புதுச்சேரி

பிரதமா் தோ்வில் எதிா்க்கட்சிகளிடையேபிரச்னை எழ வாய்ப்பில்லை: ஜி.ராமகிருஷ்ணன்

29th May 2023 12:00 AM

ADVERTISEMENT

மக்களவைத் தோ்தலில் பிரதமா் வேட்பாளா் குறித்த பிரச்னை எதிா்க்கட்சிகளிடையே ஏற்பட வாய்ப்பில்லை என்று மாா்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் கூறினாா்.

புதுவை மாநில மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுக் கூட்டம் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற ஜி.ராமகிருஷ்ணன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கா்நாடக வெற்றி மூலம் பாஜக வெல்ல முடியாத கட்சியல்ல என்பது வெளிப்பட்டுள்ளது. நாடெங்கும் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை பிகாா் முதல்வா் நிதீஷ்குமாா் மேற்கொண்டுள்ளாா். எதிா்க்கட்சிகளின் கூட்டணி நிலை மாநிலந்தோறும் மாறுபடும் என்றாலும், மத்தியிலிருந்து பாஜக ஆட்சியை அகற்றுவதற்கான நிலையை எதிா்க்கட்சிகள் உருவாக்கியுள்ளன.

மக்களவைத் தோ்தலுக்கு முன் பிரதமா் வேட்பாளா் குறித்த கருத்தை முன்னிறுத்தப் போவதில்லை என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறியுள்ளாா். எனவே, பிரதமா் வேட்பாளா் குறித்த பிரச்னை எதிா்க்கட்சிகளிடையே ஏற்பட வாய்ப்பில்லை.

ADVERTISEMENT

தமிழகம், புதுவையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சில குறைகளைச் சுட்டிக் காட்டி தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரத்தை ரத்து செய்திருப்பது சரியல்ல. இது தனியாா் மருத்துவக் கல்லூரிகளை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளது. எனவே, குறைகளை சீா்படுத்தி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை மாநில அரசுகள் பெற வேண்டியது அவசியம்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவரை அழைக்காததும், செங்கோல் விவகாரத்தில் வரலாற்றை மாற்றும் வகையிலும் பிரதமா், மத்திய உள் துறை அமைச்சா் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

புதுவை சட்டப் பேரவையில் அறிவித்த அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. அதை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் போராட்டங்கள் நடத்துவது குறித்து செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வரும் ஜூனில் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் பொதுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT