ஜோதிட கேள்வி பதில்கள்

நஷ்டத்தை ஈடுசெய்ய புதிதாக கடன் வாங்கி தொழிலில் போட வேண்டியுள்ளது. மீளமுடியாத கடனில் சிக்கி தவிக்கப் போகிறேனோ என்ற பயம் உண்டாகிறது. தொழிலை படிப்படியாக விட்டு விடலாமா... விடிவு காலம் உண்டா...

தினமணி

குருமங்கள யோகத்தால் கூடும் உயர்வு
 நான் செய்துவரும் தொழிலில் தேவையற்ற முட்டுக்கட்டைகள், வழக்குகள் வந்துகொண்டே இருக்கின்றன. நஷ்டத்தை ஈடுசெய்ய புதிதாக கடன் வாங்கி தொழிலில் போட வேண்டியுள்ளது. மீளமுடியாத கடனில் சிக்கி தவிக்கப் போகிறேனோ என்ற பயம் உண்டாகிறது. தொழிலை படிப்படியாக விட்டு விடலாமா... விடிவு காலம் உண்டா...
 வாசகர், கோவை.
 உங்களுக்கு கடக லக்னம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம். லக்னாதிபதி சந்திர பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். சந்திர பகவான் தனு (உடல்) காரகராக ஆவதால் ஜாதகரின் தோற்றம், மாதுரு (தாய்) காரகராக ஆவதால் தாயின் நிலையையும் உணர்த்துவார்.
 பெண் கிரகமாவார். பலமுள்ள சந்திர பகவானால் உடல் வலிமை, மன வலிமை (மனோ காரகர்) வாழ்வில் வெற்றி, செய்யும் தொழிலில் சிறப்பு ஆகியவை உண்டாகும்.
 பலமிக்க சந்திர பகவானால் கவர்ச்சிமிக்க நிறம் உண்டாகும். அதோடு அழகிய கண்களை உடைய முகமாகவும் அமையும். அதனால் முகத்தைச் சந்திரனுக்கு ஒப்பாகக் கூறுவார்கள்.
 புனித நீர், பால், பான வகைகள், மீனுக்கு காரகத்துவம், கப்பல், கடல் வியாபாரம், வெளிநாட்டுத் தொடர்பு ஆகியவைகளும் உண்டாகும். லக்னாதிபதி லக்னத்தைப் பார்ப்பது சிறப்பு. பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் சந்திர பகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார்.
 பூர்வ புண்ணியாதிபதி, தொழில் ஸ்தானாதிபதி தன் ஆட்சி வீட்டை (விருச்சிகம்) பார்வை செய்வது சிறப்பாகும். ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் ராகு பகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலத் திரிகோண வீடான தனுசு ராசியை அடைகிறார்.
 பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்திற்கு பன்னிரண்டாம் வீட்டில் பலம் பெற்றிருக்கும் குரு பகவானால் புதையல் யோகத்தையும் கொடுக்க முடியும். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சூரிய பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சனி பகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான சிம்ம ராசியை அடைகிறார்.
 தனாதிபதி ராசியில் ஒன்பதாம் வீட்டிலும், நவாம்சத்தில் தன் ஆட்சி வீட்டிலும் இருப்பது சிறப்பு. தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் ராகு பகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) விபரீத ராஜயோகம் (பன்னிரண்டாமதிபதி எட்டாம் வீட்டில் அமரும் நிலையால் உண்டாவது) பெற்று நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார்.
 புத பகவானும், குரு பகவானும் ஒரே நட்சத்திர பாகையில் இணைந்திருப்பதும் சிறப்பு.
 புத்தி காரகர் ஞான காரகருடன் இணைந்திருக்கிறார். சகல சாஸ்திரங்களையும் அறிந்த குரு பகவானுடன் வியாபாரத்துக்கு காரகரான புத பகவான் இணைந்திருப்பது, செய்தொழிலில் ஏற்படும் பிரச்னைகளை முன்கூட்டியே அறிந்து சமயோஜிதமாக செயல்பட்டு வெற்றி உண்டாகும் என்று கூறவேண்டும். புத பகவான் வலுத்திருப்பதால் பேச்சுத் திறன் கூடும். எடுத்த காரியங்களை எப்பாடுபட்டேனும் முடித்துவிடுவார்கள்.
 சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் சந்திர பகவானின் சாரத்தில் (திருவோணம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார்.
 குரு பகவானின் ஐந்தாம் பார்வை பன்னிரண்டாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சனி, கேது பகவான்களின் மீதும், ஏழாம் பார்வை தன ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை சுக ஸ்தானமான நான்காம் வீட்டின் மீதும் படிகிறது. ராகு பகவான் ஆறாம் வீட்டில் கேது பகவானின் சாரத்தில் (மூலம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார்.
 ராகு பகவானுக்கு அஷ்டலட்சுமி யோகம் உண்டாகிறது.
 கேது பகவான் பன்னிரண்டாம் வீட்டில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். தர்மகர்மாதிபதிகளான செவ்வாய், குரு பகவான்கள் ஒருவருக்கொருவர் கேந்திரம் பெற்றுள்ளார்கள். குரு மங்கள யோகத்தால் தன்னம்பிக்கை, சாதனைகள் செய்யும் வலிமை, வீர தீர பராக்கிரமங்களில் தேர்ச்சி, உடல்வலிமை, மனவலிமை, துணிச்சல், வாதத்தில் தேர்ச்சி, துணிந்து எதிலும் தலையிடுகின்ற வேகம், சொல்வதைச் செயலில் காட்டும் ஆற்றல், அரசாங்கத் தொடர்பு, எதிலும் தலைமை தாங்குகின்ற தகுதி, எதிர்ப்பை வெல்லும் உறுதி ஆகியவைகள் உண்டாகும்.
 தன ஸ்தானங்களான இரண்டு, ஒன்பது, பதினொன்றாம் வீடுகள் சிறப்பான பலம் பெற்றுள்ளபடியாலும், தற்சமயம் குரு மஹா தசையில் சுக்கிர பகவானின் புக்தி நடப்பதாலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு உங்கள் பொருளாதார பிரச்னைகள் முழுவதும் அகன்றுவிடும். செய்தொழிலில் லாபம் வரத் தொடங்கும். இது ஏழரை நாட்டு சனியில் பொங்கு சனி காலமாக இருப்பதும் சிறப்பு. பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT