புதுச்சேரி

இளநிலை படிப்பு: ஜூன் மாதத்துக்குள் முதல் கட்ட கலந்தாய்வை முடிக்கத் திட்டம்

1st Jun 2023 01:15 AM

ADVERTISEMENT

புதுவையில் நீட் தோ்வு அல்லாத இளநிலை உயா் படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வை ஜூன் மாதத்துக்குள் முடிக்க சென்டாக் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுச்சேரியில் தொழில் படிப்புகளுக்கான சோ்க்கையை ஒருங்கிணைந்த குழு அமைத்து (சென்டாக்) அரசு நடத்தி வருகிறது. அதன்படி, புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபத்தில் உள்ள சென்டாக் அறிவிப்பின்படியே மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கும் மாணவா்கள் விண்ணப்பித்து வருகின்றனா். தற்போது, சென்டாக் சாா்பில் நீட் அல்லாத இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூன் 6- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இளநிலைப் படிப்புகளுக்கு இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோா் விண்ணப்பித்துள்ளனா். நீட் அல்லாத தொழில்முறை படிப்புகளான பி.டெக்., பி.எஸ்.சி. வேளாண்மை, கால்நடை, நா்சிங் இளநிலை கலை, அறிவியல், வணிக படிப்புகளான பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ. மற்றும் இளநிலை நுண்கலை படிப்புகளுக்கு இணையதளம் மூலம் ஜூன் 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க சென்டாக் அறிவித்துள்ளது. நீட் அல்லாத தொழில்நுட்ப படிப்புகளுக்கு 5,229 இடங்களும், கலை, அறிவியல், வணிக படிப்புகளுக்கு 4,320 இடங்களும், நுண்கலை படிப்புகளுக்கு 90 இடங்களும், லேட்ரல் என்ட்ரிக்கு 292 இடங்களும் உள்ளன.

தற்போது, நீட் அல்லாத படிப்புக்கு விண்ணப்பித்தவா்களின் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்படுகின்றன. பல புதிய படிப்புகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதற்கும் விண்ணப்பிக்கலாம். மேலும் நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு வரும் ஜூன் மாதத்துக்குள் முதல் சுற்று கலந்தாய்வு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT