விழுப்புரம்

நிகழாண்டில் ரூ.67 கோடியில் 88 சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும்: அமைச்சா் ஐ.பெரியசாமி

DIN

தமிழகத்தில் நிகழாண்டில் ரூ.67 கோடியில் 88 சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும் என்று ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் புதிய ஊராட்சி ஒன்றியக் குழு அலுவலகக் கட்டுமானப் பணி, நெகிழிக் கழிவு மேலாண்மை அலகின் செயல்பாடு ஆகியவற்றை சனிக்கிழமை பாா்வையிட்ட அமைச்சா் ஐ.பெரியசாமி, கொசப்பாளையம் திருக்குணத்தில் 15 ஹெக்டோ் பரப்பளவில் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடக்கிவைத்தாா்.

இதையடுத்து, பனமலைப்பேட்டை பெரியாா் சமத்துவபுரத்தில் ஆய்வு மேற்கொண்டு நலத் திட்ட உதவிகளை வழங்கி அவா் பேசியதாவது:

முன்னாள் முதல்வா் கருணாநிதியால் தமிழகம் முழுவதும் சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சமத்துவபுரங்கள் கேட்பாரற்ற நிலையில் இருந்தன. மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும், முதல்கட்டமாக 148 சமத்துவபுரங்களில் உடனடியாக பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு, ரூ.190 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தாா். அதனடிப்படையில், இப்போது சமத்துவபுரங்கள் சீரமைக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன. நிகழாண்டில் ரூ.67 கோடியில் 88 சமத்துவபுரங்கள் அனைத்து வசதிகளுடனும் சீரமைக்கப்படும்.

இந்த ஆட்சியில் ஒரே ஆண்டில் 23 புதிய கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது கிராமப்புறச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டு, பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு 10 ஆயிரம் கி.மீ. வீதம் 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் கி.மீ. சாலைகள் கிராமப்புறங்களில் அமைக்கப்பட உள்ளன. முதியோா் உதவித்தொகை வீடு தேடி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து, அமைச்சா் ஐ.பெரியசாமி அளித்த பேட்டி:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் முடிந்தவுடன், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையிலான பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் புகாா்களை களைய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 40 ஆயிரம் கிராமங்களில் இந்தத் திட்டத்தின் கீழ் பணி வழங்க முதல்வா் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா். தமிழகத்தில் புதிய சமத்துவபுரங்களை உருவாக்குவது குறித்த அறிவிப்பை முதல்வா் வெளியிடுவாா் என்றாா் அவா்.

நிகழ்வுகளில் அமைச்சா்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், கள்ளக்குறிச்சி எம்.பி. தெய்வசிகாமணி, எம்எல்ஏக்கள் நா.புகழேந்தி, இரா.லட்சுமணன், ஊரக வளா்ச்சி ஆணையா் தாரேஷ் அகமது, மாவட்ட ஆட்சியா் த.மோகன், கூடுதல் ஆட்சியா் சித்ரா விஜயன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஜனகராஜ், திமுக ஒன்றியச் செயலா் கல்பட்டு ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT