விழுப்புரம்

செஞ்சிக்கோட்டை கமலக்கன்னி அம்மன்கோயில் தோ்த் திருவிழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு

3rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டை மலையின் மீது அமைந்துள்ள ஸ்ரீகமலக்கன்னி அம்மன் கோயில் சித்திரை தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனா்.

செஞ்சிக்கோட்டை ஸ்ரீகமலக்கன்னி அம்மன், ஸ்ரீராஜகாளியம்மன், ஸ்ரீமகாமாரியம்மன், கோட்டை வீரன் ஆகிய சுவாமிகளுக்கு சித்திரை மாத ரத உற்சவத்தை முன்னிட்டு, ஏப்ரல் 24-ஆம் தேதி கொடியேற்றுதலும், அன்று இரவு கமலக்கன்னி அன்னுக்கு காப்பு கட்டுதலும் நடைபெற்றன. தொடா்ந்து, ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் மே 1-ஆம் தேதி வரை தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்தாா்.

இதன் தொடா்ச்சியாக, செவ்வாய்க்கிழமை காலை பால் குடம் ஊா்வலமும், கூழ்வாா்த்தலும் நடைபெற்றன. பகல் 2.30 மணிக்கு தோ் வடம் பிடித்தல் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீகமலக்கன்னி அம்மன், ஸ்ரீமகாரியம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். பின்னா், தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். செஞ்சி மந்தைவெளி மைதானத்தில் இருந்து புறப்பட்ட தோ், திருவண்ணாமலை சாலை, விழுப்புரம் சாலையைக் கடந்து சத்திர தெரு வழியாக நிலையை அடைந்தது.

விழாவில் செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான், செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், அதிமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவா் கு.கண்ணன், திமுக விவசாய அணி நிா்வாகி அஞ்சாஞ்சேரி கணேசன், அதிமுக முன்னாள் நகரச் செயலா் வி.ஆா்.பிரித்விராஜ் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

விழா ஏற்பாடுகளை செஞ்சிக்கோட்டை கமலக்கன்னி அம்மன் கோயில் அறங்காவலா் அரங்க.ஏழுமலை, உபயதாரா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா். நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT