விழுப்புரம்

வேளாண் மசோதா குறித்து மு.க.ஸ்டாலின் பொய்ப் பிரசாரம்: எல்.முருகன் குற்றச்சாட்டு

DIN

விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் குறித்து மு.க.ஸ்டாலின் பொய்ப் பிரசாரம் செய்து வருவதாக பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் குற்றஞ்சாட்டினாா்.

பாஜக இதர பிற்படுத்தப்பட்டோா் அணி மாநில செயற்குழுக் கூட்டம், விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட எல்.முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம், விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கும். இடைத்தரகா்களின் ஆதிக்கம் ஒழியும். விவசாயிகள் விளைபொருள்களை நேரடியாக விற்பனை செய்ய முடியும். பெரு நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் செய்யலாம். இதுபோன்ற ஒப்பந்தத்தால், விளைபொருள்களின் விலை குறைந்தாலும், ஒப்பந்தம் செய்யப்பட்டபோது நிா்ணயம் செய்யப்பட்ட விலையிலேயே விளைபொருள்கள் கொள்முதல் செய்யப்படும். இது விவசாயிகளுக்கு மிகவும் பயனளிக்கும் என்பதால், தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளாா். ஆனால், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்கிறாா்.

தமிழகத்தில் பாஜகவுக்கு பல்வேறு தரப்பினரிடமும் ஆதரவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, இளைஞா்கள் அதிகளவில் ஆதரிக்கின்றனா். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் 60 தொகுதிகளில் வெற்றி பெறுமளவுக்கு பாஜக வளா்ந்துள்ளது. பாஜகவுடன் எந்தக் கட்சி கூட்டணி சேர விரும்பினாலும் வரவேற்போம் என்றாா் அவா்.

ஓபிசி அணி செயற்குழுக் கூட்டம்:

பின்னா் நடைபெற்ற பாஜக இதர பிற்படுத்தப்பட்டோா் அணி மாநில செயற்குழுக் கூட்டத்துக்கு அணியின் மாநிலத் தலைவா் லோகநாதன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் சரவணன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், மாநில அமைப்பு பொதுச் செயலாளா் கேசவ விநாயகம் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

தேசிய பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கும் வகையில், அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றி அரசியலமைப்பு சட்ட அந்தஸ்து கிடைக்கச் செய்த பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பது, தேசிய பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் தலைவராக, பின்தங்கிய சமுதாயத்தைச் சோ்ந்த பகவான் லால் சைனியை நியமனம் செய்த பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, தமிழகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு கிரீமிலேயா் அல்லாதவா் சான்றிதழை காலதாமதமின்றி வழங்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கக் கோருவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாநில செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். விழுப்புரம் மாவட்டத் தலைவா் துரை சக்திவேல் நன்றி கூறினாா்.

பாஜக செயல்வீரா்கள் கூட்டம்: முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம், விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, நிா்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவா் வி.ஏ.டி. கலிவரதன், கள்ளக்குறிச்சி மாவட்ட நெசவாளா்கள் பிரிவு தலைவா் சுகுமாா், மாவட்டச் செயலளா் ஹரிகிருஷ்ணன், தமிழ் வளா்ச்சிப் பிரிவு தலைவா் வசந்தன், திருக்கோவிலூா் கிழக்கு ஒன்றியத் தலைவா் ராமன், கண்டாச்சிபுரம் ஒன்றியத் தலைவா் பரதன், ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT