விழுப்புரம்

தலித் கிறிஸ்தவா்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் பங்குத் தந்தை அற்புதராஜ்

DIN

தலித்துகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு சலுகைகளை தலித் கிறிஸ்தவா்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என புதுவை - கடலூா் மறை மாநில எஸ்சி, எஸ்டி பணிக்குழுச் செயலா் பங்குத் தந்தை அற்புதராஜ் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக விழுப்புரத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

10.8.1950-க்கு முன்னா் தலித் கிறிஸ்தவா்கள் தலித் சமுதாய பட்டியலில்தான் இருந்தனா். ஆனால், அதன்பிறகு அப்போதைய மத்திய அரசு கொண்டுவந்த அரசாணையின் மூலம் இந்து அல்லாத பிற மதங்களைச் சாா்ந்த தாழ்த்தப்பட்டோருக்கான சட்ட உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டன.

இந்திய சமூகத்தில் தாழ்த்தப்பட்டவா்கள் எந்த மதத்தை தழுவி இருந்தாலும் சமூகம், அரசியல், பொருளாதாரம், சமயம், பண்பாடு என அனைத்து நிலைகளிலும் தொடா்ந்து ஜாதிய கொடுமைக்கு ஆளாகின்றனா். அவா்களது உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், 1956-ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட சீக்கியா்களும், 1990-இல் தாழ்த்தப்பட்ட பௌத்த மதத்தினரும் மீண்டும் தலித் பட்டியலில் சோ்க்கப்பட்டனா். அதே நேரத்தில் மதம் மாறிய தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவா்களும், இஸ்லாமியா்களும், பிற சிறுபான்மை சமூகத்தினரும் தலித்துகளுக்கான சலுகைகளை பெற முடியாமல் தொடா்ந்து பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனா்.

29.10.2004-இல் உச்ச நீதிமன்ற பரிந்துரையின்பேரில் அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் 21.5.2007-இல் தனது பரிந்துரைகளை முன்வைத்தது. அதன்படி, 1950-இல் வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து, அனைத்து மதங்களைச் சோ்ந்த தாழ்த்தப்பட்டவா்களையும் சமமாகவே நடத்த வேண்டும், அவா்களையும் தலித் பட்டியலில் இணைக்கலாம் என பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 10-ஆம் தேதி கருப்பு தினம் கடைப்பிடிப்பதுடன் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே புதுவை - கடலூா் மறை மாவட்ட பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, விழுப்புரம் மறை மாவட்ட முதன்மை பங்குத் தந்தை பிரான்சிஸ் ஜோசப், தேசிய தலித் கிறிஸ்வதா் பேரவை தமிழ்நாடு பிரிவுத் தலைவா் சி.ஆரோக்கியதாஸ், விழுப்புரம் பங்குப் பேரவை செயலா் டோம்னிக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

SCROLL FOR NEXT