பிரபலங்கள் - புத்தகங்கள்

'திருமந்திரம்': ஒன்றே குலம் ஒருவனே தேவன்! - இராம. வீரப்பன்

இராம. வீரப்பன்

1978-ம் ஆண்டுக்கு பிறகுதான் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது அடிக்கடி ஆலயங்களுக்கு செல்கிற அவசியம் ஏற்பட்டதையொட்டி ஆலயங்கள் தொடர்பாக தல வரலாறுகள்,  சமய இலக்கியங்களைப்  படிக்கிற வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

 அறநிலையத்துறையில் முழுமையாக நான் ஈடுபட்ட பிறகு ஒரு உண்மை விளங்கியது. அறுபது ஆண்டு காலத்திற்கு மேல் எங்களுடைய திராவிட இயக்கம் சமுதாய உயர்வுக்காகப் பல எதிர்ப்பு இயக்கங்களை மேற்கொண்டதால் சமய இலக்கியங்களை குறித்து தமிழ் மக்களுக்கு சரியான பாதையை காட்டாமல் எங்கோ பிழை ஏற்பட்டுவிட்டது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் முழு நாத்திகராக விளங்கிய தந்தை பெரியாருடைய மாணவர். தந்தை பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட ஒரு தலைவர் என்றாலும் தந்தை பெரியாரோடு முரண்பட்டு 1949-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய போது தந்தை பெரியாருடைய லட்சியத்திற்கு மாறாக நாத்திகக் கொள்கைக்கு எதிரான திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை ’ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று சொற்றொடரை லட்சியமாக பிரகடனப்படுத்தினார்.

ஆனால் இது சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறையாக இடம் பெற்றிருக்கிற திருமூலர் திருமந்திரத்தில் உள்ள தத்துவமாகும். பேரறிஞர் அண்ணா திருமந்திரத்தில் இருந்து இந்த உயரிய தத்துவத்தை எப்படி எடுத்தார் என்பதற்கான அடிப்படை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் எனக்கு தெரிந்தது. திருமூலர் திருமந்திரம் தனக்குப் பிடித்த தமிழ் இலக்கியம் என பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டதாக இசைப்பேரறிஞர் காஞ்சிபுரம் வீர விநாயக முதலியார் குறிப்பிடுகிறார்.

இதிலிருந்து ஓர் ஆழமான உண்மை புரிகிறது பேரறிஞர் அண்ணா சமய இலக்கியங்களை ஆழ்ந்து படித்திருக்கிறார் என்பது மட்டும் இன்றி அவரை கவர்ந்த சமய இலக்கியமாக திருமூலர் திருமந்திரம் இருந்திருக்கிறது என்பதும் தெரிகிறது.

திருமூலர் திருமந்திரம் என்பது சமய எல்லைகளை எல்லாம் தாண்டி 1,500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் மிக உயர்ந்த விஞ்ஞான அறிவோடு உலகியல் அறிவோடு வாழ்வியல் நுட்பத்தோடு வாழ்ந்திருக்கிறான் என்பதற்கு 5, 6ஆம் நூற்றாண்டில் கிடைத்திருக்கிற ஒரு உதாரணக் கருவூலம். திருமூலர் திருமந்திரத்தை பற்றி பேசுபவர்கள் அதிலிருந்து பல சொற்றொடர்களை அடிக்கடி பயன்படுத்துவார்கள். ’ஒன்றே குலம் ஒருவனே தேவனும்’ ’என்னை நன்றாக இறைவன் படைத்தனன்; தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு’  ‘அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவம் என்பது ஆரும் அறிகிலார்’

உள்ளம் பெரும் கோயில் ஊனுடம்பு ஆலயம்

 உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்

 படமாடாக் கோயில்  பகவற்கு ஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நும்பர்க்கு அங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே’

’யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை

யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை

யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி

யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே’

இப்படிப்பட்ட சிறந்த சொற்றொடர்களை பேச்சாளர்கள், அறிஞர் பெருமக்கள், சைவ சித்தாந்திகள் அடிக்கடி பயன்படுத்துவார்கள். இந்த நூற்றாண்டில் நம்முடைய காலத்தில் விஞ்ஞானம் தெரிவிக்கின்ற பல கருத்துக்களை திருமூலர் தன்னுடைய பாடல்களில் தெரிவித்திருக்கிறார் என்பது தான் வியப்புக்குரியது.

உதாரணமாக கரு உற்பத்தி என்ற தலைப்பில் சுமார் 42 பாடல்களில் ஆண் -  பெண் உடலுறவில் இருந்து தொடங்கி கரு உருவாகி குழந்தை பிறப்பது வரை ஆண் குழந்தை எப்படிப் பிறக்கிறது? பெண் குழந்தை எப்படிப் பிறக்கிறது?  என்றெல்லாம் அறிவார்ந்த நுட்பத்தோடு பாடியிருக்கிறார். இவற்றை எல்லாம் விட ஆச்சரியப்படத்தக்க ஒரு கருத்து இன்றைக்கு சோதனை குழாய் குழந்தை என்கிறோமே அதைப் பற்றியும் பாடியிருக்கிறார்.

அந்தப்பாடல் குயில் குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிலிட்டால் அயிர்ப் பின்றிக் காக்கை வளர்கின்றது போல்’ என்று சொல்கிறார். நான் ஏதோ அரை குறையாகச் சொல்லவில்லை. மகப்பேறு மருத்துவத்தில் புதிய விஞ்ஞான யுத்திகளை எல்லாம் கையாண்டு புதிய சோதனைகளில் வெற்றி பெற்றிருக்கிற மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் ஜெயம் கண்ணன் போன்றவர்கள் ஆச்சரியத்தோடு இதை எடுத்துச் செல்கிறார்.

ஆனால் இதை பற்றி மூதறிஞர் ராஜாஜியும் தமிழறிஞர் மீ.ப.சோமுவும்  இணைந்து ‘கல்கி’ பத்திரிகையில் தொடர்ந்து 51 கட்டுரைகள் எழுதினார்கள். அது 30 ஆண்டுகளுக்கு முன்பு நூலாக வெளிவந்திருக்கிறது. ‘திருமூலர் தவமொழி’ என்று அந்த நூலுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அந்த நூலிலே இராஜாஜி அவர்கள் ‘’திருமூலர் கலைகளை எல்லாம் கற்றுத் தேர்ந்தவர். வைத்தியம், இரசாயனம், பௌதிகம், வானசாஸ்திரம் முதலிய எல்லாத் துறைகளிலும் வல்லவர் ஆவார், சாதாரண மனித அறிவின் எல்லைகளுக்குள்ளும், அதற்கு அப்பாலும் விரிந்து பரந்து இருக்கிற தத்துவங்களை எல்லாம் மெய்யுணர்வு கண்டுபிடிக்கிற ரிஷி என்பதை திருமந்திர நூலில் பல இடங்களில் வியக்கத்தக்க வகையில் காண்கிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு ஏன் திருமந்திரம் என்று பெயர் வந்தது என்றால் ’நிறைமொழி மாந்தர் ஆணையிற்கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப’ என்பார் தொல்காப்பியர். திருமந்திரம் முழுவதையும் படிக்கவில்லையானாலும் அதற்கு முன்னுரையாக மூதறிஞர் ராஜாஜியும் சோமுவும் இணைந்து எழுதிய ’திருமூலர்  தவமொழி’ என்ற நூலைப் படியுங்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT