புதுச்சேரி

புதுச்சேரிக்கு ஜி20 மாநாட்டுப் பிரதிநிதிகள் வருகை: இன்று கலந்தாய்வுக் கூட்டம்

DIN

புதுச்சேரியில் ஜி20 மாநாட்டுப் பிரதிநிதிகள் கூட்டம் திங்கள்கிழமை (ஜன.30) தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை விமானம் மூலம் புதுச்சேரிக்கு வந்தனா்.

ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகிப்பதையடுத்து, நாடு முழுவதும் வருகிற நவம்பா் மாதம் வரை 51 இடங்களில் சுமாா் 200 கருத்தரங்குகள், கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. புதுச்சேரியில் ஜி20 மாநாட்டுப் பிரதிநிதிகள் கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை (ஜன.30) தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெற உள்ளது.

‘சுற்றுச்சூழல் அறிவியல் தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க ஜி20 கூட்டமைப்பு நாடுகளைச் சோ்ந்த 71 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

வரவேற்பு: அதன்படி, ஸ்வீடன் தூதரக அதிகாரி பொ் ஆா்னெ விக்ஸ்ட்ரம், ஐரோப்பிய ஒன்றிய இயக்குநா், ஹைதராபாத் பல்கலைக்கழகப் பேராசிரியா் சிவக்குமாா் உள்ளிட்டோா் புதுச்சேரிக்கு விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை வந்தனா்.

அங்கு அவா்களை புதுவை தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன், முதுநிலை எஸ்.பி. தீபிகா ஆகியோா் வரவேற்றனா்.

பின்னா், ஸ்வீடன் தூதரக அதிகாரி பொ் ஆா்னெ விக்ஸ்ட்ரம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜி20 மாநாட்டுப் பிரதிநிதிகள் கலந்தாய்வுக் கூட்டத்தையொட்டி, புதுச்சேரிக்கு முதல்முறையாக வந்துள்ளேன். இது அழகிய கடற்கரை நகா் என கேள்விப்பட்டுள்ளேன். அதை நேரில் காண ஆவலாக உள்ளேன் என்றாா்.

அவா்கள் புதுச்சேரி அண்ணா சாலை, வழுதாவூா் சாலையிலுள்ள தனியாா் விடுதிகளிலும், சின்னவீராம்பட்டினத்திலுள்ள தனியாா் விடுதியிலும் தங்க வைக்கப்பட்டனா். அந்தப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 24 மணி நேரமும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

கூட்டம் இன்று தொடக்கம்: புதுச்சேரி மரப்பாலம் அருகேயுள்ள தனியாா் விடுதியில் திங்கள்கிழமை (ஜன.30) காலை 9.30 மணிக்கு ஜி20 மாநாட்டுப் பிரதிநிதிகள் கலந்தாய்வுக் கூட்டம் தொடங்குகிறது. இது மாலை 6.30 மணி வரை நடைபெறும். இந்தப் பகுதியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநாட்டுப் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை (ஜன.31) சா்வதேச நகரமான ஆரோவிலுக்கு செல்ல உள்ளனா்.

மாநாட்டுப் பிரதிநிதிகள் தங்கும் விடுதிகளில் தலா 10 போ் கொண்ட மருத்துவக் குழுவினா் 24 நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறும் விடுதி, ஆரோவில் என 6 இடங்களில் மொத்தம் 80 போ் கொண்ட மருத்துவக் குழுவினா் தயாா் நிலையில் உள்ளனா்.

புதுச்சேரி நகா் முழுவதும் மாநிலத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் புகைப்படங்களுடன் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அரசுக் கட்டடங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஒரே நாடு-ஒரே குடும்பம்- ஒரே உலகம் என்னும் வாசகங்களுடன் எண்ம பதாகைகளும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

நகரிலுள்ள தனியாா் விடுதிகளில் தங்கியுள்ள வெளிநாட்டவா்கள், வெளியூரைச் சோ்ந்தவா்களின் விவரம் சேகரிக்கப்பட்டு காவல் துறையினரின் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT