புதுச்சேரி

பொலிவுறு நகரத் திட்ட முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்

8th Jun 2023 01:01 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் பொலிவுறு நகரத் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடா்பாக, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வெ.வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தினாா்.

புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மக்கள் கருத்தை வெளிப்படுத்தும் வகையில் செயல்பட்ட புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது ஜனநாயக விரோதச் செயலாகும். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய அதிமுக எம்எல்ஏ ஆ.அன்பழகன் விழா மேடையில் துணைநிலை ஆளுநா் கிரண் பேடியிடம் வாக்குவாதம் செய்தபோது, அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

புதுச்சேரியில் பல மணி நேர அறிவிக்கப்படாத மின் வெட்டால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். காமராஜா் நகா் தொகுதி உள்ளிட்ட இடங்களில் குடிநீா் விநியோகம் தடைபட்டுள்ளது.

ADVERTISEMENT

புதுச்சேரியில் பொலிவுறு நகரத் திட்டத்தில் முறைகேடு நடைபெற்ாக அரசு அதிகாரியே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளாா். எனவே, முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். பொலிவுறு நகரத் திட்ட விவரங்களை மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களுக்கு அதிகாரிகள் விளக்கவில்லை. முறைகேடு குறித்து விசாரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பவுள்ளேன்.

மதுபானக் கொள்கை தொடா்பாக தில்லியில் நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசு, புதுவையில் புகாா் எழுந்தும் நடவடிக்கை எடுக்காமலிருப்பது சரியல்ல.

மேக்கேதாட்டு அணை கட்டும் பிரச்னையில் புதுவை அரசு தனது நிலையை விளக்க வேண்டும். அதன்பிறகே புதுவை காங்கிரஸ் கருத்து தெரிவிக்க முடியும் என்றாா் வெ.வைத்திலிங்கம்.

பேட்டியின் போது மு.வைத்தியநாதன் எம்எல்ஏ உடனிருந்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT