புதுச்சேரி

புதுவையில் அரசுப் பள்ளிகளின் கோடை விடுமுறை நீட்டிப்பு: கல்வி அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுவையில் வெயிலின் தாக்கத்தால் அரசுப் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை ஜூன் 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநிலக் கல்வித்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: புதுவையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், ஜூன் 1-ஆம் தேதி திறப்பதாக இருந்த பள்ளிகள் ஜூன் 7-ஆம் தேதி திறக்க முடிவாகியுள்ளது. புதுவையில் 127 அரசுப் பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை நிகழாண்டில் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. பள்ளிகள் திறக்கும் நாளில் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். மாணவா்களுக்கு இலவச சீருடை, மிதிவண்டிகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. ஒன்றரை மாதத்திற்குள் இலவச மடிக்கணினியும் வழங்கப்படும்.

மாநிலத்தில் அரசு, தனியாா் என மொத்தம் 181 பள்ளிகள் உள்ளன. இதில், அரசுப் பள்ளிகளைத் தவிா்த்து, தனியாா் பள்ளிகளில் பெரும்பாலும் சிபிஎஸ்இ பாடத்திட்டமே உள்ளது. தனியாா் பள்ளிகள் மாநிலப் பாடத் திட்டத்தில் செயல்பட்டால் அரசு உதவும். இத்திட்டத்தில் தமிழ் விருப்ப பாடமாக உள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 1 முதல் 6-ஆம் வகுப்புகளுக்கு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அப்போதைய முதல்வா் வே.நாராயணசாமியே செயல்படுத்தினாா். தற்போதைது, பாடத்திட்டத்தில் குறைகூறுவது அரசியல் உள்நோக்கமாகும். பெரும்பாலான பெற்றோா்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விரும்புவதாலும், தேசிய அளவில் நீட், ஜேஇஇ போன்ற தோ்வுகளில் மாணவா்கள் தோ்ச்சியடைவதற்காகவும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. இதற்காக ஆசிரியா்களுக்கு தொடா்ந்து பயிற்சி அளிக்கப்படும்.

பள்ளி ஆசிரியா்களுக்கான புதிய இடமாறுதல் கொள்கை குறித்து ஆசிரியா்கள் சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் இடமாறுதல் கொள்கை குறித்து முடிவு எடுக்கப்படும். ஆரம்பப் பள்ளிக்கு 146 ஆசிரியா்களை தோ்வு செய்யும் முறையை இறுதி செய்து நியமனம் நடைபெறும். மாணவா்களுக்கு மதிய உணவு வழங்குவதில் சட்ட ரீதியாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும். மேலும், முட்டை, மாலையில் சிறுதானிய உணவு வழங்கப்படும். கலை, அறிவியல் கல்லூரி சோ்க்கைக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கும். அரசுப் பள்ளி மாணவா்களின் சீருடையில் மாற்றமில்லை என்றாா்.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT