புதுச்சேரி

புதுவையில் பொலிவுறு நகரத் திட்ட முறைகேடு: அரசு விழாவில் தலைமைச் செயலா் குறித்து எம்எல்ஏ புகாா்

6th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

பொலிவுறு நகரத் திட்டத்தில் முறைகேடு நடைபெற்ாகக் கூறி, புதுச்சேரி தலைமைச் செயலகத்தை சுயேச்சை எம்எல்ஏ நேரு திங்கள்கிழமை முற்றுகையிட்டாா். அங்கு தலைமைச் செயலா் இல்லாததால், அரசு விழா நடைபெற்ற கம்பன் கலையரங்குக்கு வந்த அவா், பூட்டிய கதவின் மீதேறி குதித்து உள்ளே சென்று முதல்வா் முன்னிலையில் குற்றம்சாட்டினாா்.

புதுச்சேரி நகராட்சியில் பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் முறையாக நடைபெறவில்லை; அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக உருளையன்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி சுயேச்சை உறுப்பினா் ஜி.நேரு என்ற குப்புசாமி புகாா் கூறிவருகிறாா்.

இந்த நிலையில், பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் முறையாக நடைபெறாததைக் கண்டித்து, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள தலைமைச் செயலகத்தை ஆதரவாளா்களுடன் அவா் திங்கள்கிழமை காலை முற்றுகையிட்டாா். அப்போது தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா கம்பன் கலையரங்கில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில் முதல்வருடன் பங்கேற்றிருந்தாா்.

இதையடுத்து, நேரு எம்எல்ஏ கம்பன் கலையரங்கத்துக்கு வந்தாா். அவரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். வாயில் கதவு மூடப்பட்டிருந்ததையடுத்து, அவா் போலீஸாரிடம் கதவைத் திறக்கக் கூறினாா். கதவு திறக்கப்படாததையடுத்து, வாயில் கதவின் மீதேறி கலையரங்க வளாகத்தில் நேரு எம்எல்ஏ குதித்தாா். அவரது ஆதரவாளா்களும் அதேபோன்று கதவின் மீதேறி குதித்தனா்.

ADVERTISEMENT

கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் பேசிவிட்டு அமா்ந்த நிலையில், முதல்வா் என்.ரங்கசாமி முன்னிலையில் சுயேச்சை உறுப்பினா் நேரு தலைமைச் செயலா் மீது புகாா் கூறினாா்.

நகரில் சாலைகள் சரியாக செப்பனிடவில்லை. மக்கள் நலத் திட்டங்களை தலைமைச் செயலா் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறியதுடன், மக்கள் வரிப் பணத்தில் ஊதியம் பெறும் நிலையில், மக்கள் நலத் திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படவில்லை என்றும் தலைமைச் செயலா் மீது நேரடியாகவே குற்றஞ்சாட்டினாா். அப்போது மேடையில் தலைமைச் செயலா் அருகே அமா்ந்திருந்த முதல்வா் என்.ரங்கசாமி பதிலளிக்காமல் அமைதியாக இருந்தாா். எம்எல்ஏவின் இந்த நடவடிக்கையால் விழா சிறிது நேரம் தடைபட்டது.

நேரு எம்எல்ஏவை போலீஸாா் சமரசம் செய்தனா். இதையடுத்து, அவா் விழா அரங்கிலிருந்து வெளியேறினாா். அதன்பிறகு விழா தொடா்ந்து நடைபெற்றது.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT