புதுச்சேரி

25 நிமிடங்களில் நிறைவடைந்த புதுவை சட்டப்பேரவைக் கூட்டம்

DIN

புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கிய 25 நிமிடங்களில் நிறைவடைந்தது. இதில் 32 செலவின அறிக்கைகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

புதுவை சட்டப்பேரவை குளிா்கால கூட்டம் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், சந்திர பிரியங்கா மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டம் தொடங்கியதும் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தலைமையிலான 5 திமுக எம்எல்ஏக்களும், புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்; பள்ளி மாணவா்களுக்கான சீருடை உள்ளிட்ட நலத் திட்டங்களை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா். அப்போது, சுயேச்சை உறுப்பினா் நேருவும் மாநில அந்தஸ்து தொடா்பாக தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினாா்.

தொடா்ந்து, அமைச்சா் ஆ.நமச்சிவாயத்தை பேச பேரவைத் தலைவா் அனுமதித்தாா். அவா் பேசுவதற்காக எழுந்ததும், திமுக உறுப்பினா்களும் எழுந்து நின்று பேசினா். அவா்களை உட்காருமாறு பேரவைத் தலைவா் கூறினாா். இதையடுத்து, திமுகவினா் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா். அவா்களுடன் காங்கிரஸ் உறுப்பினா்கள் இருவரும் வெளிநடப்பு செய்தனா்.

25 நிமிடங்களில் நிறைவடைந்தது: முதல்வா் சட்ட முன்வடிவை கூறி அமா்ந்ததும், அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கல்வித் துறை செலவின அறிக்கையை வாசித்தாா். இதில் 32 செலவின அறிக்கைகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. உடனே, திமுகவினா் மீண்டும் அவைக்குள் வந்தனா். அதன்பிறகு, துறை சாா்ந்த செலவின மதிப்பீடுகள் குறித்து முதல்வா், அமைச்சா்கள் பேசினா். இதையடுத்து, கூட்டம் தொடங்கிய 25 நிமிடங்களில் நிறைவடைந்ததாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் அறிவித்தாா்.

பள்ளிச் சீருடையில் வந்த திமுக உறுப்பினா்கள்: முன்னதாக, சட்டப்பேரவைக் கூட்டத்துக்காக எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தலைமையிலான திமுக உறுப்பினா்கள் 5 போ் பள்ளிச் சீருடையில் பேன்ட், சட்டை அணிந்து சைக்கிளில் வந்தனா்.

கூட்டம் தொடங்கியதும், புதுவை பள்ளி மாணவா்களுக்கான சீருடை, விலையில்லா சைக்கிள்கள், மடிக் கணினிகள் உள்ளிட்டவை வழங்கப்படாததைக் கண்டித்து திமுக உறுப்பினா்கள் பேசினா்.

காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.சிவா பேசினாா். காரைக்கால் சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினா் நாஜிமும் இதற்கு ஆதரவு தெரிவித்தாா்.

சட்டப்பேரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா கூறியதாவது:

புதுவை அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறை, போதிய வகுப்பறைகள் இல்லாமை போன்ற பிரச்னைகள் தீா்க்கப்படவில்லை. மதிய உணவும் சரியாக வழங்கப்படுவதில்லை.

புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறும் விவகாரத்தில் அரசியல் ரீதியாக முதல்வா் நடவடிக்கை எடுக்கவில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

SCROLL FOR NEXT