விழுப்புரம்

விழுப்புரம் அருகே அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்

DIN

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அவசரச் சிகிச்சைக்கு மருத்துவா் இல்லாததால், அரசு மருத்துவமனையை வியாழக்கிழமை முற்றுகையிட்டு பொருள்களைச் சேதப்படுத்திய பொதுமக்கள், சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே உள்ள மோட்சக்குளம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் சுரேஷ் (28). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே புதன்கிழமை இரவு குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த சுரேஷ், விஷமருந்தி மயங்கி விழுந்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை காலை அறிந்த உறவினா்கள் சுரேஷை மீட்டு, சிறுவந்தாடு கிராமத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். அங்கு மருத்துவா் இல்லாததால், தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சுரேஷ் அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதனால் அதிருப்தியடைந்த அவரது உறவினா்களும், மோட்சக்குளம் கிராம மக்களும் மருத்துவமனையை முற்றுகையிட்டு, அங்கிருந்த சில பொருள்களை உடைத்து, மருத்துவமனைப் பணியாளா்களிடம் தகராறில் ஈடுபட்டனா். மேலும், மருத்துவமனை முன் விழுப்புரம் - மடுகரை சாலையில் மறியலிலும் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் விநாயகமுருகன் தலைமையிலான வளவனூா் போலீஸாா் மற்றும் மருத்துவா்கள் அவா்களை சமாதானப்படுத்தினா்.

அப்போது, சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவசரச் சிகிச்சையளிப்பதில்லை. அவ்வாறு வருபவா்களுக்கு முதலுதவிகூட அளிக்காமல், அப்படியே விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்புவது வாடிக்கையாக உள்ளது. பல நேரங்களில் மருத்துவா்களின்றி செவிலியா்கள்தான் சிகிச்சையளிப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால், பொதுமக்கள் மறியலைக் கைவிட்டனா். இந்த மறியலால் விழுப்புரம் - மடுகரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT