையின் வெற்றி என்பது அது வாசகனையும் அதன் பங்காளியாக ஆக்க வேண்டும். இதில் அதுபோன்ற பல கவிதைகள் இடம்பெற்று நூலுக்கு வெற்றி வாகை சூடியுள்ளன. 

இந்த புத்தகத்தின் முதல் கவிதையான
 
“ பத்துப் 
பறவைகளோடு பழகி 
நீங்கள் 
ஒரு பறவையாக முடியாது 
பத்து
நதிகளோடு பழகி 
நீங்கள் 
ஒரு நதியாக முடியாது
பத்துப் 
புத்தகங்களோடு பழகிப் பாருங்கள் 
நீங்கள் 
பதினோராவது புத்தகமாகிப்
படிக்கப்படுவீர்கள்.”
   என்ற கவிதையே இந்த நூலுக்கு மகுடம் சூட்டுவது போல நச்சென்று உள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்லவா. 

இதற்கும் ஒருபடி மேலே சென்று ஒரு கவிதையில் 

“புத்தகம் படித்தவர்கள் 
எல்லாம் அறிவாளிகள் இல்லை.
ஆனால்
அறிவாளிகள் எல்லாம் 
புத்தகம் படித்தவர்களே.” 

என்று எளிய மொழிநடையில் எழுதியிருப்பது, கவிதைக்கு மெய்யும் அழகு என்பதை உணர்த்துகிறது. 

“ படித்து 
மறந்துகொண்டே இருப்பதைவிட, 
மறந்து 
படித்துக் கொண்டிருப்பது 
நல்லது. மறந்துவிடாதீர்கள்.” 

இந்த கவிதை இவருடைய புத்தகத்திற்கு மட்டுமல்ல, எல்லா நல்ல புத்தகத்திற்கும் பொருந்தும் உண்மை. நல்ல புத்தகத்தோடு நீங்கள் செலவிடும் நேரமும், பணமும் செலவுகள் அல்ல, அது உங்கள் வாழ்வின் முதலீடுகள் என்பதை மறந்துவிடாதீர்கள். ஒரு இனிப்பு பலகாரத்தை பற்றி உண்டவர் கூறினால் திருப்தி அடையாமல் தானே உண்டு அதன் சுவையை அறிய வேண்டும் என்று கேட்பவர் முனைவதுபோல, இந்த புத்தகம் படித்த போது நான் அடைந்த ஆனந்தத்தைப் போல நீங்களும் பேரானந்தத்தை அடைய வேண்டும் என்றால் நீங்களும் இந்தப் புத்தகத்தைப் படித்துப்பாருங்கள். நிச்சயம் அதை நீங்களும் உணர்வீர்கள். 
    
இந்த புத்தகத்தில் உள்ள தமிழ்க் கவிதைகளின் சுவையை தமிழ் தெரியாதவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக பேராசிரியர் ஏ. அய்யாசாமி, இந்த கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அதுவும் இந்த புத்தகத்திலேயே இடம்பெற்றுள்ளது, இந்த நூலின் மற்றுமொரு சிறப்பாகும். எந்த ஒரு மொழிபெயர்ப்பாளனும் கவிதையை மொழிபெயர்க்கும்போது  கவிதையின் பொருளை எளிதாக மொழி பெயர்த்துவிடுகிறார்கள், ஆனால் அதன் சுவையை ஒரு மொழியிலிருந்து மற்ற மொழிக்குப் பெயர்ப்பதில் கோட்டைவிட்டுவிடுவார்கள். ஆனால் இந்த புத்தகத்தில் உள்ள அனைத்து கவிதைகளையும் அதன் பொருளும் சுவையும் மாறாமல் ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்துள்ளார் பேராசிரியர்  அய்யாசாமி. பேச்சாளர்கள் மேடையில் மேற்கோள்கள் காட்டுவதற்கான பல கவிதைகள் இந்த நூலில் உள்ளன. படித்து பயன் பெறுங்கள்.

- கு. முருகேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

திருத்தங்கலில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT